உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி அலுவலகத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் எல்லைக்கு அப்பால் வைத்திருக்க எண்ணியது. இந்த நிலையை போராடி முறியடித்திருக்கிறார் சுபாஷ் சந்திர அகர்வால். இது உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இனி இந்தியாவின் சாதாரண குடிமகனும், நீதிபதிகளின் சொத்து விபரங்களைக் கோரலாம்.
அதேசமயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொறுத்தவரை, தலைவர் கலைஞரின் தொடக்க காலப் பங்களிப்பினை நாம் மறந்துவிட முடியாது. 1997ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு பேரவையில், தகவல் பெறும் உரிமைச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இச்சட்டம் இயற்றப்பட்டது.
நீண்ட காலமாக அகர்வால் போராடிப் பெற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில், தலைவர் கலைஞரின் உருவம் நம் கண்ணுக்குத் தெரிகிறது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.