மு.க.ஸ்டாலின்

நாமக்கல் வளர்ச்சிக்கான 4 முக்கிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

நாமக்கல் வளர்ச்சிக்கான 4 முக்கிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பேருரை பின்வருமாறு,

“தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவற்கொரு குணமுண்டு! அன்பே அவனுடை வழியாகும்! அமிழ்தம் அவனுடை மொழியாகும்!” இந்த சிறப்புமிகு பாடலைத் தந்த எழுச்சிமிகு நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் பிறந்த மண்ணில் மழை சாரல்கள் வீசும் இரம்மியமான இந்த மாலைப் பொழுதில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னால், நாமக்கல் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருக்கின்ற பூங்காவில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்திருக்கிறேன். நாமக்கல் மாவட்டத்தில் அவர் சிலை அமைவது மிக மிகப் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், சேலம் மாவட்டத்தில் இருந்து 1997- ஆம் ஆண்டு புதிதாக நாமக்கல் மாவட்டத்தையே உருவாக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

தலைநகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாபெரும் கட்டடத்தை அமைத்து, அதற்கு ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ என்று 50 ஆண்டுகளுக்கு முன்னால், பெயர் சூட்டியதும் நம்முடைய தலைவர் கலைஞர் தான். ஆரைக்கல் என்றும், நாமகிரி என்றும் அழைக்கப்பட்டு, இன்று நாமக்கல் என பெயர் பெற்றுள்ள நகர் இது! லாரி கட்டமைப்பு மூலமாக, இந்தியா முழுமைக்கும் சரக்குப் போக்குவரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற மாவட்டம் இந்த நாமக்கல்!

கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி, சவ்வரிசி ஆலைகள் என்று பொருளாதாரத்தை வளர்க்கும் தொழில்களும், நன்செய், புன்செய் நிலங்களும் நிறைந்த செழிப்பான பூமி இது! வியர்வை சிந்தும் உழைப்பாளர்கள், மண்ணைப் போற்றும் உழவர்கள், பாட்டாளித் தோழர்கள், தொழில் முனைவோர்கள் என்று எல்லோரும் சமமாய் வாழக்கூடிய மாவட்டம் இந்த மாவட்டம்!

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இந்த நாமக்கல்! அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய மாவட்டத்தின் அமைச்சர் மதிவேந்தன் அவர்களையும், மாநிலங்களவை உறுப்பினர் என்னுடைய அருமை தம்பி ராஜேஸ்குமார் அவர்களையும், மாவட்ட ஆட்சியர் உமா அவர்களையும், மாவட்டத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரையும் நான் பாராட்டுகிறேன்! மனதார வாழ்த்துகிறேன்!

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மதிவேந்தன் அவர்கள் சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கிறார். புதிய பொறுப்பின் மூலமாக நம்முடைய திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்புகள் விளிம்பு நிலை மக்களுக்குச் சென்றடைவதை அவர் உறுதி செய்வார் என்று நான் நம்புகிறேன். அருந்ததியர் சமுதாய மக்களுக்கு தலைவர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் கடந்த 15 ஆண்டு காலமாக அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார, சமூக மேம்பாட்டில் பெற்று வரும் மேன்மையைப் பார்க்கும்போது, அந்தச் சட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தவன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்!

நாமக்கல் வளர்ச்சிக்கான 4 முக்கிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

இந்த மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் அக்கறை கொண்டவர், நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் தம்பி ராஜேஸ்குமார் அவர்கள்! நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை, இதே நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திக் காட்டிய சாதனைக்குச் சொந்தக்காரர் தம்பி ராஜேஸ்குமார்!

நாமக்கல் மாவட்டத்திற்காக திட்டப்பணிகளைப் பெறுவதில் முனைப்பாக இருக்கக்கூடியவர்! என்னை சந்திக்க வரும்போதெல்லாம், அவர் கையில் ஒரு கடிதம் நிச்சயமாக இருக்கும். அதில் நாமக்கல் மாவட்டத்திற்கு சாலை வேண்டும், பஸ் ஸ்டாண்ட் வேண்டும், கூட்டுறவு வங்கி வேண்டும், இப்படி ஏதாவது ஒரு கோரிக்கையுடன்தான் என்னை சந்திப்பார்.

