வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வினை ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலைஉருவாக்கவும் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 22,931 திறன்மிகுவகுப்பறைகள் (Smart Classrooms)ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46,12,742 மாணவ – மாணவிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் 6,023 அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் 20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நாளிதழகள் பலவும் இன்று செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த செய்திகளை குறிப்பிட்டு, திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி.
20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'Smart' வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.