"தமிழ் மக்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்ற தெளிவைக் கொண்டவர்கள் என்பதை, மத உணர்வைத் தூண்ட விரும்புவோர் புரிந்து கொள்ள வேண்டும்; ஆனால், பா.ஜ.க. அதைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் 100 ஆண்டுகள் ஆகும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (25-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, திருவண்ணாமலையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
முதலில் நீங்கள் எல்லாம் தந்திருக்கும் சிறப்பாக உற்சாகமான இனியதொரு வரவேற்பிற்கு நன்றி. இப்போது கருத்துக்கணிப்புக்களில் தி.மு.க 170, 180, 190 இடங்களில் வெல்லும் என்று போடுகிறார்கள். நான் 200 என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இந்த கூட்டத்தை பார்த்த பிறகு 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம் என்ற உணர்வு எனக்கு வந்துவிட்டது.
ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல, எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உரிமையாக பங்கேற்கும் ஸ்டாலின்தான் உங்களிடத்தில் ஆதரவு கேட்டு, வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன்.
நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.
திருவண்ணாமலைத் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக எ.வ.வேலு அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் ஏற்கனவே உங்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் அமைச்சராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறார். இன்றைக்கு மாவட்டக் கழகத்தை வழிநடத்துபவர். இவ்வளவு சிறப்புகளும் பெருமைகளும் உண்டு. எல்லாவற்றையும் விட தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப் பெற்றவர். கலைஞர் ஒரு முறை எ.வ. என்றால் எதிலும் வல்லவர் என்று சொன்னார்கள். அப்படிப்பட்டவரைத்தான் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக போட்டியிடும் கு.பிச்சாண்டி அவர்கள், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் பொறுப்பேற்று பணியாற்றி இருப்பவர். கழகத்தில் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். அவர் இளைஞரணியில் பொறுப்பேற்று பணியாற்றி, அதற்குப்பிறகு மாவட்டக் கழகத்தின் பொறுப்பை ஏற்று கழகத் தோழர்களின் உள்ளங்களில் சிறப்புக்குரிய இடத்தைப் பெற்றவர். அந்தத் தொகுதி மக்களிடத்தில் ஒரு நற்பெயரைப் பெற்றவராக விளங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், செங்கம் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் மு.பெ.கிரி அவர்கள், எந்த அளவிற்கு உங்களோடு, அந்த தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்து இருக்கிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், போளூர் தொகுதியில் கே.வி.சேகரன் அவர்கள், ஏற்கனவே அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பணியாற்றி இருப்பவர். அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. எதற்காக அவரை மட்டும் சொல்கிறேன் என்றால், அவருடைய அயோக்கியத்தனத்தை, ஊழலை, ஊதாரித்தனத்தை அம்மையார் ஜெயலலிதா அறிந்து, அமைச்சராக இருந்த அவரை பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்ல, மாவட்டப் பொறுப்பிலிருந்தும் நீக்கினார். ஜெயலலிதா மறையும் வரை அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தான் பன்னீர்செல்வம் – பழனிசாமி இருவரும் சேர்ந்து அம்மையார் ஜெயலலிதா அவர்களால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கிவைக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முக்கியத்துவம் தந்து போளூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே அவரை ஜெயலலிதா எந்த அளவிற்கு ஒதுக்கி வைத்தாரோ, அதேபோல, நிச்சயமாக அந்த தொகுதியில் இருக்கும் மக்களும் ஒதுக்கி வைப்பார்கள். எனவே அவரை எதிர்த்து கழகத்தின் சார்பில் போட்டியிடும் கே.வி.சேகரனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், வந்தவாசி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக அம்பேத்குமார் அவர்கள், கடந்த முறை வந்தவாசி தொகுதியில் நின்று வென்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அந்த தொகுதிக்கு பல நன்மைகளை, பல திட்டங்களை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்திருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், கலசபாக்கம் தொகுதியில், இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த நம்முடைய பெ.சு.திருவேங்கடம் அவர்களின் அருமை மகன் சரவணனைத் தேர்வு செய்திருக்கிறோம். எவ்வாறு திருவேங்கடம் அவர்கள் இந்த தொகுதி மக்களுடன் இரண்டறக் கலந்திருக்கிறாரோ, அதே போல ஒன்றிய கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று அங்கு இருக்கும் கழகத் தோழர்கள், பொது மக்களுடைய உள்ளங்களில் சிறப்பான இடத்தை பெற்றவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஆரணி தொகுதியில் கழக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், செய்யாறு தொகுதியில் கழக வேட்பாளர் ஜோதி, ஒன்றிய குழு தலைவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என்ன சிறப்பு என்றால் 8 தொகுதிகளிலும் உதயசூரியன் நிற்கிறது. எனவே உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம்முடைய வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
1989-இல் இந்த மாவட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் என்று தனி மாவட்டமாக உருவாக்கித் தந்தார்கள். அவருடைய மகன் ஸ்டாலின் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பல்வேறு வாக்குறுதிகளை நாம் வழங்கி இருக்கிறோம்.
