மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை..

கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு :

பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இங்கு பேசிய உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, வேல்முருகன், கோ.க.மணி, ஈஸ்வரன், வீ.நாகைமாலி, நயினார் நாகேந்திரன், வைத்திலிங்கம், சதன் திருமலைக்குமார், சிந்தனைச்செல்வன், ராமச்சந்திரன், அப்துல் சமது ஆகியோர் இப்பொருள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ததோடு அரசுக்கும் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் தெரிவித்தனர். அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு நிச்சயமாக அதை கவனத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், ஏனோ அதனைச் செய்யாமல் இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சினையிலும் அரசியல் காரணங்களுக்காகத் தன் கட்சியினருடன் வெளியே சென்றுவிட்டார். அவருக்கும் சேர்த்தே நான் பின்வரும் விவரங்களைத் தங்கள் வாயிலாக இப்பேரவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றைய முன்தினம், அதாவது கடந்த 19-6-2024 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரத்தைச் சேர்ந்த 47 நபர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்திய காரணத்தினால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த மிகவும் துயரமான சம்பவம் குறித்து உங்களைப் போலவே நானும் மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். அதுதொடர்பாக நேற்றைய தினம் இந்தப் பேரவையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தியிருக்கிறோம்.

இறந்து போன உயிர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகள் இந்த அவையில் தெரிவிக்கப்பட்டு வரக்கூடிய நிலையிலே, பேரவைத் தலைவர் அவர்களுடைய அனுமதியோடு ஒரு சில விவரங்களை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருணாபுரம் சம்பவத்தைப் பொருத்தமட்டில், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்துவ உதவிகளைச் செய்திட அறிவுறுத்தினேன்.

மருத்துவப் பணிகளை விரைவுபடுத்திட கூடுதலாக 57 அரசு மருத்துவர்கள், விழுப்புரம், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போதுமான செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள 161 மருத்துவர்களோடு இவர்களும் அங்கு இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நிகழ்வுகளில் சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடிய உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில், பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காத்திடும் பொருட்டு, அவை வெளிச்சந்தையில் வாங்கியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவப் பணிகளை ஒருங்கிணைத்திட தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் அவர்களும், மருத்துவக் கல்வி இயக்குநர் அவர்களும் முன்பே அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 நபர்கள் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.

தற்போது 67 நபர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 32 நபர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 நபர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 16 நபர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

இந்தச் சம்பவம் தொடர்பாக, கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி என்பவர் காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாமோதரன், மதன், விஜயா (க/பெ. கோவிந்தராஜ்) ஆகிய 3 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்பதை இந்தப் பேரவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் எனக்குத் தெரிந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டேன். அவர்களும் 19-ஆம் தேதி இரவே அங்கு நேரில் சென்று அந்தப் பணிகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக 20-ஆம் தேதி காலையில் ஆய்வுக் கூட்டத்தை உயர் அதிகாரிகளோடு நடத்தினேன். அதனையடுத்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, மா.சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தேன். அவர்களும் கள்ளக்குறிச்சிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அரசு அறிவித்த தலா 10 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

அமைச்சர்கள் மட்டுமல்லாமல், உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் நேரில் செல்ல உத்தரவிட்டிருந்தேன். அவர்களை இரண்டொரு நாளில் விசாரணை அறிக்கையைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.

கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

நம் அனைவருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனையை அளித்துள்ள இந்தத் துயர சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

* இதன் முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

* கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

* மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்-

* கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் -

* திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் -

* திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் -

* திருக்கோவிலூர் சட்டம்-ஒழுங்குக் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

* மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீர விசாரிக்கவும், அதனடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க உத்தரவிட்டேன்.

அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.,யும் நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.

எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருட்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது என்ற அடிப்படையில், இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்து வருகின்றோம்.

கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள்
கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள்

தொடர் நடவடிக்கை குறித்து இங்கு அனைவரும் பேசினீர்கள்.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இதேபோன்ற சம்பவம் தொடர்பான வழக்கினை இந்த அரசு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தது. அந்த வழக்கு இரண்டு மாவட்டங்கள் தொடர்புடையது. அதில், விழுப்புரம் வழக்கினைப் பொறுத்தவரையில்,

21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்; 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல் துறை அலுவலர்கள் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, விழுப்புரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வழக்கினைப் பொறுத்தவரையில், 6 வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது; 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் 5 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

6 காவல் துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், போலி மதுபானங்கள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாவண்ணம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

அவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல விரும்புகிறேன்,

➢ கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க, மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன.

➢ நமது அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 4 லட்சத்து 63 ஆயிரத்து 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 லட்சத்து 61 ஆயிரத்து 84 பேர் கைது செய்யப்பட்டனர்.

➢ இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

➢ 16 லட்சத்து 51 ஆயிரத்து 633 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

➢ 1 லட்சத்து 42 ஆயிரத்து 19 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

➢ 28 லட்சத்து 79 ஆயிரத்து 605 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

➢ மாநிலம் முழுவதும் மொத்தம் 45 நிரந்தர மதுவிலக்குச் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு சட்டவிரோத மதுபான கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

➢ கள்ளச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயனர்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் போன்றவற்றைத் தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➢ மேலும், அவர்களின் மாதாந்திர அறிக்கைகள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுத் தலைமையகத்தில் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், அண்டை மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளத்தனமான முறையில் நம் மாநிலத்திற்குள் கொண்டு வரப்பட்டு இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

➢ மேலும், அரசின் அறிவுரையின்படி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

➢ கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளேன்.

➢ இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இப்படி இந்த அரசானது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும்.

கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

அதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆணையம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும். அதனடிப்படையில் இந்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

”நடைபெற்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்” என்று இங்கு பேசினார்கள்.

உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.

எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், போதை பொருட்கள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர்காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டது விசாரிக்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் பற்றிய பட்டியல் என் கையில் இருக்கிறது. அதையெல்லாம் வைத்து அரசியல் பேச நான் விரும்பவில்லை.

துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

banner

Related Stories

Related Stories