கொரோனா தடுப்புப் பணி என்பது அரசு மட்டும் செய்யும் காரியம் அல்ல. மக்களின் ஒத்துழைப்பு முழு அவசியம். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும் அதைக் கடைப்பிடிக்காமல் வெளியில் அவசியமற்றுச் செல்லும் மக்களை என்ன என்று சொல்வது? உயிர்காக்கும் விஷயத்தில் இத்தகைய அலட்சியம் இருக்கலாமா?கொரோனா பரவாமல் தடுத்தல் - தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டல் - ஆகிய இரண்டு இலக்குகளோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
தமிழக எல்லையை மட்டுமல்ல; இந்திய எல்லையையும் தாண்டி உலகம் முழுவதும் இருக்கிற அனைத்து வசதி வாய்ப்புகளையும் தமிழகத்துக்கு எடுத்து வந்து கொரோனா தொற்றைத் தடுக்க அவர் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய சூழலில் தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும். நேற்றைய தினம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியானால் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது என்று பொருள்.
இதனை மக்கள் உணர்ந்தாக வேண்டும். அதேபோல் தமிழக காவல்துறை தலைவரும் எச்சரிக்கை செய்துள்ளார். தேவை இன்றி ஊர் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கையும் எச்சரிக்கையும் ஏதோ மிரட்டல் அல்ல. உயிர் காக்க இத்தகைய நடவடிக்கைகள் தேவையாகும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதை மக்கள் உணர்ந்தாக வேண்டும். கொரோனா குறித்த பயம் தேவையில்லை. அதே நேரத்தில் அலட்சியம் கூடவே கூடாது. அடுத்தவரை பயமுறுத்துவதற்கு கொரோனா குறித்த பாடங்களை பலரும் எடுக்கிறார்கள்.
ஆனால் இப்படி பாடம் எடுப்பவர்கள் பயப்படுகிறார்களா என்றால் இல்லை. அறிவுரைகள் எல்லாம் அடுத்தவருக்கு என்று ஆகிவிடக்கூடாது. முதல்வர் அவர்கள் சொன்னதைப்போல இது கடந்துவிடக் கூடியகாலம்தான். அப்படி கடந்து செல்வதற்கான முறையான திட்டமிடுதல்கள் வேண்டும். அந்த திட்டமிடுதல்கள் மருத்துவ ரீதியாகவும் இருக்கவேண்டும். நமது எண்ணங்களாகவும் இருக்க வேண்டும்! மருத்துவ ரீதியாகத் திட்டமிடுதல்கள் குறித்து மருத்துவர் ஜி.ராமானுஜம் அவர்கள் தெளிவான சில வரையறைகளைச் சொல்லி இருக்கிறார்.
பெரும்பாலும் காய்ச்சல், உடல்வலி ஆரம்பித்து 7, 10 நாட்கள் கழித்து சிகிச்சைக்கு வருவார்கள். அப்போது நுரையீரலில் நிரந்தர பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். சிகிச்சை அளித்தாலும் பலன் இருக்காது.
லேசாக காய்ச்சல், இருமல், உடல்வலி வந்த உடனேயே RT PCR _Swab ஸ்வாப் கொரோனா பரிசோதனை- செய்ய வேண்டும். இதுதொண்டை, மூக்கில் கொரோனா கிருமி இருக்கிறதா எனப் பார்ப்பது. இதில் பாசிட்டிவ் என வந்தால் கொரோனா கிருமி நம் சுவாசப்பாதையில் குடியிருக்கிறது என அர்த்தம்.
இதுபோக LDH, pro calcitonin, Ferritin, போன்ற சில சோதனைகளும் நோய்த்தொற்றின் தீவிரத்தை அறிய உதவும்.
இதுபோல் பொதுவாக உடல் நிலையை அறிய Sugar, Liver function tests, Urea, Creatinine, Electrolytes போன்ற சோதனைகளும் அடிக்கடி செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட ரத்தப் பரிசோதனைகளை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை நோயின் தீவிரத்தைப் பொறுத்து எடுப்பார்கள்.
கட்டாயம் முதல் நாளும், பின் 5-6 ஆம் நாள்கள் இன்னொரு முறையும் எடுக்க வேண்டும்.
நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆக்ஸிஜன் அளவை விரல்களில் pulse oximeter வைத்துப் பார்க்க வேண்டும்.
CT ஸ்கேன். மிக அவசியம். இதுதான் நோயின் தீவிரத்தைக் கணிக்க உதவும். 7 ஆவது நாள் அல்லது தீவிர நோய் இருப்பவர்களுக்கு அதன் முன்னரே எடுக்க வேண்டும்.
CT ஸ்கேனில் 25% பாதிப்பு இருந்தால் உடனே ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் போன்ற சிகிச்சைகள் அவசியம்.
ஆக்ஸிஜன் அளவு 94 வந்தாலோ, CT ஸ்கேனில் 25% பாதிப்பு இருந்தாலோ, ரத்தப் பரிசோதனைகளில் CRP, Ddimer கூடுதலாக இருந்தாலோ மருத்துவ சிகிச்சை அவசியம்.
லேசான அறிகுறிகள் இருந்தாலே அலட்சியப்படுத்த வேண்டாம் -என்று சொல்கிறார் மருத்துவர். இந்த லேசான அறிகுறிகள் இருந்தாலே மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அவரது ஆலோசனைப்படி மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
வைரஸ் என்பது ஒரே மாதிரியாக இல்லை. அது உடலின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது. உடலைப் பொறுத்ததாகவே பாதிப்பின் அளவும் இருக்கிறது. ஆரம்பத்தில் கவனிக்காமல் இருப்பதும் அலட்சியம்தான்.
அவசியமற்ற வெளிப்பயணம் தவிர்த்தலும் - லேசான அறிகுறி ஏற்பட்டதும் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதும் நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள். வைரஸ், அது தானாக பரவுவது இல்லை. மனிதர்களே அதனைப் பரப்புகிறார்கள். மனிதர்கள் முதலில் கட்டுப்படுவோம். பின்னர் வைரஸ், தானாகக் கட்டுப்படும்!