ஆலயங்கள் குடமுழுக்கிற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். கோவில்கள் மற்றும் அறநிலையங்கள் பாதுகாப்புப் பணிகளில் 25,000 திருக்கோவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். முக்கிய கோவில்களில் கேபிள் கார் வசதி செய்து தரப்படும். அனைத்துக் கோயில் தெப்பக்குளங்களும் தூர்வாரப்பட்டு நிரப்பப்படும். தமிழக கோவில்களின் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும். கோவில் நிர்வாகம் சிறப்பாக நடக்க உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும். கோவிலில் பணியாற்றும் பகுதிநேர ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி பயிற்சி முடித்த 205 அர்ச்சகர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்படும். ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 வரை வழங்கப்படும், சாதி, சமய நல்லிணக்கம் பேண அருட்பிரகாச வள்ளலார் பெயரில் வடலூரில் சர்வதேச மையம் அமைக்கப்படும். புனித நகரங்களில் சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும். பழனியில் கேபிள் கார். பூசாரிகள் நல வாரியத்தில் இணைந்துள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் 2000 வழங்கப்படும். 60 வயதில் ஓய்வு பெறும் பூசாரிகள் ஓய்வூதியமாக 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டு இரு பக்கமும் பசுமையான சூழல் உருவாக்கப்படும். திருவண்ணாமலை மலைப்பகுதி முழுவதும் பசுமைக் காடுகள் வளர்த்திட ஆவன செய்யப்படும். திருவண்ணாமலை தேரோடும் வீதி முழுவதும் சிமெண்ட் கான்கிரீட் சாலை. திருவண்ணாமலை தேர் செல்லும் வசதிக்காக மின் கம்பிகள் அனைத்தும் தரையில் புதைவட மின் பாதையாக மாற்றித் தரப்படும். இவ்வாறு ஆன்மீகப் பணிகளைச் சிறப்பாக செய்ய காத்திருக்கும் ஆட்சிதான் என் தலைமையில் அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
ஆனால் எப்போதும் தேர்தல் வரும் நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று நினைக்கின்ற சில தலைவர்கள், சில அயோக்கியர்கள், ‘தி.மு.க. இந்துக்களுக்கு விரோதி’ என்று ஒரு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்துவது உண்டு.
நான் பணிவோடு - உறுதியோடு சொல்ல விரும்புவது, யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக இருப்பது தி.மு.க. அல்ல. எனவே அமையவிருக்கும் என்னுடைய அரசும் அனைவர் உணர்வுக்கும் மதிப்பளிக்கும். எல்லோரையும் மதித்துத்தான் என்னுடைய ஆட்சி நடக்கும் என்ற உறுதியை நான் இந்தத் திருவண்ணாமலையில் நின்றுகொண்டு சொல்ல விரும்புகிறேன்.
