மு.க.ஸ்டாலின்

"பட்ஜெட்டில் மட்டுமல்ல, பாஜகவின் சிந்தனையில் கூட தமிழ்நாடு இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

"பட்ஜெட்டில் மட்டுமல்ல, பாஜகவின் சிந்தனையில் கூட தமிழ்நாடு இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியின் முழு விவரம் :

அனைவருக்கும் வணக்கம்.

ஏற்கனவே ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை ஒட்டி, ஒரு நீண்ட அறிக்கை கொடுத்திருக்கிறேன். அதையொட்டி, ஒரு முக்கிய முடிவு நான் எடுத்திருக்கிறேன். அதற்காக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற நிதிநிலை அறிக்கை மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மூன்றாவது முறையாக வாக்களித்த மக்களுக்கு இந்த பாஜக கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாக காண்பிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு என்று என்னென்ன திட்டங்கள் அறிவிக்கவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் டிவிட்டரில் வெளியிட்டிருந்தேன். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நீங்களும் வெளியிட்டு இருக்கிறீர்கள். பல கோரிக்கைகளை அதில் எடுத்து வைத்தேன். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று.

* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் -

* கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என்றும் -

* தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திய நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்றும் -

* தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைத் திட்டத்துக்கான ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்திருந்தேன். இதில் எதையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜக-வாக ஆக்கிய ஒரு சில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அறிவித்துள்ளார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் சந்தேகம் தான்.

எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் என்று அறிவித்து விட்டு, நிதி ஒதுக்காமல் இன்றைக்கு வரையில் ஏமாற்றி வருவதைப் போல அதுபோல, அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. தமிழ்நாடு மிகப்பெரிய இரண்டு இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டது. 37 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு நாம் கேட்டோம். தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இதுவரை 276 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளார்கள். அது சட்டப்படி வரவேண்டிய தொகை. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், இரண்டு மூத்த ஒன்றிய அமைச்சர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதியமைச்சர் என்று இருவரும் நேரடியாக பார்த்துவிட்டு சென்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களை பாஜக மதிக்கின்றதா? என்பது தான் என்னுடைய கேள்வி.

தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்புத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. நமது கோரிக்கைகள் எதுவுமே இதில் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைங்களையும் நிதி அமைச்சர் மறந்தே போய்விட்டார். தமிழ்நாடு என்ற சொல்லே நிதி நிலை அறிக்கையில் இல்லை என்று சொல்வதைவிட, ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும் தான் இந்த அறிக்கையில் இருக்கிறது. ஒரு நாட்டின் நிதி நிலை அறிக்கை என்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில், நிதி ஒதுக்கீட்டில் நீதி இல்லை. அநீதியே அதிகம் உள்ளது. அரசியலை தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது இணைந்து நாட்டிற்காக பணியாற்றவேண்டும் என்று பிரதமர் அவர்கள் நேற்று தான் சொல்லியிருக்கிறார். அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. ஆனால், அவர் நேற்று சொன்னதற்கு எதிராக இன்றைக்கு அவருடைய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகள் செய்வதுதான் ஒரு சிறந்த அரசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

"பட்ஜெட்டில் மட்டுமல்ல, பாஜகவின் சிந்தனையில் கூட தமிழ்நாடு இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

அப்படிதான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளும் இருக்கிறது. இதை பார்த்தாவது, ஒன்றிய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வருகின்ற 27-ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதில் பங்கெடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேண்டாம் என்று நான் முடிவெடுத்திருக்கிறேன். அதைப் புறக்கணிக்கப் போகிறேன். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன்.

தமிழ்நாட்டின் தேவைகளை, உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளைய தினம் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் டில்லியில் போராட்டம் நடத்தப் போகிறார்கள், அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கியிருக்கிறோம்.

கேள்வி: 40-க்கு 40 வெற்றிதான் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

முதலமைச்சர் அவர்களின் பதில்: தமிழ்நாட்டு மக்கள் மீது அவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள் அவர்கள்.

கேள்வி: தமிழ்நாடு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தார் பிரதமர், அது பற்றி…..

முதலமைச்சர் அவர்களின் பதில்: தமிழ்நாடு மட்டுமா சொன்னார், திருக்குறளும் பிடிக்கும் என்று சொன்னாரே, திருக்குறள் என்று ஒரு வார்த்தை கூட கிடையாது, தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் கிடையாது.

கேள்வி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதபோது, நிறைய திட்டங்கள் இருக்கிறது, மெட்ரோ இரயில் போன்ற திட்டங்கள் இருக்கிறது. தமிழ்நாடு அரசு எப்படி கையாளும்?

முதலமைச்சர் அவர்களின் பதில்: இதுவரைக்கும் எப்படி கையாண்டு கொண்டிருக்கிறோமோ, நாங்கள் அப்படியே கையாளுவோம்.

கேள்வி: பத்திரப்பதிவு கட்டணங்களை மாநில அரசுகளுக்கு குறைத்திருக்கிறோம் என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். அது பற்றி…

முதலமைச்சர் அவர்களின் பதில்: நான் தான் ஒட்டுமொத்தமாக சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள். புறக்கணித்த காரணத்தினால் பிரதமர் கூட்டுகின்ற அனைத்து முதலமைச்சர் கூட்டத்தை புறக்கணிக்கப் போகிறேன்.

banner

Related Stories

Related Stories