தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளாக கொள்கைத் துடிப்புடனுடம், சமூக நீதி உணர்வுடனும், தமிழ் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் அளவுகடந்த பற்றுகொண்டு செயல்பட்டு வரும் தி.மு.க.வின் பவள விழா மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தி.மு.க தலைமையிலான கூட்டணி தலைவர்கள் பங்குகொண்டு, தி.மு.க.வின் தனிச்சிறப்புகளை முன்மொழிந்தனர். மேலும், தி.மு.க.வின் வருங்கால நடவடிக்கைகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
அதன் இறுதி உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தலைவர்கள் ஒன்றாதல் கண்டே! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என மகிழ்ச்சி பொங்க பேசினார்.
இதனையடுத்து, விழா சிறப்புற நடந்து முடிந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளப் பக்கத்தில், “சூழும் பகைதனைச் சுக்குநூறாக்கத் துணை நிற்கும் தோழமை இயக்கங்களின் வாழ்த்துகள், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் ஒலிக்க, கழகப் பவள விழா நடந்தேறியது! கொள்கைப் பகைவர் எங்கோ மறைய ஒன்றாகும் தோழமை இயக்கத்தினர் அனைவர்க்கும் நவில்கிறேன் நன்றியை என்றென்றும் இனமானம் காக்கும் உறுதியோடு!” என்று தெரிவித்தார்.
மேலும், “பவள விழாவைக் கண்டுவிட்டோம்; நூற்றாண்டைக் காண்பதற்குள் மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்!” என்றும் உறுதிபூண்டுள்ளார்.