தமிழ்நாடு எந்தத் திசையில் செல்ல வேண்டும், செல்லப் போகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொள்கைப் பிரகடனம் தெளிவாக்கிவிட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் ‘திராவிட மாடல்' தான் சரியானது என்பதை அவர் சொல்லி இருக்கிறார்.
ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். அதில் தனது பாணி எது என்பதை முதலமைச்சர் அறிவித்துவிட்டார். அதுதான் ‘திராவிட மாடல்' ஆகும். ‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் அதன் உள்ளடக்கம். அனைவரையும் அடக்கிய வளர்ச்சி என்பதுதான் அதன் விரிவாக்கம்.
பள்ளிக் கூடங்களுக்குள் வரக்கூடாது, படிக்கக் கூடாது, உடல் உழைப்புத் தொழில் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது, உயரிய ஆடைகள் உடுத்தக் கூடாது, கோவில்களுக்குள் நுழையக் கூடாது, பார்க்கக் கூடாது, எதிரே வரக்கூடாது - என்றெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்ட இனமாக தமிழினத்தின் பெரும்பாலான இனம் இருந்தது.
அதனைச் சமப்படுத்துவதற்கு கடந்த இருநூறு ஆண்டுகளில் எத்தனையோ சீர்திருத்தச் செம்மல்கள் உதித்தார்கள். அதனை இயக்கமாக எழுச்சி பெற வைத்தவர்கள் என்று சொன்னால் பண்டித அயோத்திதாசரும், தந்தை பெரியாரும்! இந்தச் சீர்திருத்தங்களுக்கு அரசியல் வடிவம் கொடுத்து அரசு வடிவம் கொடுத்த இயக்கம்தான் நீதிக்கட்சி. ஒடுக்கப்பட்டோருக்கான ஒளிவிளக்காக நீதிக்கட்சி ஆட்சி திகழ்ந்தது. அதன் அடித்தளத்தில் உருவான திராவிட முன்னேற்றக் கழகமும் அதே எண்ணத்தோடு செயலூக்கத்தோடு செயலாற்றி வருகிறது. அந்தச் செயலூக்கத்தை ஒற்றைச் சொல்லால் சொல்ல வேண்டுமானால், அதுதான், ‘திராவிட மாடல்'!
அந்த மாடலுக்குள் உலகளாவிய சிந்தனையை உள்ளடக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்பினார். அதற்காக ஐவர் குழுவை நியமித்தார். பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர்! எஸ்தர் டஃப்லோ அவர்கள் - உலகத்தின் உயரிய நோபல் பரிசு பெற்றவர்!
அரவிந்த் சுப்பிரமணியம் அவர்கள் - ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர்! ஜான் ட்ரீஸ் அவர்கள் - பொருளாதார நிபுணர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதியவர்!
எஸ்.நாராயணன் அவர்கள் - ஒன்றிய நிதிச் செயலாளராக இருந்தவர். இத்தகைய அறிஞர்கள் இணைந்து ‘திராவிட மாடலுக்கு' வலுச்சேர்க்க இருக்கிறார்கள். இவர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் கடந்த 9ஆம் தேதி நடந்துள்ளது. ‘சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டும்' என்று எஸ்தர் டஃப்லோ சொல்லி இருக்கிறார்.
‘சிறுகுறு தொழில்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்' என்று ரகுராம் ராஜன் சொல்லி இருக்கிறார். ‘வேலை வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தித் தரும் வகையில் பொருளாதார வளர்ச்சியானது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்.
‘ஏழை எளியோருக்கான சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் அதிகம் வேண்டும்' என்றார் பேராசிரியர் ஜான் ட்ரீஸ். ‘வரியைச் சீர்செய்து வரி வருவாய் பெருக்கப்பட வேண்டும்' என்று சொன்னார் எஸ்.நாராயணன். ‘திராவிட மாடலு'க்குள் இருக்கும் கருத்துருக்களுக்கு அவர்கள் ஐவரும் வலுச் சேர்த்துள்ளார்கள். நீதிக்கட்சி - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனையோட்டத்தால் உருவாக்கப்பட்ட திராவிட ஆட்சியியல் இலக்கணத்தை வகுத்து அவர்களிடம் பேசியுள்ளார் முதலமைச்சர்.
“திராவிட மாடல் என்பது, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி! - அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி! - அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி! - இதுதான் திராவிட மாடல் என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும்.
தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” - என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இதுதான் திராவிட அரசியல். இதுதான் திராவிட ஆட்சியியல்! இந்த திராவிட அரசியலும் ஆட்சியியலும் இணைந்து செல்லும் வரை, தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தமிழினத்தின் மேம்பாட்டை யாராலும் குலைக்க முடியாது. இந்த வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்கள்தான், பல்வேறு அவதாரங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எடுத்து வருகிறார்கள். அனைத்தையும் செறித்து, வளரும் வல்லமை திராவிட அரசியலுக்கும் ஆட்சியியலுக்கும் உண்டு!