முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க., அ.தி.மு.க தமிழ் மண்ணின் திராவிட மணத்திற்கு எதிரானவர்கள்” : முரசொலி தலையங்கம் சாடல்!

தமிழ் மண்ணில் திராவிட மணமாகத் திகழும் சுயமரியாதை, சமூகநீதி, இந்தி - சமஸ்கிருத எதிர்ப்பு என்பவைகளுள் நமது திராவிட மணம் உள்ளடக்கமாக இருக்கிறது.

“பா.ஜ.க., அ.தி.மு.க தமிழ் மண்ணின் திராவிட மணத்திற்கு எதிரானவர்கள்” : முரசொலி தலையங்கம் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தமிழ்’ ‘திராவிடம்’ என்பது ஒரு பொருட் பன்மொழி. தமிழின் உள்ளீடு எவ்வளவு உள்ளதோ, அவ்வளவும் திராவிடத்திற்கும் பொருந்தும். தமிழ் மண் என்றாலும் - திராவிட மண் என்றாலும் ஒரேபொருள்தான். ஒரே ஒரு வேறுபாடு. தமிழ் நாட்டாரின் அரசியல் குழுஉக் குறியாகி திராவிடம் ஒருநூறாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதற்கு முன்பு தமிழ் - சமஸ்கிருதப் போராட்டமாக அது விளங்கி வந்து இருக்கிறது. அதை ஆரிய - திராவிட போராட்டம் என வரலாறு கூறும். ஆகவே, தமிழ் மண்ணில் திராவிடத்திற்கு அரசியல் மணமும் உண்டு. அதற்கு நிரம்பப் பொருள்களும் உள்ளன.

எனவேதான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ‘திராவிட இயக்கம் சிறியது அன்றே’ என்று கூறினார். அதன் பரப்பு - விரிவு, ஆழம், உயரம் மாபெரும் பேருருவை ஒத்தது. பல பொருள்களைத் திராவிடத்திற்கு நமது ஆசான்மார்கள் நமக்குக் கற்பித்து இருக்கிறார்கள். ஆவணங்களாக்கி வைத்து இருக்கிறார்கள். அதிலொன்று திராவிடம் என்பது ‘ஆரிய வைதீக’ கொள்கைகளுக்கு எதிரானது என்பதாகும். அப்படியானால் அது கடவுள் மறுப்புக் கொள்கை உடையது என்று பொருளாகாது. ஆனால், நம் இயக்கத்தின் மீது அப்படியொரு பெரும் பழியைச் சுமத்தி வருகிறார்கள்.

நிரேச்சுரவாதம் எப்படி ஒரு மதத்தின் கூறாக இருக்கிறதோ அப்படி திராவிட இயக்கத்தின் கூறாக - ஒரு பிரிவினரின் கொள்கையாக கடவுள் மறுப்பு இருந்து வருகிறது. இது ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் கொள்கையாக இருக்க முடியாது. அக்கொள்கையை தி.மு.க.வின் மேல் ஏற்றி ‘கடவுள் மறுப்பு’க் கொள்கையினர் என்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களோ கடவுள் நம்பிக்கைக்கும், அரசியலுக்கும் தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வருவதற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் யாருக்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பதை முடிவு எடுத்து விட்டார்கள்.

“பா.ஜ.க., அ.தி.மு.க தமிழ் மண்ணின் திராவிட மணத்திற்கு எதிரானவர்கள்” : முரசொலி தலையங்கம் சாடல்!

ஆனால், வாக்காளர்களைக் குழப்பி விடுவதற்கென்றே சில அறிவுஜீவிகள் ஆருடக் காரர்களை அணுகி இருக்கிறார்கள். கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிட்டவர்களை ஆய்வு செய்து பார்க்கிறார்கள். அதில் போய் தி.மு.க. வரக்கூடாது என்கிற விதமாகக் கருத்துச் சொல்லப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்து பார்க்கிறார்கள். வேண்டுமென்றே ஐந்து அணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தி.மு.க.வைச் சிறுமைப்படுத்த முயற்சிக் கிறார்கள். நாமோ, நமது தலைவர்களோ தி.மு.க.வை - அதன் வெற்றியை உறுதிப் படுத்துவதற்கு உழைப்பவர்களாக இருக்கின்றோம்.

சூரியனைச் சுற்றி வருகிற பிற கோள்களைப் போல கழகத் தலைவர் ஒருபுறமும் இதர தலைவர்கள் எல்லாம் நாட்டின் பிற பகுதிகளிலுமாக மக்களைச் சந்தித்து வருகிறார்கள். கடந்த 4 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட கழகத் தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மிகக் கடுமையான உழைப்பைக் கொண்டு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நமது வெற்றி வேட்பாளர்களும், களப் பணியாற்றி வரும் கழகச் செயல்வீரர்களும் களத்தில் சுற்றி வரும் இதர தலைவர்களின் பணிகளை நாம் எளிதாக நினைத்து விட முடியாது. அந்த உழைப்பும் இயக்கச் சாதனைகளும் தான் நமது வெற்றியை நிச்சயித்து இருக்கின்றன.

ஆனால், நமது வெற்றியை குலைக்க நினைப்பவர்கள் மிக எளிதாக தி.மு.க.வைப் பற்றி எழுதுகிறார்கள். ஆருடம் கணிக்கிறார்கள். கருத்துக் கணிப்பு கூறியவர்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறி திசை திருப்பப் பார்க்கிறார்கள். நம் மீது அவர்களுக்கு உள்ள வன்மம் தீரவில்லை.