மத உணர்வுகளைத் தூண்ட விரும்புவோர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தமிழ்நாடு. எங்கள் தமிழ் மக்கள் அரசியல் வேறு - ஆன்மீகம் வேறு என்று தெளிவு கொண்டவர்கள். இதை பா.ஜ.க. புரிந்துகொள்ள இன்னும் 100 ஆண்டுகள் ஆகும். அவர்கள் அறிவில்லாதவர்கள். அவர்கள் எதையும் யோசிக்க மாட்டார்கள் - சிந்திக்க மாட்டார்கள். அதனால்தான் இப்போதும் தமிழகத்தில் நடக்கின்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை இந்தியில் வெளியிட்டார்கள். அதாவது இந்தி பேசும் மக்களுக்கான ஆட்சிதான் அது.
இந்தியைத் தமிழ்நாட்டில் திணிப்பது, இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாட்டில் வேலைக்குள் நுழைப்பது அதன் மூலமாக பா.ஜ.க.வை வளர்த்து விடலாம் என்று ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு இங்கே இருக்கும் பழனிசாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம்.
ஆனால் தி.மு.க.வோ, தமிழ்நாட்டு மக்களோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை மட்டும் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தனிப்பட்ட எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை. இந்திக்கு என்றைக்கும் தி.மு.க. எதிரி அல்ல. ஆனால் இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் கோரிக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல வடமாநிலத்தவரை நான் வெறுக்கவில்லை. அதே சமயத்தில் கல்வி வேலை வாய்ப்புகளை நம்முடைய தமிழர்களுக்குத்தான் தரவேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறிக்கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களுக்கு நாம் கூட்டமாக வேலைக்குச் செல்ல முடியுமா? முடியாது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த மாநில மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து கொண்டிருக்கிறது. அதே போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடாதா?
புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி குலக் கல்வியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இன்றைக்கு பா.ஜ.க. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதை இங்கே இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி தடுக்கவில்லை.
நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு இடம் குறைந்துவிட்டது. இப்போது மாநில அரசு தேர்வுகளையும் மத்திய அரசு பொதுத் தேர்வாக நடத்தும் என்று சொல்கிறார்கள். இது என்ன அநியாயம்.
வடமாநிலத்தவரைத் தமிழ்நாட்டில் திணிக்கப் பார்க்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து பார்த்து உருவாக்கிய தமிழகத்தைச் சிதைக்க பார்க்கிறார்கள். தலைகொடுத்தாவது தமிழகத்தை நிச்சயமாக தி.மு.க. பாதுகாக்கும். நம்முடைய ஆட்சி பாதுகாக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தத் தேர்தல் மூலமாக நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்கிறோம். அது பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக அல்ல, அப்போதுதான் இதுபோன்ற அயோக்கியத்தனங்களைத் தடுக்க முடியும். நம்முடைய தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பற்ற முடியும்.
நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். இந்தத் தேர்தலை வெறும் தேர்தலாக மட்டும் கருதாதீர்கள். நம்முடைய கொள்கையைக் காப்பாற்ற, நாம் கட்டி அமைத்திருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற நடக்கின்ற போர். அந்தப் போரில் நாம் வெற்றி கண்டாக வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும், எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க. வெற்றி பெறப்போவதில்லை. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று வந்து விடக்கூடாது. ஏன் என்றால் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றால் கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அல்ல, பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக தான் இருப்பார்.
அதற்கு ஒரு உதாரணம், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். தேனி தொகுதியில் மட்டும் ஓ.பி.எஸ். மகன் வெற்றி பெற்றார்.
அவர் வெற்றி பெற்று இன்றைக்கு அ.தி.மு.க. எம்.பி.யாக இல்லாமல் பாஜக எம்.பி.யாக இருக்கிறார். எம்.பி.க்கள் எப்போதும் அவர்களுடைய லெட்டர் பேடில் அவரவர் கட்சித் தலைவரின் படத்தைத்தான் போடுவார்கள். ஆனால் அவர் மோடியின் படத்தைப் போட்டிருக்கிறார். அதனால்தான் 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறேன்.
அது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களுக்கு இன்றைக்கு பா.ஜ.க. வும் – அ.தி.மு.க.வும் சேர்ந்து பல்வேறு வகைகளில் துரோகம் செய்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். நாம் கோரிக்கை வைத்தது மட்டுமல்ல, நானே பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
ஐ.நா. சபையில் நடக்கும் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தை நீங்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பி வைத்தோம். ஆனால் அந்தக் கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு செய்து விட்டது.
