முரசொலி தலையங்கம்

"பிரிவினையின் வலிகளைப் பற்றி நீங்கள் பேசலாமா மோடி?" - வரலாறு சிரிக்காதா?

‘பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது' என்று சொல்வதன் மூலமாக பிரிவினை எண்ணங்களை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கு மோடி அடித்தளம் அமைக்கிறார்.

"பிரிவினையின் வலிகளைப் பற்றி நீங்கள் பேசலாமா மோடி?" - வரலாறு சிரிக்காதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (18-08-2021) தலையங்கம் வருமாறு:

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, அப்பாவி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு வாகனம் கூட ஏற்பாடு செய்யாமல் பல நூறு கிலோ மீட்டர் தூரம் அவர்களை கால்கள் கொப்பளிக்க, வயிறுகள் எரிய, மூளைகள் முடங்கிப் போக நடக்க வைத்த அரசு ஒன்றிய பா.ஜ.க. அரசு!

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிதி உதவி செய்யாமல், கடன் வாங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்து கொடுத்த அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு!

மூன்று வேளாண் சட்டங்கள் என்ற பெயரால் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியதால் கடந்த நவம்பர் 26 முதல் இலட்சக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்களை ஒன்பது மாதகாலமாகப் போராட விட்ட அரசு ஒன்றிய பா.ஜ.க. அரசு!

இந்த நிகழ்கால நிதர்சனங்களை மறக்கவும், மறைக்கவும் கடந்தகாலக் கசப்புகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார் பிரதமர் மோடி. ‘பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது' என்று சொல்வதன் மூலமாக பிரிவினை எண்ணங்களை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கு மோடி அடித்தளம் அமைக்கிறார். பா.ஜ.க.வுக்குத் தலைவராக இருந்து அவர் பேசியிருந்தால் அதை உதாசீனம் செய்யலாம். பிரதமர் பதவியில் இருந்து கொண்டு அவர் இதனைப் பேசி இருப்பது அதிக ஆபத்தானது. பிரிவினைக் காலக் கசப்பை விடக் கசப்பானது.

ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினை நினைவு தினமாகச் சொல்லி இருக்கிறார் பிரதமர். இந்தியாவின் பிரிவினைக் காலம் என்பது ரத்தம்தோய்ந்ததாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனை நினைவுகூர்வதன் மூலமாக பா.ஜ.க இந்த நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறது? அதே பிரிவினை எண்ணத்தையே விதைக்க விரும்புகிறார்கள். ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்ற சிந்தனையை அதற்கு முந்தைய நாள் மட்டுப்படுத்துவதற்குத்தான் இது பயன்படும். ஆகஸ்ட் 15 என்பதன் மூலமாக காங்கிரஸ் கட்சி நினைவுகூரப்படுவதை, காங்கிரஸ் தியாகிகள் மதிக்கப்படுவதை அரசியல் ரீதியாகத் தடுக்கும் தந்திரமாகத்தான் இது சொல்லப்படுகிறது.

உண்மையில் பிரிவினைக்குக் காரணம் யார் என்பதை திறந்த மனத்தோடு பிரதமரால் பேச முடியுமா? பாகிஸ்தான் பிரிவினையை முஸ்லீம் லீக் 1940ஆம் ஆண்டுதான் கையில் எடுத்தது. அதற்கு முன்பே இந்தியாவில் இரு தேசங்கள் உண்டு என்று முதலில் சொன்னவர் சாவர்க்கர்தான். இரு தேசக் கொள்கையை முதலில் எடுத்தவர் சாவர்க்கர்தான் என்று இந்துத்துவ வரலாற்று நூல்களே சொல்கின்றன. ஹொ.வெ.சேஷாத்ரியின் ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ என்ற இந்துத்துவ சார்பாளரது புத்தகம் இதுபற்றி தனது அதிர்ச்சியைப் பதிவு செய்தது.

