மு.க.ஸ்டாலின்

”தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்” : திமுக எம்.பிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என தி.மு.க எம்.பிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

”தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்” : திமுக எம்.பிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (08-06-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்று, கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்ற முறையில் இன்னும் பெருமையாக இருக்கிறது.

நாற்பதுக்கு நாற்பது என்று சொல்லி பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கினேன். நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியை அடைந்து விட்டோம். நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. 2004-ஆம் ஆண்டு - இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர் கலைஞர் நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி இது. அந்த வெற்றியை நாம் பெற்றுள்ளோம்.

இப்போது நாம் அடைந்துள்ள வெற்றிக்கு மிக முக்கியமான சிறப்பு உண்டு. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 39 தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடிந்தது. ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது வென்றுவிட்டோம். இரண்டாவது தேர்தலில், முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும்.

இந்தச் சாதனை வரலாற்றில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்களுக்கு உள்ள பெருமை ஆகும். நாடாளுமன்றத்தில் அதிக அனுபவம் கொண்ட டி.ஆ.பாலு முதல் - முதல் முறை எம்.பி.யாகும் பலரும் இங்கு இருக்கிறீர்கள். மிகமிகக் குறைந்த வயதில் அருண் நேரு பெரம்பலூர் எம்.பி. ஆகி உள்ளார். இப்படி அனைவரும் இருக்கிறீர்கள்.

வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உங்களுக்கு இத்தகைய பெரிய வாய்ப்பை அளித்த கழகத்துக்கும் - உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகமிக உண்மையாக இருங்கள். இதுதான் கழகத் தலைவர் என்கிற முறையில் நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும்.

உங்கள் அனைவருக்கும் நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கொள்கைக் குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி செல்லும் நீங்கள் - என் பெயரையும் கழகத்தின் பெயரையும் காப்பாற்ற வேண்டும். ஒரு சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். அதே நேரத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல - ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்கு செல்வாக்கைக்கூட பாஜக அடைய வில்லை.

370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240-க்கு இறங்கி விட்டது பாஜக. இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும். ஏராளமான வாக்குறுதிகளை நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அதனைச் செயல்பட வைக்க வேண்டும். பலவீனமான பாஜக அரசை, நம்முடைய முழக்கங்களின் மூலமாக செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் இருக்கிறது.

நமது கழகத்தின் தேர்தல் அறிக்கையைப் படியுங்கள். கழகத்தின் கடந்தகால நிலைப்பாடுகளை உணர்ந்து, தெரிந்து உரையாற்றுங்கள். நாடாளுமன்ற விவாதங்களைப் படியுங்கள். நாடாளுமன்றத்துக்குத் தவறாமல் போகவேண்டும். முழுமையாக இருந்து, அனைவர் பேச்சையும் கேளுங்கள்.

கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த முறை 234 உறுப்பினர்கள் இருக்கப் போகிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். இந்த வாய்ப்பை ஆக்க பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

”தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்” : திமுக எம்.பிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களது செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் டெல்லி பயணத்துக்கேற்ப,

* பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி நன்றி அறிவிப்புக்கான சுற்றுப்பயணத் திட்டத்தை விரைவில் தயார் செய்யுங்கள். அனைத்து பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். சுற்றுப்பயண விவரத்தை விரைவில் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

* அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கான அலுவலகத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

* தொகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களை தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுங்கள். நீங்கள் தொகுதியில் இருக்கும் நாட்களில் உங்கள் அலுவலகங்களில் மக்களைச் சந்திக்கும் நேரம் எப்போது என ஒட்டப்பட வேண்டும். அந்தெ நேரத்தில் மக்கள் சந்திக்க வந்தால் உங்களைச் சந்திக்கும் நிலை இருக்க வேண்டும்.

உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பது மிகமிக முக்கியமானது. பலத்த போட்டிகளுக்கு மத்தியில் உங்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உங்கள் மீதும், என் மீதும், கழகம் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். இவற்றின் மதிப்பு என்பது மதிப்பிட முடியாதது. மதிப்பிட முடியாத பொறுப்பு உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. இதனைக் காப்பாற்றும் வகையில் மக்களைக் காக்கும் பணியை நீங்கள் அனைவரும் செய்து கழகத்துக்கும் எனக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் முழுமையாக வெற்றியைப் பெற்று அவருக்கு காணிக்கை ஆக்குவோம் என்று சொன்னேன். அதைச் செய்து காட்டிவிட்டோம். அவரின் உடன்பிறப்புகள் தான் நாம் என்பதை செயலால் காட்டுவோம் என்று கூறி, இந்த வெற்றியை இலட்சக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் எல்லாரும் எழுந்து நின்று பலமாகக் கைதட்டுவோம்!

banner

Related Stories

Related Stories