நினைத்துப் பாருங்கள். இதே பிரச்சினை 2012-இல் வந்தது. அப்போது மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. அதில் தி.மு.க. அமைச்சர்கள் இருந்தார்கள்.
அப்போது தி.மு.க.வின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள், அன்னை சோனியா காந்தி இடத்தில் - பிரதமர் மன்மோகன் சிங் இடத்தில், “இந்தப் பிரச்சினை வருகிற போது நீங்கள் உடனே அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் - வாக்களிக்க வேண்டும் - கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் உங்களுடைய அமைச்சரவையில் இருக்க மாட்டோம். அத்தனை பேரும் ராஜினாமா செய்து விடுவோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, அதற்குப் பிறகு இந்தியா அன்றைக்கு ஐ.நா. சபையில் இந்தப் பிரச்சினையை எதிர்த்து வாக்களித்தது. அதுதான் தி.மு.க. அதுதான் கலைஞர்.
தமிழ்நாடு சொன்னதை அன்றைக்கு டெல்லி கேட்டது. ஆனால் இன்றைக்கு டெல்லி சொல்வதை தமிழ்நாடு கேட்டுக்கொண்டிருக்கும் நிலைதான் உருவாகியிருக்கிறது.
அ.தி.மு.க. – பா.ம.க .கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதா? அவமதித்திருக்கிறார்கள். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி கண்டித்தாரா? இது தவறு என்று வாதிட்டாரா? இதுகுறித்து வருத்தப்படுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறாரா? இல்லை.
இரண்டு பேரும் தேர்தல் கூட்டணி வைத்திருக்கிறார்கள். அவ்வாறு கூட்டணி வைத்திருக்கும் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவதற்கு வருகின்ற ஆறாம் தேதி நடைபெறும் தேர்தலில் நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் இதே திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாம் செய்திருக்கும் சாதனைகள் திட்டங்களை எல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
கலைஞருடைய ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டத்திற்கு எவ்வளவோ பெருமைக்குரிய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அதில் தலைப்புச் செய்தியாக சில, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம். தனி போக்குவரத்து மண்டலம். 120 கோடியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி. செய்யாறு சிப்காட் தொழிற்சாலை. ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம். திருவண்ணாமலை மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டம். 10,000 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா. தண்டராம்பட்டு தனி தாலுகாவாக அமைத்தது. ரூ.50 லட்சத்தில் புதிய சேமிப்பு கிடங்கு. கலசபாக்கம் தொகுதியில் 60 கோடியில் பால் பவுடர் தொழிற்சாலை. போளூர் - செண்பகத்தோப்பு அணை. வந்தவாசி - தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரி புதிய கட்டடம் 8 கோடியே 50 லட்சம். ஆரணியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி. புதிய நீதிமன்ற வளாகம். 12 உழவர் சந்தைகள். 9 சமத்துவபுரங்கள்.
நான் இவ்வாறு ஒரு பட்டியல் போட்டேன். கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களால் இதுபோன்று பட்டியல் போட முடியுமா? இதையெல்லாம் நாங்கள் செய்து இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்கின்ற அருகதை – யோக்கியதை பழனிசாமிக்கு இருக்கிறதா?
எப்போதுமே தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது இரண்டு வார்த்தைகளைச் சொல்வார், “சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்“ என்று அதேபோல, அவருடைய மகன் இந்த ஸ்டாலினும் “சொன்னதைச் செய்வான், செய்வதைத்தான் சொல்வான்”
நம்முடைய தேர்தல் அறிக்கையில் விலைவாசியைக் குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், கொரோனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாய், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ஜூன் 3-ஆம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும், மகளிர் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும், இளைஞர்களுக்கு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஆட்டோ வாங்குவோருக்கு 10,000 ரூபாய் மானியத் தொகை வழங்கப்படும் என்பதையும் அறிவித்திக்கிறோம்.
