கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.355.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.8.2024) கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 8 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 3 கோடியே 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் புதிதாக கட்டப்படவுள்ள சென்னை துவக்கப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், கணேஷ் நகரில் அமைக்கப்பட்டு வரும் 230/33 கி.வோ. துணை மின் நிலையம், வீனஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வெளியேற்று நிலையத்தின் செயல்பாடுகள், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன சந்தை, தணிகாசலம் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துமனையில் சிறப்பு மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள், என மொத்தம் 355 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துணை மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுதல் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் சார்பில் கொளத்தூர், கணேஷ் நகரில் 110 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 230/33 கி.வோ. துணை மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த துணை மின் நிலையம் அமைக்கப்படுவதன் மூலம், கொளத்தூர், பெரியார் நகர், அன்னை நகர், நேர்மை நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு சீரான மின்சாரம் கிடைத்திடும்.
கழிவுநீர் வெளியேற்று நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொளத்தூர், வீனஸ் நகரில் 19 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்று நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையத்தின் மூலம் வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள குழாய் மூலம் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல் கொளத்தூர், பள்ளி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ், பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் ரூ.5 கோடியே 4 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம் மற்றும் இரண்டு குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், ஜி.கே.எம். காலனி 27வது தெருவில் ரூ.2 கோடியே 55 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் வகுப்பறைகள், பணியாளர் அறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சென்னை துவக்கப் பள்ளிக் கட்டடம்; கொளத்தூர் தொகுதியில் பல்வேறு தெருக்களில் 86 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 உயர் மின்கோபுர விளக்குகள்; என மொத்தம் 8 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் 3 கோடியே 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சென்னை துவக்கப் பள்ளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நவீன சந்தை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல் அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூர் நேர்மை நகரில் 0.73 ஏக்கர் பரப்பளவில் 23 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சந்தையின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நவீன சந்தை கட்டடமானது, அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன், மொத்தம் 62,200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தின் அடித்தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் வசதியும், தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் மொத்தம் 99 கடைகளும் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்தில் கழிப்பறை வசதிகள், மின்தூக்கி வசதிகள், 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி, 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தீ அணைப்பு தொட்டி மற்றும் 2500 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளது.
தணிகாசலம் கால்வாய் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல் நீர்வள ஆதாரத் துறை சார்பில் அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகரில் 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தணிகாசலம் கால்வாய் மொத்தம் 3050 மீட்டர் நீளம் கொண்டது. கடந்த பருவமழையின்போது தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, முதலமைச்சர் அவர்கள் 9.11.2021 அன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, வெள்ள பாதிப்புகளை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 91.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயினை திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தும் பணியினை முதலமைச்சர் அவர்கள் 30.08.2023 அன்று தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் தணிகாசலம் நகர் கால்வாயினை அகலப்படுத்தி கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் வழிவகை செய்யப்படவுள்ளது. 700 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்திற்கு கான்கிரீட் கால்வாயாகவும். 780 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் திறந்தவெளியாகவும், 4 மீட்டர் அகலத்தில் மூடிய வடிவத்திலும், 1010 மீட்டர் நீளத்திற்கு 6 மீட்டர் அகலத்தில் திறந்தவெளியாகவும், 4 மீட்டர் அகலத்தில் மூடிய வடிவிலும், 220 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் மூடிய வடிவிலான கால்வாயாகவும், 160 மீட்டர் நீளத்திற்கு 6 மீட்டர் அகலத்தில் திறந்தவெளி கால்வாயாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல் அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 109 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரியார் நகர், அரசு புறநகர் மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையானது, தீவிர சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி, விபத்து காய சிகிச்சைப் பிரிவு, பிரசவ அறை, முழு உடற் பரிசோதனை ஆய்வகம், நீரிழிவு நோய் புறநோயாளிகள் பிரிவு, சிறுநீரகவியல், இரத்த நாளவியல், தோல் மருத்துவம், மனநல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், புற்றுநோயியல் கண் மருத்துவப் பிரிவுகள், இருதவியல் புறநோயளிகள் உள்நோயாளிகள் மற்றும் திவிர சிகிச்சைப் பிரிவு, ஆஞ்சியோ அறுவை அரங்கம், இ.சி.ஜி, எக்கோ மற்றும் டிரெட்மில் சோதனை, போதை மறுவாழ்வு மையம், மருத்துவமனை நிர்வாக அலுவலகம், கருத்தரங்குக்கூடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படும்.