பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகராக எழுந்து நிற்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வீதியில் நின்று எதையும் பேசலாம். பதவிக்கு வந்த பிறகும் அதற்கு உண்மையாக இருந்து சட்டங்களைச் செயல்படுத்தித் தருபவர்கள் மட்டுமே சமூகநீதிப் போராட்டத்தின் சளைக்காத போராளியாக வரலாற்றில் பதியவைக்கப்படுவார்கள். அந்த வரிசையில் 1987 ஆம் ஆண்டு சமூகநீதிப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட உயிர்த்தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள அறிவிப்பு சமூகநீதிப் போராட்டத்துக்கு தரப்பட்ட மரியாதை ஆகும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது (2019 அக்டோபர்) தி.மு.க. தலைவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்தார். அதுதான் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வடமாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 25 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்கான போராட்டம் அது. 1989 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் அவர்கள், "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வகை செய்வோம்’’ என்று வாக்குறுதி கொடுத்தார். தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் முதல்வர் ஆன 43வது நாள் இது தொடர்பாக வன்னியர் சங்க பொதுச்செயலாளர் சி.என்.ராமமூர்த்தி உள்ளிட்டோரை அழைத்துப் பேசினார்.
வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை முதல்வர் கலைஞர் கொடுத்தார். உயிர்நீத்த 25 பேர் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கினார். இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்கியவர் முதல்வர் கலைஞர். அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து அவர்களின் குடும்பத்திற்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’ அறிவித்தார். 25 பேர்கள் பேரிலும் ‘சமூகநீதித் தியாகிகள்’ என்று அரசு மதிப்பளித்து சான்றிதழும் தந்தவர் முதல்வர் கலைஞர். வன்னியர் சமூகத்து பிரமுகர்களான பு.தா.அருள்மொழி, பு.தா.இளங்கோவன், வாழை செல்வன், ராஜேந்திரன், தாராசிங் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.
இதன் தொடர்ச்சியாக வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார், சி.என்.ராமமூர்த்தி ஆகிய மூவரும் முதல்வர் கலைஞரைச் சந்தித்து, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களை அன்றைக்கு சென்னை மேயராக இருந்த தளபதியைச் சந்திக்க வைத்தார் முதல்வர் கலைஞர். சென்னை ஹால்டா சந்திப்பில் படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது. முதல்வர் கலைஞரும், சென்னை மேயரும் அந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் 2019 அக்டோபரில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்தது. அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கியமான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள்.
1. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்ட பம் அமைக்கப்படும்.
2. பேரறிஞர் அண்ணா அவர்களது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, ஏஜி என அறிஞர் அண்ணா அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும்.
3. ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்கும். என்று வாக்குறுதி அளித்தார்கள்.
மூன்றாவது வாக்குறுதியை கடந்த அ.தி.மு.க. ஆட்சி அரைகுறையாகச் செய்துவிட்டுச் சென்றது. அதனை இன்றைய தி.மு.க. அரசு தான் சரியாகச் செயல்படுத்தி உள்ளது. உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டார் முதல்வர்.
அதேபோல் ஏ.கோவிந்தசாமிக்கான மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அறிவித்துவிட்டார். ஏதோ ஒரு சில கோரிக்கைகளை மட்டுமல்ல; அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகராகப் போற்றப்படுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
அனைத்து சமூகத்தவருக்குமான இடஒதுக்கீட்டை 1921 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி. இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாகப் போராடி 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும், அண்ணாவும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகித இடஒதுக்கீட்டை 31சதவிகிதம் ஆக்கினோம். பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஆக்கினோம்.
பழங்குடியினருக்கு 1 சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு வழங்கினோம். பிற்படுத்தப்பட்டோரில் 20 சதவிகிதத்தைப் பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி ஒதுக்கீடு கொடுத்தோம். அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கினோம். இத்தகைய சமூகநீதி உரிமைகளை அகில இந்திய அளவிலும் அனைத்திந்தியப் பணிகளிலும், கல்வியிலும் கிடைக்க வழிவகை செய்தும் வருகிறோம்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மக்கள் என்றால் யார்? வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். தமிழர்களைக் காப்பாற்றும் நீதியாகத்தான் சமூகநீதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு திராவிடம் என்ன கிழித்தது என்று கேட்கும் தறுதலைகள் ‘தமிழர்கள்’ வீட்டு வாசலில் நின்று கொண்டு இதைக் கேட்கவும்!