நன்றி தமிழ்நாடே! உனக்கு நன்றி! திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே தமிழகத்தை காக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கழகத்துக்கும் கழகக் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நன்றி!
இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலமாக தமிழகம் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. பத்தாண்டு காலம் பாழ்பட்டுக்கிடந்தது தமிழகம். நிர்வாகத்தால் நிர்மூலம் ஆகியும், ஊழலால் உளன்றும், புதிய திட்ட மிடுதல்கள் இல்லாமலும், இருந்த பழைய நிறுவனங்களைச் சிதைத்தும் - ஒட்டுமொத்தமாக ஒருமுகப்படுத்தப்பட்ட சீரழிவாக தமிழகத்தின் ஆட்சி சீர்குலைந்த நிலையில் தான் 2021 ஆட்சி மாற்றம் என்பது, அதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக வந்து வாய்ந்தது.
இந்த தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தைத் தெளிவுபடுத்தினார்கள். இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமான தேர்தல் அல்ல, நமது சுயமரியாதையை மீட்பதற்கான தேர்தல் என்று சொன்னார்கள். நமது சுயமரியாதையை மீட்பது என்றால், அது எங்கோ அடமானம் வைக்கப்பட்டுவிட்டது என்பது பொருள்! ஆமாம்! அடமானம் வைக்கப்பட்டுவிட்டது தமிழகத்தின் சுயமரியாதை.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பண்பாட்டு வரலாறு உண்டு. ஒரு வீரவரலாறு உண்டு. சமூக நீதி வரலாறு உண்டு. வட இந்தியாவை மிகப்பெரிய சாம்ராஜ்யங்கள் ஆண்ட போதும் தமிழகம் தமிழ் மன்னர்களின் ஆளுகையில்தான் இருந்தது. தமிழ் மன்னர்கள், இந்த நிலத்துக்காக பண்பாட்டை, வரலாற்றை காத்து நின்றார்கள். இடையில் நிகழ்ந்த பண்பாட்டுபடையெடுப்புகளும் - அரசியல் படையெடுப்புகளும் சேர்ந்து தமிழ் நிலத்தின்குணத்தை நிறத்தை சிதைக்க நினைத்தது.
அதுபோன்ற ஒரு காலத்தை உருவாக்க சில மதவாத சக்திகள் முயற்சித்த வேளையில்தான் அதனை உறுதியாகத் தடுக்கும் திராவிடக் காவல் அரணாக திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எழுந்து நிற்கிறார். பேரறிஞர் அண்ணா வடித்துக் கொடுத்த இன மொழி உணர்வைக் காப்பதும் - முத்தமிழறிஞர் கலைஞர் வடித்துக் கொடுத்த மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி - ஆகியவற்றை உருவாக்குவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத இலக்குகளாக என்றும் இருப்பவை.
இவற்றை மையமாக வைத்து தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பகையை எதிர்கொள்ள இந்தத் தேர்தலை தி.மு.க தலைவர் பயன்படுத்திக் கொண்டார். அதனைத்தான் ஒற்றைச் சொற்றொடராக ‘நமது சுயமரியாதையை மீட்கும் தேர்தல்' என்று சொன்னார்.‘தமிழில் உள்ள எல்லா சொற்களையும் ஆராய்ந்து பார்த்தேன்.சுயமரியாதைக்கு இணையான ஒரு சொல் இல்லை' என்றார் தந்தை பெரியார்.
அந்த சுயமரியாதை என்ற சொல்லையே தலைவரும் இந்த தேர்தலில் முன்மொழிந்தார். அந்த சுயமரியாதை உணர்ச்சியை உணர்ந்து தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள். இன்றில்லாவிட்டால் என்றும் முடியாது, இவரை விட்டால் இனி வேறு ஒருவரால் முடியாது என்ற ஆற்றலாளராக தமிழகத்துக்குக் கிடைத்த தன்னிகரில்லாத் தலைவர்தான் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெரியாரின் கொள்கைகளுக்கு ஒரு அண்ணா - அண்ணாவின் கொள்கைகளைச் செயல்படுத்த ஒரு கலைஞர் - கலைஞரின் குறிக்கோளை வென்றெடுக்க ஒரு மு.க.ஸ்டாலின்!
நம் இயக்கத்துக்கு கிடைத்த தலைவர்கள் வெறும் கட்சித் தலைவர்களாக மட்டும் இருந்தது இல்லை. கொள்கைத் தலைவர்களாக இருந்துள்ளார்கள்.அதனால்தான் அவர்களுக்குப் பிறகும் அந்த இயக்கங்கள் வாழ்கிறது. வளம்சேர்க்கிறது. அந்த வகையில் இன்றைய நிகழ்காலத்தின் நவீன நிதர்சனமாக தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் தனது செயலால் மக்களை வெல்ல நினைக்கிறார். அந்த செயல் ஆர்ப்பாட்டம் இல்லாததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
தாய்ப்பாலைப் போல தூய்மையானதாகவும், மழையைப் போல அனைவருக்கானதாகவும், மலையைப் போல உறுதியானதாகவும் குழந்தையின் மனதைப் போல இளகியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அபலைகளுக்கு ஆதரவாகவும் - அனைவர்க்கும் பொதுவானவராகவும் இருக்க நினைக்கிறார். மக்களுக்கான அன்றாடப் பிரச்சினை முதல் மாநிலத்தின் சுயாட்சி வரைக்கும் அனைத்தையும் கவனிக்கக் கூடியவராக இருக்கிறார்.
கொரோனா காலத்தில் ஊரடங்கு போட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவருக்கு மாதம் தோறும் பணம் தர வேண்டும் என்ற நினைப்பும் அவருக்கு இருக்கிறது. மாநில அரசின் நிதி வருவாயை மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலமாக பறிக்க நினைப்பதை தடுக்கும் கூட்டாட்சி சிந்தனையும் அவருக்கு இருக்கிறது. இப்படி எல்லாரையும் நேசிக்கும் யோசிக்கும் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தமிழகத்தை ஒப்படைத்த தமிழ்நாடே! உனக்கு நன்றி!“
கழகம், வென்றது! - அதை தமிழகம் இன்று சொன்னது! இனி தமிழகம் வெல்லும்! - அதை நாளைய தமிழகம் சொல்லும்!” என்று இன்றைய தலைவர் - நாளைய முதல்வர் சொல்லி இருக்கிறார். இந்த நம்பிக்கை மனிதருக்கு மகுடம் சூட்டிய தமிழ்நாடே! உனக்கு நன்றி