மருத்துவ இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமை கிடைத்திருப்பதை தி.மு.க. சொந்தம் கொண்டாட முடியாது என்று சில அரைகுறைகள் சொல்லத் தொடங்கியுள்ளன. இருக்கும் மூளையில் 27 சதவிகிதம் செயல்பட்டால் கூட ஒப்புக் கொள்ளும் உண்மை, இவர்களுக்கு உரைக்கவில்லை என்றால் அது கூட இல்லை என்றுதானே பொருள்!
"திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என்று தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் சொன்னதைக் கேட்டு சிலருக்கு அடிவயிறு எரிகிறது. இதற்கு இரண்டு காரணங்கள், இவர்கள் சொல்வது எல்லாம் நடக்கிறதே என்பது ஒன்று. இந்த நாடு சமூக நீதி நாடாக மாறிக் கொண்டு இருக்கிறதே என்ற வயிற்றெரிச்சல் இரண்டாவது.
சமூக நீதிக்கான குரல் எழுப்பும் போதெல்லாம் வாய் மூடி மவுனியாக இருப்பது அல்லது அதற்கு மறைமுக எதிர்ப்பைத் தெரிவிப்பது. அடுத்தவரை வைத்து கட்டையைப் போட வைப்பது. ‘வேறு வழியில்லாமல்' அல்லது ‘கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட பிறகு', எங்களால்தான் அது கிடைத்தது என்று சொந்தம் கொண்டாடுவது பா.ஜ.க.வின் பம்மாத்துகளில் ஒன்று. அதனைத்தான் 27 சதவிகிதத்திலும் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் - ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடமும் - பிரதமரிடமும் தொடர்ந்து வலியுறுத்தியும் - போராடியும் வந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 27.7.2020 அன்று அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது. இதனைத்தான் இப்போது பா.ஜ.க. அரசு அமல்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு வந்தது.
இது குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்:
மே 28, 2020 : மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில் 27 சதவிகிதம் OBC இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம்.
மே 31, 2020 : அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தியது தி.மு.க.
ஜூலை 27, 2020 : தி.மு.க. தொடர்ந்த வழக்கில், இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பெறும் உரிமை உள்ளது என்று தீர்ப்பு வந்தது.
ஜூலை 28, 2020 : 27 சதவிகிதம் OBC இட ஒதுக்கீட்டை வழங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, சோனியா காந்தி, சரத் பவார், மம்தா, ஜெகன் மோகன் ரெட்டி, சந்திர சேகரராவ், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், மாயாவதி, உமர் அப்துல்லா போன்ற பல்வேறு இந்தியத் தலைவர்களுடன் தொலைபேசியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்; கடிதம் எழுதுகிறார்.
ஜூலை 29, 2020 : 27 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தி.மு.க. தலைவர் கடிதம் எழுதுகிறார்.
ஆகஸ்ட் 3, 2020 : 27 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒன்றிய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
அக்டோபர், 26, 2020 : மருத்துவப் படிப்புகளுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
அக்டோபர், 26, 2020 : உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த ஒன்றிய பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார்.
நவம்பர் 28, 2020 : நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாததால் அது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தி.மு.க. தாக்கல் செய்கிறது.
மார்ச் 2, 2021 : தி.மு.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒன்றிய அரசுக்கு மனு தரப்பட்டது.
ஜூலை 27, 2021 : தி.மு.க. தொடர்ந்த வழக்கில் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க நீதிமன்றம் உத்தரவு.
ஜூலை 29, 2021 : தி.மு.க. தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்கிறது. இதுதான் 27 சதவிகிதத்தின் வரலாறு.
அதாவது பா.ஜ.க. அரசு தானாகச் செய்யவில்லை. தி.மு.க.வின் நீதிமன்ற முயற்சிகளின் காரணமாகச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஒன்றிய அரசு தள்ளப்பட்டது. அதுதான் உண்மை. இதில் மோடிக்கு நன்றி சொல்வதும், பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்வதும் அவர்களது பழகிப்போன பழைய பம்மாத்து. இந்த சந்தடி சாக்கில் அ.தி.மு.கவின் சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பழனிசாமியும், பன்னீர் செல்வமும் சொல்வது பெரிய காமெடி.
கடைக்காரரிடம் 100 ரூபாய் கொடுத்ததாகப் பொய் சொல்லி சண்டை போட்டுக் கொண்டு இருந்தானாம் ஒருவன். இவர்களைச் சமாதானம் செய்ய வந்தவன், ‘உங்க சண்டையில நான் கொடுத்த 100 ரூபாயை மறந்திடாதீங்க' என்று பெரிய பொய்யைப் போட்டானாம். அதைப் போல இருக்கிறது அ.தி.மு.க.வின் சமூகநீதி. அதற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? கிலோ என்ன விலை என்று கேட்கும் வகையறாக்கள் இவை!
"சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், அதற்காக தி.மு.கழகம் எடுத்த முயற்சிகளும்தான் இதற்குக் காரணம்'' என்று ‘தி இந்து' ஆங்கில நாளிதழ் எழுதிய தலையங்கம், இந்த விவகாரத்தின் மிக முக்கிய கல்வெட்டாகும்! அரைகுறைகள் இதனை முழுமையாக வாசிக்கவும்!