முரசொலி தலையங்கம்

கொடநாடு விவகாரங்களைத் திசை திருப்பிவிட முடியாது: ஜெ. பேரை உச்சரிப்பதற்கு EPS-க்கு தகுதி உண்டா? - முரசொலி!

தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்காததால் ஜெயலலிதா பெயரை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு வெளிநடப்பு நாடகத்தை பழனிசாமி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

கொடநாடு விவகாரங்களைத் திசை திருப்பிவிட முடியாது: ஜெ. பேரை உச்சரிப்பதற்கு EPS-க்கு தகுதி உண்டா? - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (28-08-2021) தலையங்கம் வருமாறு:

'நீ உனது செல்லப் பிராணிக்கு பேரு வைத்தாயே, சோறு வைத்தாயா?’ என்பது பிரபலமான காமெடிகளில் ஒன்று அத்தகைய காமெடியைத்தான் ஜெயலலிதா பேரில் பல்கலைக் கழகம் தொடங்கிய அ.தி.மு.க. ஆட்சியும் செய்தது. ஆட்சி முடியப் போகும் நேரத்தில்தான் அவர்களுக்கு, ஜெயலலிதா என்ற ஒருவர் இருந்தார், அவர் பேரில் எதுவும் செய்யவில்லையே என்ற நினைவு வந்தது. போகிற போக்கில் ‘விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக் கழகம் அமையும்’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள். எதுவும் செய்யவில்லை. வெறும் அறிவிப்போடு சரி.

இதுதான் ஜெயலலிதாவுக்கு அவர்கள் காட்டிய நன்றியின் அடையாளத்தின் இலட்சணம்! பத்தாண்டு காலம் அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் இருந்தது. 2017 முதல் முதலமைச்சராக இருந்தவர் பழனிசாமி. அவருக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் பதவி ஏற்றதுமே ஜெயலலிதா பேரில் பல்கலைக் கழகம் உருவாக்கி, நான்காண்டு காலத்தில் நான்மாட மாளிகை கட்டி, அதில் இரண்டு மூன்று பட்டமளிப்பு விழாக்களையும் நடத்தி விட்டுப் போயிருக்க முடியும்.

ஆனால் பழனிசாமி விட்டது வெறும் நூல் பட்டம்! இந்த இயலாமையை மறைக்க, சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக உருகுகிறார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். வெளிநடப்புச் செய்கிறார் பழனிசாமி. ‘ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் தொடங்கினோம். அதனை காழ்ப்புணர்வு காரணமாக நீங்கள் செயல்படுத்தவில்லை’ என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சொன்னபோது, “காழ்ப்புணர்வு இருந்திருந்தால் அம்மா உணவகம் இல்லாத சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தி இருக்க முடியும். நாங்கள் காழ்ப்புணர்வோடு நடக்கவில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துவிட்டார். அதையும் மீறி கே.பி.அன்பழகன் அதையே சொல்லிக் கொண்டு இருந்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி இதைத் தொடர்ந்து கேட்ட கேள்விதான் முக்கியமானது. “நீங்கள் பெயர் மட்டும்தான் வைத்தீர்கள். நிதி ஒதுக்கவில்லை. இடமும் ஒதுக்கவில்லை. ஜெயலலிதா பெயரை நீக்க வேண்டும் என்பது எங்களது எண்ணம் இல்லை. ஜெயலலிதாவின் பெயர் மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது. இசைப் பல்கலைக் கழகத்துக்கு இருக்கிறது’’ என்று சொன்னபோது அ.தி.மு.க உறுப்பினர்களால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் வேலூரில் இருந்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்துதான் ஜெயலலிதா பேரில் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. இன்றைய தினம் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என்பதையும் அமைச்சர் க.பொன்முடி விளக்கினார். நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டினார். நாட்டு எல்லைகளைக் கடந்து கல்விப்புலத்தில் அறிமுகமான பெயர்தான் அண்ணாமலைப்பல்கலைக் கழகம். அதைத்தான் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதையும் மீறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்புச் செய்தார்கள். வெளியில் போய் பேட்டி அளித்த பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் பெயர் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்’ என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மீது இவ்வளவு பாசம் உள்ள பழனிசாமி, ஆட்சிக்கு வந்ததுமே ஏன் ஜெயலலிதா பேரில் பல்கலைக் கழகத்தைத் தொடங்கவில்லை? டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகச் சட்டமே 2021-ல் தான் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள்தான் அன்றைய கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட்டு விட்டது. இவர்களுக்கு தங்கள் ஆட்சி அடுத்த மாதத்துடன் முடியப் போவது தெரியாதா?

இன்னும் சொன்னால் பழனிசாமி சட்டமன்றத்தில் எழுப்பும் விவகாரம் என்பது நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது ஆகும். அதை இவர்கள் சட்டமன்றத்தில் எழுப்புவதேகூட தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். விழுப்புரத்தில் உள்ள கல்வி மையம் மூலம், ஏழு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டத்தை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளதாகக் கூறி, அதுதொடர்பான அரசாணையைத் தாக்கல் செய்தார். அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்து, முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் வழக்கை முடித்து வைத்தனர். இது 6.8.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகும்.

அரசுக்கு உரிமை உள்ளது என்று சொல்லி நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்கை, சட்டமன்றத்தில் எழுப்புவது சரியான நடைமுறையா? ஜெயலலிதா பேரைச் சொல்லி நடிக்கத் தொடங்கி இருக்கிறார் பழனிசாமி. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற மர்மத்தை நான்காண்டு காலம் வெளிச்சப்படுத்தாதவர் தான் இந்த பழனிசாமி. நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்காக அவர் எடுத்த முயற்சிகள் என்ன? ‘அம்மா மரணத்துக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளை’ அவர் நான்காண்டு காலத்தில் கண்டுபிடித்தாரா? இல்லை!

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும் நடந்தது. கொள்ளையும் நடந்தது. அதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பழனிசாமியின் ‘அம்மாவின் அரசு’ என்றாவது முயற்சிகள் எடுத்ததா? இல்லை. மாறாக, அந்தக் குற்றவாளிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளில் பழனிசாமியே சிக்கிக் கொண்டார். இதன்பிறகும் ஜெயலலிதா பேரை உச்சரிப்பதற்கு அவருக்குத் தகுதி உண்டா? பதவி பறிக்கப்பட்டதும் எதற்காக ஜெயலலிதாவின் அரிதாரத்தை எடுத்துப் பூசுகிறீர்கள்?

தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்காததால் ஜெயலலிதா பெயரை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு வெளிநடப்பு நாடகத்தை பழனிசாமி நடத்திக் கொண்டு இருக்கிறார். இதன்மூலமாக ‘கொடநாடு’ விவகாரங்களைத் திசை திருப்பிவிட முடியாது என்பது மட்டும்தான் உண்மை!

banner

Related Stories

Related Stories