நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கலைஞர் சிலை உள்ளிட்டவற்றை திறந்து வைத்து, மேலும் பல திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனவு உலகத்தில் வாழ்வது போல, தி.மு.க.வின் மதிப்பு சரிந்து வருகிறது என்ற கூற்றை முன்மொழிந்துள்ளார்.
மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர் அவர்களே, நாள்தோறும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் மகளிரின் முகங்களில் தி.மு.க.வின் மதிப்பு இருக்கிறது!
மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை பெறும் ஒரு கோடிக்கும் அதிகமான சகோதரிகளிடம் தி.மு.க.வின் மதிப்பு தென்படுகிறது!
நாள்தோறும் 20 லட்சம் குழந்தைகள் வயிறார காலை உணவு உண்கிறார்களே, அதில் இருக்கிறது தி.மு.க.வின் மதிப்பு!
‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்களின் மாதந்தோறும் ரூ. 1000 பெறும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தெரியும், தி.மு.க.வின் நன்மதிப்பு.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழி, திறன் மிக்கவர்களாக உயர்ந்துள்ள இளைஞர்கள் பெறும் வெற்றியில் தி.மு.க ஆட்சியின் மதிப்பு இருக்கிறது.
அ.தி.மு.க.வின் ஆட்சிகாலத்தில் உங்கள் பதவி ஊசலாலும், உங்களின் தோல்வி ஆட்சியினாலும், உங்களின் (அ.தி.மு.க) மதிப்பு தான் மக்களிடம் குறைந்துள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டு தான், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை, உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களின் முடிவுகள்” என பதிலடி கொடுத்துள்ளார்.