கொரோனாவுக்குத் தடுப்பூசிகள் போடப்படுவதைப் போல சில மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று ‘ரெம்டெசிவிர்’என்னும் மருந்து. டாக்டர்கள் கொரோனாவுக்கு இந்த மருந்தை மிக அதிகமாகப் பரிந்துரைப்பதால் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த ஏப்ரல்30ஆம் தேதி நாளேடுகளில், ‘ரெம்டெசிவிர் மருந்து வாங்க 4-ஆவது நாளாகக் குவிந்த பொது மக்கள்’ எனும் செய்தி இடம் பெற்றது. கொரோனா ஒரு பக்கம் உச்சத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் வேறு ஏற்பட்டு இருக்கின்றன. முதல் ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது ஊசி போடுவதற்கு இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மே 1 ஆம் தேதி 18 வயதினருக்குப் போடப்படும் ஊசிகளும் இருப்பு இல்லாததினால் மீண்டும் ஊசி போடப்படும் நாள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி நிலைமைகள் இருக்கிறபோது - இடையே ‘ரெம்டெசிவிர்’ பற்றாக்குறை பிரச்சினை தோன்றி இருக்கிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. அப்படியும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.
கவுண்டர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகின்றன. இருப்பினும் பலர் அந்த மருந்தை வாங்க முடியவில்லை. பெற முடியாதவர்களுக்கு மறு நாளுக்கான டோக்கன் வழங்கப்படுகின்றன. இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. பொது மக்கள் அதிகாரிகளோடு சண்டை போடுகிறார்கள். இதற்குக் காரணம் வெளி மாவட்ட மக்கள் இங்கே குவிகிறார்கள். வெளி மாவட்டங்களிலும்‘ரெம்டெசிவிர்’ விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இப்படி கூட்டம் சேர்ப்பதற்குக் காரணம் என்ன? - என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். வரும் செய்திகளை எல்லாம் வைத்துப் பார்க்கிறபோது ‘ரெம்டெசிவிர்’பற்றாக்குறை உருவாக்கப்படுகிறது என்றே தெரிகிறது. ஏனென்றால் இம்மருந்தின் தேவையைப் பற்றி சில டாக்டர்களின் பரிந்துரைகள் அதிகமாவதால் மருந்தின் தேவையும் கூடுதலாகத் தேவையாகிறது. முக்கிய டாக்டர்கள் தொலைக்காட்சிப் பேட்டியின்போது, ‘ரெம்டெசிவிர்’ உயிர் காக்கும் மருந்தில்லை. கொரோனாவின் ஆரம்ப நிலைக்குத் தேவைப்படும் மருந்தே தவிர, மற்றபடி இதன் தேவை உயிர்காக்கும் அளவுக்கு இல்லை.
இதனால் மருத்துவர்கள் இம் மருந்தைப் பரிந்துரைக்க வேண்டியதில்லை என்று தெளிவாக எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பரிந்துரைகள் குறையவில்லை. இன்னும் சொல்வதானால் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், ‘ரெம்டெசிவிர்’ மேஜிக் மருந்தில்லை. தமிழகத்தில் மட்டுமே‘ரெம்டெசிவிர்’ மருந்தை அரசே மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அனைவருக்கும் அம்மருந்து தேவையில்லை. கொரோனாவுக்கு எதிராகச் செயல்படக் கூடிய டெக்கா மெத்தோஸோன், ப்ரட்னிசோலோன், அஸித்ரோமைசின், எனாக்ஸ்பெரின் ஆகிய மருந்துகள் இலட்சக்கணக்கில் மருத்துவமனைகளில் உள்ளன.
எனவே,‘ரெம்டெசிவிர்’ மருந்தை மட்டும் பரிந்துரைத்து மக்களை அலையவிட வேண்டாம் என்று கூறியதோடு, அவர் மேலும் எச்சரிக்கை விடுத்து கூறியுள்ளது கவனங்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.‘ரெம்டெசிவிர்’ இல்லை என்றால் உயிர் போய்விடும். அதை வாங்கி வாருங்கள்’ என்று அழுத்தம் தந்து தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படும்’ என்ற அளவிற்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
தொலைக்காட்சிப் பேட்டி, ஏடுகளில் எச்சரிக்கை என விடுத்த பிறகும் 4 நாட்களாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க அடிதடி நடந்திருக்கிறது. கள்ளச் சந்தை விற்பனை நடந்து இருக்கிறது. போலீசார் குவிக்கப்பட்டனர் எனும் செய்திகளை எல்லாம் கேள்விப்படும்போது, தேவையற்ற நெருக்கடிகளை மக்கள் தேடிக் கொள்கிறார்கள் என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. அரசு எச்சரிக்கை செய்ததற்குப் பிறகும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னையில் கடந்த 2நாட்களில் 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். டாக்டர்கள் சிலர் கூட கைது செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்குமானால் நாம் பெரிதும் கவலை கொள்கின்றோம். போர்க் காலங்களிலும், பஞ்ச காலங்களிலும், நாடு தழுவிய நோய் ஏற்படும் காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் ஈவு இரக்கமற்றவர்கள் மக்களிடம் கொள்ளை அடிப்பார்கள். எந்த வருந்தத்தக்க நிலையிலும் அத்தகைய இரக்கமற்றவர்கள் - நெஞ்சில் ஈர மில்லாதவர்கள் இப்படிப்பட்ட ஈன செய்கையினையே செய்வர்.
அப்படித்தான் ‘ரெம்டெசிவிர்’ கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அல்ல - இந்தியா அல்ல, உலகமே ஒரு நோயால் வாடிவதங்கும் போது, ஒரு மருந்தை வைத்து கள்ளச்சந்தையில் விற்று காசு பார்ப்பது எவ்வளவு கயமையான செயல். அதனைச் செய்வதற்கும் நாட்டில் ஒரு கூட்டம் இருப்பதைக் கண்டு நாம் மிகவும் வெட்கமும், வேதனையும் படுகின்றோம். கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்டு விட்ட அலங்கோலங்களை நினைக்கிறபோது மனவேதனை அளவிட முடியாததாக இருக்கிறது.
அந்த வேதனையின் ஊடே இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகளும் நடைபெறுமானால் மானுடத்தின் மதிப்பீடு நகைக்கத்தக்கதாய் ஆகிவிடுகிறது. நாட்டில் நடைபெறும் நோயின் உச்சத் தாக்குதலை அறிந்தும் மனிதநேயமே அற்று செயல்படுபவர்களின் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தக் கடுமையான நடவடிக்கைளைப் பார்த்து மருந்துக்கான கள்ளச்சந்தையில் மருந்துகளை விற்பனை செய்ய கயவர்கள் ஈடுபட முடியாதபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் 4.5 இலட்சம் ‘ரெம்டெசிவிர்’மருந்துகள் இறக்குமதி வெளிநாடுகளிலிருந்து செய்யப்படும் எனும் செய்தியும் கிடைக்கிறது. எந்தச் செய்திகள் கிடைத்தாலும் டாக்டர்கள் சிலர் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வேண்டுமென்றே பரிந்துரைப்பதை நிறுத்த வேண்டும். தேவையும், அவசியமும் கருதி அவர்கள்பரிந்துரைப்பதை அனைவரும் வரவேற்கவே செய்வர்.