மேலும் இந்த மாவட்டத்திற்காக, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்யப்படும். நந்தன் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செங்கம், சேத்துப்பட்டு, செய்யாற்றில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். திருவண்ணாமலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி; நெல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, பெரணமல்லூர், சேத்துப்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கத்தில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். ஆரணி, சேத்துப்பட்டு, போளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள். ஆரணியில் பட்டு ஜரிகை தயாரிப்புத் தொழிற்சாலையும் ஜவுளிப் பூங்காவும் அமைக்கப்படும். ஆரணி, செய்யாற்றில் புதிய பேருந்து நிலையங்கள். செய்யாற்றில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். வந்தவாசியில் பாலிடெக்னிக் கல்லூரி. கீழ்பெண்ணாத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம்; சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்குச் சிலை. செங்கம், கலசப்பாக்கம், தண்டராம்பட்டில் நறுமணத் தொழிற்சாலைகள். கலசப்பாக்கம், செய்யாறு, செங்கத்தில் குளிர்பதனக் கிடங்குகள். கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம் ஆகிய ஊர்களில் உணவுப் பொருள் பாதுகாப்புக் கிடங்குகள்; பெரணமல்லூரில் தானியக் கிடங்கு. மேல்செங்கத்தில் அரசு வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும். தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தனூர் கூட்டுக் குடிநீர் திட்டம் கடலாடி, கீழ்பாலூர், மேல்பாலூர் ஆகிய ஊர்களுக்கு விரிவுபடுத்தப்படும். ஜவ்வாது மலைவாழ் மக்கள் நலவாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும், நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.
ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்‘ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன்.
அந்த 7 வாக்குறுதிகளை அறிவிக்கும்போது இது பேரறிஞர் அண்ணா மீது – தலைவர் கலைஞர் மீது – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணை என்று எப்படி உறுதிமொழி தந்தேனோ, அதனை மீண்டும் இப்போது நினைவு படுத்துகிறேன்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் பிறந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. எனவே தமிழக மக்கள் யோசிக்க வேண்டும். நம்முடைய மாநில உரிமைகள் பறி போய்விட்டது. நாம் இன்றைக்கு அடிமையாக இருக்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைகளை இன்றைக்கு டெல்லியில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே அதை மீட்க வேண்டும். அந்த உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்ததத் தேர்தலைப் பொறுத்தவரையில் நாம் வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நடக்கிறது. அது வேறு.
ஆனால் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல இது. நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்துவிடக்கூடாது. நம்முடைய தன்மானத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.
மாநில சுயாட்சிக்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கும் நிலை. அதைத் தடுக்கும் தேர்தலாக இதைக் கருத வேண்டும். எனவே மாநில உரிமைகளைப் பாதுகாக்க, விவசாயிகள் வாழ்க்கை செழிக்க, நம்முடைய தன்மானத்தைப் பாதுகாக்க, இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் முழுமையான வெற்றியைக் காண, உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல இன்றைக்கு திருவாரூர் ஆழித்தேர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் கலைஞர் ஓட்டியது தான். அதேபோல அண்ணாமலையார் கோயிலைத் தொல்லியல் துறைக்கு எடுக்க முயற்சித்தார்கள். அதையும் தடுத்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
எனவே பா.ஜ.க. கோயில்களை மூட நினைக்கிறது. ஆனால் இந்துக்களுக்கு விரோதி என்று அவர்களால் சொல்லப்படும் தி.மு.க., கோயில்களைத் திறக்க முயற்சிக்கிறது. இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். எனவே அத்தகைய தி.மு.க.விற்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
கலைஞர் எப்போதும் உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று சொல்வார். அவ்வாறு அவர் அழைப்பது கழகத் தோழர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களையும்தான் கலைஞர் அப்படி அழைத்தார்.
எனவே இந்தத் தமிழகம் மீட்கப்பட, நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இங்கு இவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல, நானும் ஒரு வேட்பாளர் தான். முதலமைச்சர் வேட்பாளர். இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி. வணக்கம்.
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.