முற்றிலும் எதிர்பார்க்கப்படாத வட்டாரத்திலிருந்து எழுந்த தற்செயலான குரலும், முஸ்லீம் லீகுக்கு உதவியாக அமைந்துவிட்டது. 1937இல் பம்பாயில் கூப்பர் அமைச்சரவை பதவியேற்றதும் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் ஆமதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் போது சாவர்க்கர் கூறினார்: “ஒத்திசைவுடன் கூடிய ஒரே தேசம் என்று இந்தியாவை இன்று நாம் கருதிவிட முடியாது. அதற்கு மாற்றாக ஹிந்து, முஸ்லிம் என்று பிரதானமான இரு தேசங்கள் உள்ளன” என்று பேசியவர் சாவர்க்கர்தான் என்கிறது அந்த நூல்!

சாவர்க்கரின் இருதேசக் கொள்கை என்பது முகமது அலி ஜின்னாவின் கொள்கையுடன் உடன்பட்டது என்று அம்பேத்கர் எழுதுகிறார். இந்த வரலாற்றை இன்றைய பா.ஜ.க. நினைவு கூரத் தயாராக இருக்கிறதா?

சாவர்க்கரின் வார்த்தையைத்தான் ஜின்னா பிடித்துக் கொண்டார். ‘இது இரண்டு தேசங்களின் பிரச்சினையே தவிர இரண்டு வகுப்பாரின் பிரச்சினை அல்ல' என்றார் ஜின்னா. இதனை நினைவுகூரத் தயாரா?

ஜின்னாவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்கவேண்டும் என்று சொன்ன முதல் காங்கிரஸ் தலைவர் மூதறிஞர் என்று அழைக்கப்பட்ட இராஜாஜியே. காங்கிரஸ் - முஸ்லீம் லீக் மோதலைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம் லீக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளலாம் என்று 1942 ஆம் ஆண்டே சொன்னவர் இராஜாஜியே. தனது ஆதரவாளர்களை வைத்து சென்னைக் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றி, அதை அகில இந்தியக் கமிட்டிக்கு அனுப்பி வைத்தவரும் அவரே. இதனைக் காந்தி ஏற்கவில்லை. தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதனால் கோபித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர் இராஜாஜியே. பிரிவினைக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள் இராஜாஜியைப் பற்றிப் பேச மறுப்பது ஏன்? இது பற்றி இராஜாஜியின் சீடரான ம.பொ.சி.யே விரிவாக எழுதி இருக்கிறார். இராஜாஜியை நினைவுகூர வேண்டாமா?

அனைத்துக்கும் மேலாக 3000 கோடி ரூபாய் செலவில் மோடியால் சிலை வைக்கப்பட்டு இருக்கிறாரே சர்தார் வல்லபாய் படேல், அவர் என்ன செய்தார்? பிரிவினையைத் தடுத்தாரா? அடித்தளம் அமைத்தாரா? படேல் என்ன செய்தார் என்பதை மௌலானா அபுல் கலாம் ஆசாத் தனது புத்தகத்தில் கண்ணீர் வடிய எழுதி இருக்கிறார். பிரிவினையை உறுதியாக எதிர்த்தவர் ஆசாத். முஸ்லீம் லீக்கை எதிர்கொள்வதை விட பிரிவினையே சிறந்தது என்று படேல் நினைத்ததாக தனது ‘இந்தியா விடுதலை வெற்றி' என்ற நூலில் எழுதுகிறார்.

“முஸ்லீம் லீக்குடன் சேர்ந்து உழைக்க முடியாது என்ற திடநம்பிக்கை படேலுக்கு ஏற்பட்டிருந்தது. முஸ்லீம் லீக்கை விட்டுத் தொலைப்பதற்காகவேனும் இந்தியாவின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கத் தாம் தயாரென்று வெளிப்படையாகவே படேல் கூறினார்” என்று, ஆசாத் தனது நூலில் எழுதிஇருக்கிறார். படேலுக்கு 3000 கோடி ரூபாயில் சிலை வைத்து விட்டு பிரிவினைக்காக கண்ணீர் விடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

நிகழ்கால நிதர்சனங்களைப் பேசி, துயருறும் மக்களது துன்பங்களைத் துடைக்காமல், கடந்த காலக் கசப்புகளைப் பேசி இன்றைய துயரங்களை மறக்க வைப்பது பிரிவினைக் காலத் துயரங்களை விட மோசமானது.

banner

Related Stories

Related Stories