பார்க்க, அமைதியாகவும், செயலில் புயலாகவும் இருக்கும் தம்பி ராஜேஸ்குமார், நான் வளர்த்த இளைஞரணியின் Product! சிறப்பாக செயல்படும் அவருக்கும், அவருக்கு துணை நிற்கும் நிர்வாகிகளுக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

அடுத்து, நம்முடைய மாவட்ட ஆட்சியர் உமா மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதை, நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறேன். அலுவலகத்திலேயே உட்கார்ந்து நிர்வாகம் செய்யாமல், காலை முதல் மாலை வரை கள ஆய்வில் “ஃபீல்டு விசிட்” மூலமாக கண்காணிக்கும் ஆட்சியராக அவர் இருக்கிறார். மற்ற மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆட்சியர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கும், அவரோடு இணைந்து பணியாற்றும் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள், அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் நான் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் நம்முடைய அன்பிற்குரிய கொங்கு ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். அவருடைய கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களின் திருவுருவச் சிலையை அவரது சொந்த கிராமத்தில் திறந்து வைத்தேன்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று சிலப்பதிகாரத்தின் மாண்பையும், செந்தமிழின் மேன்மையையும் போற்றியவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொடுத்து வருகிறோம். அதில் நாமக்கல் மாவட்டமும் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

நாமக்கல் வளர்ச்சிக்கான 4 முக்கிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலமாக கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில் மாநிலத்திலேயே முதலிடம் இந்த நாமக்கல் மாவட்டம்.

’தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மூலமாக கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில் இரண்டாவது இடம் இந்த நாமக்கல் மாவட்டம்.

இராசிபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம்

பள்ளிப்பாளையம், ஆலப்பாளையம், படவீடு கூட்டுக் குடிநீர் திட்டம்.

மோகனூர் புதிய குடிநீர் திட்டம்

இராசிபுரத்தில் புதிய மாவட்ட அரசு மருத்துவமனை

திருச்செங்கோட்டில் புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை

சித்த மருத்துவமனைக் கட்டடம்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்

சேந்தமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்

இராசிபுரம் திருவள்ளுவர் கல்லூரியில் புதிய கட்டடம்

குமாரபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம்

நாமக்கல்லில் அறிவுசார் மையம், தினசரி சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

புதிய பேருந்து நிலையம்

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கலைக் கல்லூரி

இப்படி ஏராளமான திட்டங்களை நாமக்கல் மாவட்டத்திற்கு நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுத்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நின்று கொண்டிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, இன்று பல்வேறு துறைகள் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. 16 ஆயிரத்து 31 பேருக்கு, 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

இலவச வீட்டுமனைப் பட்டா, பயிர்க் கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன், கலைஞர் கனவு இல்லம், தையல் இயந்திரம், வேளாண்மை உதவிகள், புதிய குடும்ப அட்டைகள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வாரிசு நியமன ஆணைகள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டப் பயனாளிகளின் ஆணைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆணைகள், கைத்தறி ஆதரவு திட்ட ஆணைகள், நெசவாளர் சேமிப்பு பாதுகாப்புத் திட்ட ஆணைகள், தானியங்கி பால் பரிசோதனை கருவி வழங்கும் ஆணைகள், இப்படி பல்வேறு உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

அதாவது, ஒவ்வொரு துறையின் சார்பிலும் எப்படி எல்லாம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமோ, அப்படி எல்லா வழிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால், 16 ஆயிரத்து 31 தனிநபர்கள் இல்லை. அவர்கள் மட்டும் இல்லை. 16 ஆயிரத்து 31 குடும்பங்கள், அதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்; அவர்களைச் சுற்றி இருக்கின்றவர்கள் பயனடைய இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த விழா மூலமாக பல்வேறு திட்டங்களை திறந்து வைத்திருக்கிறேன். அதில் மிக மிக முக்கியமானது மாவட்ட தலைநகரில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம். அதோடு, முடிவுற்ற 134 திட்டப்பணிகளை திறந்து வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 298 கோடியே 2 இலட்சம் ரூபாய். புதிதாக மொத்தம் 140 பணிகளுக்கு இன்று இங்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

நகர்ப்புர வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலை துறை, வணிகவரித்துறை, பேரூராட்சித் துறை, பதிவுத்துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் பால்வளத்துறை என்று பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 365 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இவை உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, அனைத்தும் திறப்பு விழா காணும்! ஏன் அவ்வளவு உறுதியாக சொல்கின்றேன் என்றால், கடந்த சில நாட்களாக, நாம் பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டு ஆட்சி காலத்தில், நம்மால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எது எது நிறைவேற்றப்பட்டப் பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பணிகள் அதையெல்லாம் துறைவாரியாக ஆய்வு கூட்டங்களை நான் நடத்திக்கொண்டு வருகிறேன்.

அதை இந்த மாதத்தில் முடித்துவிட்டு, அடுத்த நவம்பர் மாதம் தொடங்கி, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக நானே சென்று கள ஆய்வு செய்யப் போகிறேன். அதனால் தான் சொல்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும்.