இதற்கு காரணம் என்ன? தமிழ் மண்ணில் திராவிட மணமாகத் திகழும் சுயமரியாதை, சமூகநீதி, இந்தி - சமஸ்கிருத எதிர்ப்பு என்பவைகளுள் நமது திராவிட மணம் உள்ளடக்கமாக இருக்கிறது. இவற்றை அதன் கொள்கை ‘குணாம்சம்’ மாறாமல் எடுத்துச்சொல்கிற, வற்புறுத்துகிற அரசியல் கட்சி தி.மு.க.; இக்கட்சி வெற்றிபெற வேண்டும் என்று நமது கொள்கை எதிரிகள் நினைக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் நம் மீது பலமுனை தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

நாம் யாருக்கும் அடிமையில்லை. நாம் பிறரை அடிமைப்படுத்த விரும்பவில்லை. நமக்கு மொழி, இனம், நாடு ஆகியவற்றில் பற்று உண்டு. நாம் பிறரைத் தாழ்த்துவது இல்லை. நம்மைப் பிறர் தாழ்த்தினால் அதனை நாம் ஏற்பதில்லை. யாருடைய உரிமையையும் நாம் பறிப்பதில்லை. நம்முடைய உரிமைகளை பிறர் பறிக்க நாம் அனுமதிப்பதில்லை. இவைதான் தமிழ் மண்ணின் திராவிட மணமாகும்.

அறிஞர் அண்ணா ஜனநாயகத்தை அரசியல் நெறியாக மட்டும் கருதினவர் இல்லை. அதனை அவர் வாழ்க்கை முறையாகவும் கருதி வாழ்ந்தவர். அவர்தான் தி.மு.க.வின் நிறுவனத் தலைவர். அவர் தோற்றுவித்த கட்சியான தி.மு.க. 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் ஒர் அணி அமைத்து போட்டியிடுகிறது. மேலே நாம் விவரித்த மூலக் கொள்கைகளை நிறைவேற்ற இன்னமும் பணியாற்ற நாம் அரசியல் அதிகாரத்தைப் பெற விரும்புகிறோம். இதனைத்தான் நமது எதிரிகள் வன்மமாகக் கருதி நம்மை எதிர்க்கிறார்கள் - தாக்குகிறார்கள். பொய்ப் பரப்புரைச் செய்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

மேலே நாம் சொன்ன மூலக் கொள்கைகள் மட்டுமில்லை; தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள், 200 புள்ளிகளைக் கொண்ட செயல் திட்டங்கள், பத்தாண்டுக்கான 7 புள்ளிகள் கொண்ட தொலை நோக்குத் திட்டங்கள் என மக்கள் முன்னே இப்படி பலவற்றை வைத்து இருக்கின்றோம். இவையெல்லாம் தமிழ் மண்ணின் வளத்தை மேன்மையுறச்செய்யும் திராவிட மணம் பரப்பும் திட்டங்களாகும்.

களத்தில் இருக்கும் நமது தோழர்களுக்கு ‘தமிழ் மண்ணில் திராவிட மணம் பரப்பும் வீரர்கள்’ என்கிற நினைப்பு நம் மனத்தில் இருக்க வேண்டும். நம்மை எதிர்க்கும் அணியில் இருக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க.வினர் தமிழ் மண்ணின் திராவிட மணத்திற்கு எதிரானவர்கள். நம்வளத்திற்கும் -மேன்மைக்கும் தீங்கை நினைப்பவர்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கத் தவறக் கூடாது. தலைவர் சொல்வது போல ஒவ்வொரு அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரும் பா.ஜ.க.காரர்களே - என்பதை நினைவில் நாம் வைக்க வேண்டும்.

நமது பரப்புரையிலிருந்து எதையாவது ஒரு கருத்தை எடுத்து வைத்துக் கொண்டு இந்தத்தேர்தல் நேரத்தில் அதைப் பெரிதாக்கி ஆதாயம் தேடப்பார்ப்பார்கள். தொலைக்காட்சி விவாதங்களிலும் அதைச் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் நமது தோழர்கள், ஆதரவாளர்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. ஏன், அவர்கள் தி.மு.கழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதை மேலேசுட்டிக் காட்டி இருக்கின்றோம்.

தி.மு.க கடல் போன்றது. தமிழ் இலக்கியமான மதுரைக் காஞ்சியில், ‘மழைக் கொள குறையாது புனல்புக மிகாது கரைபொரு திரங்கு முந்நீர்’ என்று இரண்டு வரிகள் (அடிகள்) இடம் பெற்று இருக்கும். இதன் பொருள் : மழை பொழிவதற்கு வெப்பத்தால் மேகத்தின் வழி கடல்நீர் உறிஞ்சப்பட்டாலும் கடலில் நீர் குறையாது, நீர்வரத்து அதிகமாகி கடலினுள் புகுந்தாலும் கடல் நீர் மிகுந்துவிடாது. அது எப்போதும் போல் அலையைக் கொண்டு கரையை மோதிக் கொண்டே இருக்கும்.

தி.மு.க.வின் நிலை கடலின் நிலை. அதன் அலைகள் தமிழ் மண்ணில் திராவிட மணத்தை அலைத்துப் பரப்பிக் கொண்டே இருக்கும். எதிரிகளின் இரைச்சல் அலை ஓசையில் அமிழ்ந்துபோகும்.

banner

Related Stories

Related Stories