முரசொலி தலையங்கம்

“ஜனங்களால் தேர்வானது போல் நடித்து ஜனநாயகத்தை கொல்லும் பா.ஜ.கவின் கயமை அரசியல்” - முரசொலி தலையங்கம்!

புதுச்சேரியில் பா.ஜ.க அரசு நடத்திய கயமை அரசியலை கண்டித்தும் விமர்சித்தும் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“ஜனங்களால் தேர்வானது போல் நடித்து ஜனநாயகத்தை கொல்லும் பா.ஜ.கவின் கயமை அரசியல்” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி என்பது அதன் பெயர். ஆனால் பழைய கயமைகளைத்தான் பா.ஜ.க. அரங்கேற்றம் செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை, ஒரு போலீஸ் அதிகாரியை ஆளுநராகப் போட்டு, ‘திஹார்' சிறையைப் போல மாற்றுவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டது. அதைத்தான் செயல்படுத்தியது. அடுத்து மக்களைச் சந்திக்க வேண்டும். அந்த ஆளுநரது அராஜகங்கள் மக்கள் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் அதனை மறைக்க உடனே நல்லவர் வேஷம் போடுவது போல அந்த ஆளுநரையே நீக்குவது. பார்த்தீர்களா? கிரண்பேடி செய்ததற்கும் பா.ஜ.க. தலைமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குவது.

சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி, கட்சி மாற வைப்பது. நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஞானஸ்தானம் செய்து, அதிகாரம் பொருந்தியவர்களாக மாற்றுவது. இறுதியாக சில கட்சிகளுக்கு ஆசை வார்த்தை காட்டுவது. அதனினும் இறுதியாக, தனது மடியில் மறைத்து வைக்கும் மயக்க மருந்துகளின் மூலமாக தானே ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா என்று பார்ப்பது. இதுதான் பா.ஜ.க.வின் பரமபத விளையாட்டு. அதாவது, மக்கள் மத்தியில் நேரடி செல்வாக்கைப் பெற முடியாமல் எல்லாக் கயமைகளையும் செய்வது. இதுதான் புதுவையில் நடந்திருக்கிறது. மற்ற பல மாநிலங்களிலும் இது தான் நடக்கிறது.

“ஜனங்களால் தேர்வானது போல் நடித்து ஜனநாயகத்தை கொல்லும் பா.ஜ.கவின் கயமை அரசியல்” - முரசொலி தலையங்கம்!

நமக்குப் பக்கத்தில் நடப்பதால் நாற்றம் அதிகமாக அடிக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இந்த சூழ்ச்சி வலைகளை முழுமையாக அம்பலப்படுத்தி இருக்கிறார். "திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது. துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து முதலமைச்சர் நாராயணசாமி அவர்களும், கூட்டணியினரும், ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட போது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசு, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை மாற்றிவிட்டு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் அவர்களைத் துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்தபோதே இதன் உள் நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

மிகவும் மோசமான அரசியல் நாகரிகமற்ற அந்த உள் நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தாங்களாகவே நியமித்துக் கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் மக்கள் நலன் காத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பா.ஜ.க." என்று குறிப்பிட்டு இருக்கிறார். துணிச்சலுடன் நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார் என்பதைப் பாராட்டிய மு.க.ஸ்டாலின், "அதிகார துஷ்பிரயோகம் செய்து சட்டமன்றங்களில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!" என்றும் சொல்லிஇருக்கிறார்.

“ஜனங்களால் தேர்வானது போல் நடித்து ஜனநாயகத்தை கொல்லும் பா.ஜ.கவின் கயமை அரசியல்” - முரசொலி தலையங்கம்!

மக்கள் இந்தக் கயமை நாடகத்தின் உள் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தாக வேண்டும். பா.ஜ.க.வுக்கு நேரான வழி எப்போதும் தெரியாது. நேர்மையான வழியில் எப்போதும் போக மாட்டார்கள். ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமான காரியங்களைச் செய்து ‘ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை'ப் போல நடிக்க மட்டுமே அவர்களுக்குத் தெரியும். சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி குதிரை பேரம் நடத்தியது. அமைச்சர்களையே வளைத்தது. இதனால் ஏழு பேர் அவர்களது வலையில் சிக்கினார்கள். ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாராயணசாமி தயாராக இருந்தார். மொத்த உறுப்பினர்கள் 30 பேர். இதில் 7 பேர் பதவி விலகி விட்டார்கள். மீதம் இருந்தது 23 பேர். இதில் காங்கிரஸ் 9. தி.மு.க. 2, இடதுசாரி ஆதரவு சுயேட்சை உறுப்பினர் 1 என ஆக மொத்தம் நாராயணசாமி ஆதரவு உறுப்பினர் எண்ணிக்கை 12 ஆக இருந்தது.

அரசுக்கு எதிர்ப்பாக ரங்கசாமி காங்கிரசு 7, அ.தி.மு.க. 4 ஆக மொத்தம் 11தான். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நாராயணசாமி அரசு வெல்வது உறுதி என்பதே உண்மை நிலையாக இருந்தது. எனவே அடுத்த கயமை அஸ்திரம் பாய்ச்சப்பட்டது. நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உண்டு என்று சபாநாயகரையே சொல்ல வைத்தது. நியமன உறுப்பினர்கள் 3 பேர் வாக்களித்தால் காங்கிரஸ் அரசு கவிழும். கவிழும் சூழல் வேண்டாம் என்று பதவியைத் தூக்கி எறிந்தார் நாராயணசாமி.

காங்கிரசு - தி.மு.க. கூட்டணி அரசு பதவி விலகியது என்றாலும் பா.ஜ.க.வின் கயமை அரசியல், நாட்டு மக்களுக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது. ஐந்தாண்டு காலம் காங்கிரசு - தி.மு.க. கூட்டணி ஆட்சியை ஒழுங்காக ஆளவும் விடவில்லை. இறுதியில் கவிழ்க்கவும் செய்தார்கள். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மக்கள் விபரம் இல்லாதவர்கள் இல்லை! இதுதான் அருணாசலப்பிரதேசத்தில் நடந்தது. கோவாவில் நடந்தது. மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. புதுவையிலும் நடந்துள்ளது. இதனை ‘அரசியல் விபச்சாரம்' என்று சட்டமன்றத்திலேயே பட்டம் சூட்டினார் முதலமைச்சர் நாராயணசாமி. இந்தக் கயமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

banner

Related Stories

Related Stories