முரசொலி தலையங்கம்

எதிர்நிலைச் சக்திகளின் ஆசையில் மண்ணைப்போட்டு மூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ ‘மாண்புமிகு முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது’ என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தி.மு.க.வின் அரசியல் எதிரிகள் படித்துப் பார்க்கவில்லை போலும்.”

எதிர்நிலைச் சக்திகளின் ஆசையில் மண்ணைப்போட்டு மூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 17, 2021) தலையங்கம் வருமாறு:

ஒரு தலைசிறந்த நிதி நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய தமிழ்நாடு அரசு வெளிப்படுத்திவிட்டது.

மாநிலத்தின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற ‘வெள்ளை அறிக்கை’ வெளியானதும் சில எதிர்நிலைச் சக்திகள் அதை நினைத்து உள்ளூர மகிழ்ச்சி அடைந்தார்கள். ‘தி.மு.க வசமாக மாட்டிக்கொண்டது’ என்று நினைத்தார்கள். ஏராளமான வரிகளைப் போட்டால்தான் நிர்வாகத்தை நடத்த முடியும், அதனால் வரி போட்டு மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்கப் போகிறார்கள் என்று நினைத்தார்கள். அத்தனை பேர் ஆசையிலும் மண்ணைப்போட்டு விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வரி இல்லாத நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல. பெட்ரோலுக்கு அரசால் வசூலிக்கப்பட்டு வந்த வரியைக் குறைத்து, இது மக்களின் கண்ணீரைத் துடைக்கும் அரசு என்பதை முதலமைச்சர் நிரூபித்துவிட்டார். அதேபோல், கடந்தகால ஆட்சியைக் குறை சொல்வதோடு கடமையைத் தட்டிக் கழிக்க முதலமைச்சர் நினைக்கவில்லை. அவர்கள் நிதியைச் சூறையாடினார்கள், கடன் வாங்கிச் சுருட்டிக் கொண்டார்கள் என்பது எல்லாமே உண்மைஎன்றாலும், அதை நிவர்த்தி செய்யப்போவது எப்போது, எப்படி என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை தனது துல்லியமான நோக்கத்தால் வென்று விட்டார் முதலமைச்சர் என்றுதான் சொல்ல வேண்டும்.

நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்; திராவிட முன்னேற்றக் கழக அரசானது தலைசிறந்த நிதி நிர்வாகம் கொண்ட அரசாகச் செயல்படும் என்பதை துல்லியமாக அறிய முடிகிறது.

நிதி நிலைமையில் உண்மையான நிலைமையை இந்த அறிக்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. ஒரே நேரத்திலோ அல்லது ஒரே ஆண்டிலோ இதனைச் சீர் செய்து விட முடியாது, குறைந்தபட்சம் இரண்டு மூன்றுஆண்டுகள் ஆகும் என்பது நிதி நிர்வாகத்தின் அடிப்படைப் பாடம் ஆகும். உண்மையான கள யதார்த்தத்தை ஒப்புக் கொள்வது என்பது முதலாவது நிலை!

ஒன்றிய அரசானது ஜி.எஸ்.டி. மூலமாக ஏராளமான வரிகளைப் பெற்று தனது அரசுக்கு வைத்துக் கொள்கிறது. அந்த நிதி ஆக்கபூர்வமான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவும் இல்லை. ஒன்றிய அரசின் மூலமாக மாநிலங்களுக்கு திட்டங்கள் வருகிறதா என்றால் அதுவும் இல்லை. இந்தநிலையில் கூட்டாட்சி வரி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்கு வருவாய், வரிவிதிப்பு வல்லுநர் கொண்ட குழுவை அமைக்க அரசு முயற்சி எடுத்துவருகிறது. இது இரண்டாவது நிலை!

தொழில் செய்ய முன்வருவோருக்கு அதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட இருக்கிறது. ஒற்றைச் சாளர அமைப்பு முறையைச் செயல்படுத்த இருக்கிறது அரசு. இதுதான் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும். தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் 14 ஆவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. அதனை மூன்று இடங்களுக்குள் கொண்டு வருவதற்கான திட்டமிடுதல் என்பது மூன்றாவது நிலை!

சிறுகுறு நிறுவனங்கள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன. அந்த சிக்கலை அவிழ்ப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரத்தேவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுகுறு நிறுவனங்களைக் காப்பாற்றுவதன் மூலமாக கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியும் என்பது நான்காவது நிலை!

எல்லாவற்றுக்கும் நிதித்துறையின் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்க சில வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில செலவினங்களுக்கு அந்தந்தத் துறையே ஒப்புதல் வழங்கலாம். இதன் மூலம் முடிவுகளை விரைந்து எடுக்க வழி ஏற்படும் என்பது ஐந்தாவது நிலை!

கடந்த ஆட்சியில் தரப்பட்ட தவறான புள்ளிவிபரங்களைச் சரி செய்தது ஆறாவது நிலை!

கடந்த ஆட்சியில் கடைசி நேரத்தில் நிதிச்சுருட்டல் உள்நோக்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதாகச் சொல்வது ஏழாவது நிலை!

வரையறுக்கப்பட்ட கடனுக்குள் கட்டுப்பட்டு நிற்பது எட்டாவது நிலை!

‘கோவிட்’ காலச் சூழலானது, தமிழகத்தின் நிதி நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கிவிட்டது. அந்த நோயின் தாக்கம் குறைந்ததும் தமிழ்நாட்டின் கடன் சுமை தாமதமின்றி சரி செய்யப்பட முக்கியச் சீர்திருத்தங்களைச் செய்வோம் எனச் சொல்லி இருப்பது ஒன்பதாவது நிலை!

வரி நிர்வாகத்தை மேம்படுத்துவோம் என்பது பத்தாவது நிலை!

- இவை அனைத்தும் செய்யப்படும் போது தமிழ்நாட்டின் நிதிநிலைமை மீண்டும் உச்சத்தைத் தொடும். இதனால்தான் தலைசிறந்த நிதி நிர்வாகம் என்று முதலமைச்சரின் செயல்பாட்டைப் பாராட்டுகிறோம்!

இவை அனைத்தும் உருவாகும் வரை மக்களை நோக்கி கைவிரிக்க முதலமைச்சர் விரும்பவில்லை. அவர்களுக்கான திட்டப் பணிகள் தொடரவே போகின்றன. இந்தச் சூழலிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஆயிரம் ரூபாய்க்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

தி.மு.க கொடுத்த எந்த வாக்குறுதியிலிருந்தும் பின்வாங்கவில்லை. அனைத்தையும் நிறைவேற்றியே காட்டுவோம் என்ற வாக்குறுதியையும் வலியுறுத்தி இருக்கிறது. ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்தார்கள். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது’ என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தி.மு.க.வின் அரசியல் எதிரிகள் படித்துப் பார்க்கவில்லை போலும்.

தி.மு.க. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கைகழுவப் பார்க்கிறது என்றும் திரும்பத் திரும்பப் பொய் சொல்பவர்கள் நாட்டின் இன்றைய நிதி நிலைமையை எண்ணிப் பார்த்து, அதற்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளைச் சொன்னால் அதனை வரவேற்கலாம். மாறாக விதண்டாவாதம் பேசுவார்கள். அதனால்தான் அவர்கள் மக்கள் மன்றத்தால் உதவாக்கரைகள் என நிராகரிக்கப்பட்டார்கள்!

banner

Related Stories

Related Stories