இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள். நம்மையெல்லாம் அவர் வாழ்த்துகின்ற நாள். அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவரின் வாழ்த்துகள் நமக்கு எப்போதும் உண்டு. அவர் இருந்திருந்தால் நம் ஆட்சியைக் கண்டு மகிழ்ந்திருப்பார். நமது முதல்வர் ஆற்றும் பணிகளைக் கண்டு பாராட்டி உச்சிமோந்து முத்தமிட்டிருப்பார். அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கொரோனா வார்டுக்குச் சென்று கவச உடையில் ஆய்வு செய்து இருக்கிறார்.
கொரோனா நோயாளிகளோடு பேசி இருக்கிறார். அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார் எனும் செய்திகள் படத்தோடு எல்லா நாளேடுகளிலும் வெளியாகி இருக்கின்றன. திட்டமிட்டு, கொரோனா கவச ஆடையை அணிந்து நோயாளிகளைப் பார்க்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு அவர் செல்லவில்லை. திருப்பூரில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட அவர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது அவர் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டு வரும்போது கொரோனா நோயாளிகளையும் சந்திக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அதிகாரிகள் தயங்கினர்; ஏனெனில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்க வேண்டும் என்றால் முழுக் கவச ஆடை (பி.பி.இ. கிட்) அணிந்து மட்டுமே செல்ல வேண்டும். இதில் முதல்வர் உறுதியாக இருந்ததை அதிகாரிகள் புரிந்து கொண்டனர். அவருக்கு உடனடியாக கவச உடை வழங்கப்பட்டது. பின்னர் முதல்வர் மருத்துவமனையிலுள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது முதல்வருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத், ஆட்சியர் நாகராஜன், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் தலைவர் ரவீந்திரன் ஆகியோரும் முழுக் கவச உடையுடன் உடன் சென்றனர். அங்கே நோயாளிகளுடன் அவர் சந்தித்து உரையாடியபோதும், ஆறுதல் கூறியபோதும் அந்நிகழ்ச்சி நெகிழ்ச்சிக்கு உரியதாக இருந்தது. தொலைக்காட்சிகளிலும், ஏடுகளிலும் இச்செய்தியைக் கண்ணுற்ற மக்கள், ஸ்டாலின் அவர்கள் மக்கள்பால் காட்டும் நெருக்கத்தை அறிந்து பெரிதும் நெகிழ்ந்து போயினர். இந்நிகழ்வு சம்பந்தமாக முதல்வர் அவர்கள் தமது டுவிட்டரில் விளக்கத்தை பின்வருமாறு அளித்திருக்கிறார்.
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும், ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும். கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப்போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இந்தப் பெருந்தொற்றை நாம் வெல்வோம்.”
முதல்வர் அவர்கள் கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - எனும் விளக்கத்தை அவர் வழங்கியுள்ளதைப் படித்துப் பார்க்கும் எவரும், அவருக்கு இருக்கிற மனிதநேய உளப்பாங்கை நிச்சயமாக உணர்வர். இதனைவிட அவர் துணிவோடு ஆற்றும் வினை, அனைவராலும் போற்றப்படக் கூடிய ஒன்றாகும். எதிரிகள்கூட இதனை விமர்சிக்க முடியாது. இந்தத் துணிவு இவருக்கு - முதல்வருக்கு கலைஞரிடமிருந்து வரப்பெற்ற மரபுவழித் துணிவாகும். கலைஞர் ஆட்சிக் காலத்திலும் சரி, அவரது கட்சி நடவடிக்கைகளிலும் சரி, எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய காலத்திலும் சரி, தம் உயிரைப் பணயம் வைத்து வெற்றி பெற்ற நிகழ்வுகள் பல உண்டு.
அதைப்போல முதல்வர் அவர்கள் தம் உயிரை விட மனிதநேயம் மற்றும் முன்களப் பணியாளர்களின் பங்கேற்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊக்கப்படுத்த அவரும் ஒரு முன்களப் பணியாளராகவே பணியாற்றி இருக்கிறார். இப்படி இந்தியாவில் எந்த முதல்வரும் கொரோனா நோயாளியைச் சந்தித்து உரையாடியது இல்லை. முதல் முறையாக இச்செயலினை நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் செய்து காட்டி இருக்கிறார். இந்த அவரின் துணிச்சல் மிக்கச் செயல், இந்தியாவில் முதல் இடத்தையும், உலகில் 4ஆம் இடத்தையும் பெற்று இருக்கிறது. அவரை நாம் போற்றுவோம்.
கலைஞர் அவர்கள் இருந்திருந்தால் முதல்வரின் இப்பணியினைப் பாராட்டி உடன்பிறப்புக்கு மடல் எழுதியிருப்பார். இல்லை என்றால் சிறந்த கவிதை ஒன்றை யாத்திருப்பார். ஆனால் அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், முத்தமிழ்அறிஞரே, கலைஞரே எங்களை வாழ்த்துங்கள் என்று அவரது பிறந்த நாளின்போது அவரை இறைஞ்சிக் கேட்கின்ற உரிமை நமக்கு உண்டு. ஆகவே, எங்கள் செயல்கள் தொடர, கலைஞரே! எங்களை வாழ்த்துங்கள் என்று கேட்கின்றோம்.