முரசொலி தலையங்கம்

“தி.மு.க எத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எந்தக்காலத்திலும் அஞ்சியது இல்லை” : முரசொலி தலையங்கம்!

ஆட்சியா? கொள்கையா? என்று வந்தபோது பதவி பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை, என்று, கொள்கையைக் காத்து நின்றவர் நம்முடைய தலைவர், அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

“தி.மு.க எத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எந்தக்காலத்திலும் அஞ்சியது இல்லை” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சட்டமன்றத் தேர்தல் களத்தில் இருக்கும் தி.மு.க தலைவர், தனது பரப்புரையைத் தொடங்கிய காலத்தில் இருந்து சொல்லி வருவது ஒன்றே ஒன்றுதான், இது நமது சுயமரியாதையை மீட்கும் தேர்தல்! நமது தன்மானத்தை மீட்கும் தேர்தல் என்பதைச் சொல்லி வருகிறார்! இது, ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, ஆட்சி மாறுவது என்பதே தமிழ்நாட்டின் சுயமரியாதையை, சுயாட்சியை மீட்பதற்காகத்தான் என்பதையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

அ.தி.மு.க., ஆட்சியை இழக்கிறது, தி.மு.க., ஆட்சியைப் பெறுகிறது என்பதோடு இந்தத் தேர்தல் முடிவுகள் முடிந்து விடப்போவது இல்லை! தமிழகத்தில் சுயாட்சியை மலர வைப்பதும், அதன் மூலமாக ஒட்டுமொத்தத்தில் இந்தியாவில் கூட்டாட்சியை மலர வைப்பதும்தான் கழகத்தின் அடித்தளமான கொள்கையாக இருக்கிறது! இதனை மத்திய பா.ஜ.க விரும்பாது. எனவே முடிந்த வரை கழகத்துக்குத் தொல்லைகள் தருவதற்கு இறுதிக்கட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இத்தகைய நெருக்கடிகள் எதுவும் கழகத்துக்குப் புதிதல்ல!

திராவிட முன்னேற்றக் கழகம், இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எந்தக்காலத்திலும் அஞ்சியது இல்லை. 1976 ஆம் ஆண்டை விட வேறு உதாரணம் வேண்டுமா? ஆட்சியா? கொள்கையா? என்று வந்தபோது பதவி பறிக்கப் பட்டாலும் பரவாயில்லை, என்று, கொள்கையைக் காத்து நின்றவர் நம்முடைய தலைவர், அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டதுமே, மறுநாளே மாபெரும் கூட்டத்தை கூட்டி, “இது ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கும் செயல்’’ என்று சொல்லும் துணிச்சல் முதல்வர் கலைஞருக்கு இருந்தது.

“தி.மு.க எத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எந்தக்காலத்திலும் அஞ்சியது இல்லை” : முரசொலி தலையங்கம்!

பெருந்தலைவர் காமராசர் அவர்களை தனியாகச் சந்தித்துப் பேசினார், முதல்வர் கலைஞர் அவர்கள். “அய்யா, நான் பதவியை விட்டு விலகிவிடுகிறேன், சர்வாதிகாரத்துக்கான போராட்டத்தை நாம் இருவரும் சேர்ந்து செய்வோம்’’ என்று சொல்லும் அஞ்சாமை முதல்வர் கலைஞருக்கு இருந்தது. “இந்தியாவிலேயே ஜனநாயகக் காற்று வீசும் மாநிலம் தமிழகம் மட்டும்தான். அந்தத் தவறை நீங்கள் செய்யக் கூடாது” என்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள், முதல்வர் கலைஞரைத் தடுத்தார்கள்.

இறுதியாக கலைஞரின் ஆட்சியே கலைக்கப்பட்டது வரலாறு. கலைக்கப்பட்ட பிறகு இன்றைய தலைவர், அன்றைய இளைஞர் மு.க.ஸ்டாலின் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் ஓராண்டு காலம் சிறை வைக்கப்பட்டார்கள் என்பதும் தொடர்ந்த வீர வரலாறுகள்! இதே போன்ற சூழ்நிலைதான் 1991 ஆம் ஆண்டும் ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக இருந்தார், விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்று காரணம் காட்டித்தான் 1991 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது.

1989, 1990 காலக்கட்டத்தில் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்தார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த பாலசிங்கம் அவர்களும், யோகி அவர்களும் பலமுறை முதல்வர் கலைஞரைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார்கள். அன்றைய தினம் ஈழத்தில் ஏராளமான போராளி அமைப்புகள் இருந்தன. பிளாட், ஈராஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இப்படி எத்தனையோ அமைப்புகள் இருந்தன. அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாக முதல்வர் கலைஞரை வந்து சந்தித்தார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கோரிக்கைகளை மற்ற அமைப்பினரிடமும், மற்ற அமைப்பினரின் கோரிக்கைகளை விடுதலைப்புலிகள் அமைப்பினரிடமும் எடுத்துச் சொல்லி ஒரு ஒற்றுமையை உருவாக்க முதல்வர் கலைஞர் அவர்கள் பாடுபட்டார்கள். இந்தத் தகவல்களை அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும், அடுத்து பிரதமராக வந்த வி.பி.சிங் அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அமைதியை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.

“தி.மு.க எத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எந்தக்காலத்திலும் அஞ்சியது இல்லை” : முரசொலி தலையங்கம்!

திடீரென்று வி.பி.சிங் அவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டதும் நிலைமை மாறியது. சந்திரசேகர் அவர்கள் பிரதமர் ஆனார்கள். சந்திரசேகர் மூலமாக ஆட்சிக் கலைப்புக்கு நெருக்கடி கொடுத்தார் ஜெயலலிதா. எனவே அன்றைய பிரதமர் சந்திரசேகர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்தார். ‘மத்திய அரசாங்கத்தை தி.மு.க. அரசு டிக்டேட் செய்கிறது’ என்று பகிரங்கமாக பிரதமர் மிரட்டினார்.

“நான் எதையும் ரிக்வெஸ்ட் செய்து பழக்கப்பட்டவனே தவிர, டிக்டேட் செய்பவன் அல்ல’’ என்று பகிரங்கமாக, துணிச்சலாக பதில் அளித்தவர்தான் நம்முடையமுதல்வர் கலைஞர் அவர்கள். விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் ஆதரவாக இருக்கிறார் என்று சொல்லித்தான் 1991 ஆம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்டது. இறுதிவரை கலைஞர் அவர்கள் பயப்படவில்லை.

“சந்திரசேகர், தன்னுடைய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள, என்னுடைய நாற்காலியைப் பறித்துள்ளார். அவருக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அறிக்கை விடும் துணிச்சல், நம்முடைய தலைவர் கலைஞருக்கு இருந்தது. இப்படி பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் அரசாக இல்லாமல், மக்களைக் காக்கும் அரசாக இருந்தது! கழகமாக இருந்தாலும் கழக அரசாக இருந்தாலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் கட்டுப்பட்டதே தவிர, எவர் அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டது அல்ல. இதனை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் உணராதது வேதனைக்குரியது!

banner

Related Stories

Related Stories