“சட்ட விதிமுறைகளின் படி முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் நீதிமன்றத்தை அணுகிய தி.மு.க-வின் மீது பழி போட்டு, மூன்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேர்தலை மேலும் தாமதம் செய்து விடலாம் என்ற அ.தி.மு.க அரசின் சூழ்ச்சி தோற்றுப்போய் விட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் எந்த அளவுக்கு நிர்வாக அமைப்புகள் தரம்தாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் அண்மைக்கால உதாரணம். தேர்தல் ஆணையர், அ.தி.மு.க ஆட்சியாளர்களுடன் இறுகக் கை கோர்த்துக்கொண்டு தனித்தன்மையைக் கரைத்து அவர்களுடன் இரண்டறக் கலந்து எல்லா செயல்களிலும் ஈடுபடுவது மாநில நிர்வாகத்திற்கு நேர்ந்திருக்கும் மற்றொரு கேடு.
பல கிராமங்களில் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் பகிரங்க ஏலத்தில் விடப்படுவதைப் பார்க்கும்போது அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றுவது தெளிவாகிறது.” என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.