இந்த நாமக்கல் மாவட்டத்திற்கு வர வேண்டும் என்று என்னை அழைக்க பலமுறை வந்த தம்பி ராஜேஸ்குமார் அவர்கள் வந்தார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல், எப்போதும் கோரிக்கையுடன்தான் வருவார்; அது இன்னும் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. நாமக்கல்லுக்கு வந்துவிட்டு உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை அறிவிக்காமல் என்னால் இருக்க முடியுமா? அறிவிக்காமல் நான் போனால் விட்டுவிடுவீர்களா நீங்கள்? ராஜேஸ்குமாரும் விடமாட்டார், நீங்களும் விடமாட்டீர்கள்.

அதனால், இப்போது அறிவிப்புகளை நான் உங்களிடத்தில் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

அறிவிப்பு ஒன்று, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் நாமக்கல்லுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்!

அறிவிப்பு இரண்டு, சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக, குளிர்பதனக் கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும்.

அறிவிப்பு மூன்று, மோகனூரில் இருக்கும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்று பெயரிடப்பட்டு, இன்னும் சிறப்பாக செயல்பட, இந்த ஆலையின் எத்தனால் உற்பத்தி அலகு 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

அறிவிப்பு நான்கு, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வரக்கூடிய, நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் 30 கோடி ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்படும்.

இப்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும். ஏன் என்றால், எங்களைப் பொறுத்தவரைக்கும், சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்!

கடந்த மூன்றாண்டுகால ஆட்சியில், பட்டியலினத்தவர், பழங்குடியினர், அருந்ததியர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள், ஏழை எளியோர், கோயில் அர்ச்சகர்கள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என

அனைத்துச் சமூக மக்களையும் வளர்த்து வருகிறோம். எனக்கு தினமும் வாட்ஸ்அப்-இல் பல பேட்டிகள் வீடியோக்கள் வருகிறது. மக்களின் அன்பும் பாராட்டுக்களும் நிறைந்த அந்த வீடியோக்களில் சிலவற்றை உங்களிடத்தில் நான் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு மூதாட்டி சொல்கிறார். நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயில்தான் நான் மாத்திரை மருந்து வாங்குகிறேன்.

ஒரு மாணவி சொல்கிறார். புதுமைப்பெண் திட்டத்தில் வரும் ஆயிரம் ரூபாயால் என்னுடைய கல்விக் கனவு நனவாகி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது நான் மூன்று இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோவுக்கு ஓனராக இருக்கிறேன் என்று திருநங்கை ஒருவர் பெருமையாக சொல்கிறார்.

மாற்றுத் திறனாளிகளை, ஸ்டாலின் கவர்மெண்ட், செல்லப் பிள்ளைகளாக பார்க்கிறது என்று ஒரு மாற்றுத் திறனாளி சகோதரி சொல்கிறார். எல்லாவற்றிற்கும் மேல், சென்னையில் மழை பெய்தபோது, நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டு, நிலைமையை கையாண்டது! அப்போது, அரசின் செயல்பாடுக்கு பெரும் துணையாக இருந்த தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, அவர்களோடு மதிய உணவு சாப்பிட்டேன். நீங்கள் எல்லாம் டிவி-யில் பார்த்திருப்பீர்கள்; சோசியல் மீடியா-விலும் பார்த்திருப்பீர்கள்; வாட்ஸ் ஆப், யூ-டியூப்-இல் பார்த்திருப்பீர்கள். பார்த்தீர்களா!

அப்போது ஒரு தூய்மைப் பணியாளர் என்னிடம் பேசினார். அப்போது அவர், “எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்தான் முதலமைச்சர்” என்று சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு எனக்கு என்ன வேண்டும். ஊரைத் தூய்மைப்படுத்தும் உள்ளங்களோடு சாப்பிட்டதுதான் எனக்குப் பெருமை! இதுதான் “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னது! அண்ணா சொன்னதை தான், அவரின் தம்பிமார்களான நாங்கள் செய்து காட்டிக் கொண்டிருக்கிறோம்!

நாமக்கல் வளர்ச்சிக்கான 4 முக்கிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதுடன் தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம். பெரிய பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் வளர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி 10.69 விழுக்காடாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் வெளியாகி இருக்கிறது. இது அகில இந்திய வளர்ச்சி

அளவைவிட விட மிக மிக அதிகம். நிறைய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிப் பார்த்தால் அனைத்து மாவட்டங்களும் வளர்ந்திருக்கும்! அனைத்துத் துறைகளும் வளர்ந்திருக்கும்! அனைத்து சமூகங்களும் வளர்ந்திருக்கும்! அந்த நிலையை உருவாக்கிக் காட்டுவதற்காகதான் நானும், நம்முடைய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

இந்த வளர்ச்சி அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. அதன் மூலமாக பாராட்டுக்கள் கிடைக்கிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களும் பாராட்டுகின்ற அரசாக இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. நன்றாக கவனியுங்கள்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories