“கோரிக்கைகள் அடங்கிய இந்தப் பெட்டி பணப்பெட்டி அல்ல பழனிசாமி அவர்களே, கடந்த நான்காண்டு காலமாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்பதற்கு ஆதாரமான மக்களின் மனப்பெட்டி” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
இன்று (20-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் – பஸ் ஸ்டாண்ட் எதிரில், தேன்மலர் பள்ளி அருகில் நடைபெற்ற, திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:
செல்வம் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
மடத்துக்குளம் தொகுதியைச் சேர்ந்த செல்வம் அவர்கள் இங்கே பேசியதை கேட்டீர்கள். அவர் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர். ஆனால் அவருக்கு பட்டியலினச் சான்றிதழ் மட்டுமே இருக்கிறது. அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பல அரசு சலுகைகள், உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை இங்கு குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார். நிச்சயமாக அவருடைய கோரிக்கைகள் ஆராயப்பட்டு அவருக்கு தக்க சான்றிதழ்கள் வழங்கப்படும். இன்னும் 3 மாதங்கள் மட்டுமே பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை நாமே நடத்தி வைக்கிறோம். எனவே உங்களுடைய உரிமைகள் காக்கப்படும். நீங்களே, நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதேபோல, நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதனால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
ஈஸ்வரன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
அமராவதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை தர வேண்டிய 5 கோடி ரூபாயை நிலுவைவில் வைத்திருக்கிறது என்று ஈஸ்வரன் அவர்கள் கூறினார். அதை மனுவிலும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அந்த சர்க்கரை ஆலைக்கு அரசு தருவதாக அறிவித்த 25 கோடி ரூபாய் நிதியும் இன்னும் தராமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு காண்பித்திருக்கிறார். ஏற்கனவே இதே போல நம் கூட்டத்தில், எப்படி இங்கு ஈஸ்வரன் சொன்னாரோ, அதேபோல இதே குறையை பலரும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். இப்போது அந்த செய்தியை கேள்விப்பட்டு அங்காங்கே கொஞ்சம் நிலுவைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகவே உங்களுக்கும் ஒரு உரிய நிலுவைத்தொகை நிச்சயமாக வழங்கும் என்று நம்புகிறேன். அப்படி தராத பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் தி.மு.க ஆட்சி அமையும் போது உங்களுக்கு நிச்சயமாக உங்கள் குறைகள் களையப்படும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சினேகா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
சினேகா அவர்கள் பயோ டெக்னாலஜி படிப்பை முடித்துவிட்டு தேங்காய் சார்ந்த பொருட்களை இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் அரசு தங்களைப் போன்றவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதனால் தங்கள் தொழில் பாதிப்படைந்ததாக சினேகா அவர்கள் இங்கேயும் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய மனுவிலும் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார். நிதியமைச்சர் ‘தற்சார்பு இந்தியா’ என்ற பெயரில் பல்வேறு பேக்கேஜ் திட்டங்களை அறிவித்திருந்தாலும், கஷ்டப்பட்டு வந்த தொழில் முனைவோர்களுக்கு எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. எந்த வங்கியும் இவர்களுக்கு தேவையான காலத்தில் கடன் கொடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் உங்களைப்போன்ற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தேவையான பயிற்சியும், ஊக்குவிப்பும், உதவியும் நிச்சயமாக தி.மு.க. செய்யும் என்ற நம்பிக்கையை, உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிதம்பரம் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சிதம்பரம் அவர்கள் பேசினார். மின்சாரத் தடம் கொண்டு செல்வதற்காக பல விவசாயிகளின் வேளாண்மை நிலங்கள் குறைந்த விலையில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று சொன்னார். இப்படித்தான் விவசாயிகளின் ஒப்புதல் பெறாமலேயே விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்ததால் பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் 13 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள். விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பததனால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டினார், நம்முடைய சிதம்பரம் அவர்கள். இவ்வாறு மின் கோபுரங்கள் அமைத்தால் அங்கு கிணறு கூட அமைக்க முடியாது. இதனால் நாளடைவில் விளைநிலங்கள் எல்லாம் வறண்ட பூமியாக மாறிவிடும் என்பதையும் சொன்னார். ஆகவே இது போல மக்களுடைய ஒப்புதல் இல்லாமல், அவர்களுடைய ஆலோசனை கேட்காமல் திட்டங்களை நிறைவேற்றும் போக்கை அரசு நிச்சயம் கைவிட வேண்டும். இது தொடர்பான விவசாயிகளின் குறைகளை உணர்ந்து அமையவிருக்கும் தி.மு.க. அரசு கவனத்துடன் செயல்படும் என்பதை நம்முடைய சிதம்பரம் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நாச்சிமுத்து என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் கட்டவேண்டிய ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகள் கட்டப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இந்த திட்டங்களை நிறைவேற்ற தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிவிட்டது. திட்ட அறிக்கை நிதி குறித்து அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் இந்த 2 திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல விவசாயிகளின் மற்றொரு பிரச்சினையான கீழ்பவானி கான்கிரீட் திட்டம் குறித்து ஆட்சிக்கு வந்தவுடன், அந்தப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்து பேசி அவர்களிடத்தில் கருத்துகளைப் பெற்று நிச்சயமாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நம்முடைய நாச்சிமுத்து அவர்கள் மூலமாக மடத்துகுளம் தொகுதியில் இருக்கும் மக்களுக்கு மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“தமிழர்களே… தமிழர்களே…! என்னை நீங்கள் கடலில் தூக்கி வீசினாலும் அதில் கட்டுமரமாகத்தான் நான் மிதப்பேன்! அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்!
தமிழர்களே… தமிழர்களே…! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும் அதில் விறகாகத்தான் நான் விழுவேன்.அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்!
தமிழர்களே… தமிழர்களே..! நீங்கள் என்னைப் பாறையிலே மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன். நீங்கள் என்னை எடுத்து தின்று மகிழலாம்!” - என்று தமிழ்ச்சமுதாயத்துக்காக தன்னையே உருக்கி உழைத்த தலைவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவரது வழியில் நின்று, என்னை இந்த தமிழ்ச்சமுதாயத்துக்காக ஒப்படைத்துக் கொண்டு உழைத்து வருகிறேன்.
கழகத்தின் மீதான நம்பிக்கையால் - கலைஞர் மீதான பற்றால் - என் மீதான அன்பால் - இங்கே நீங்கள் திரண்டு இருக்கிறீர்கள். உங்கள் கவலைகளை - உங்களது கோரிக்கைகளை - உங்களது எதிர்பார்ப்புகளை - என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்.
ஆனால் தினந்தோறும் தனது பிரச்சாரத்தில் இதனைக் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. ஸ்டாலின் ஊர் ஊராகப் பெட்டியை தூக்கிக் கொண்டு போகிறார் என்று சொல்லி இருக்கிறார். பெட்டி என்றாலே பழனிசாமிக்கு பணப் பெட்டிதான் நியாபகத்துக்கு வருகிறது. அவருக்கு 24 மணிநேரமும் பணத்தில் தான் குறியாக இருப்பார். அதனால் அதே நினைப்பாகத்தான் இருப்பார். இது பணப்பெட்டி அல்ல, பழனிசாமி அவர்களே! மக்களின் மனப்பெட்டி; மக்களின் மனச்சாட்சிப் பெட்டி! உங்களது மனக்கோட்டையை உடைக்கப் போகிற பெட்டி இதுதான். வாக்குப்பெட்டிக்கு முன்னதாகவே பழனிசாமியின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போடப் போகும் பெட்டி இதுதான்.
கோட்டையில் உட்கார்ந்து இருக்கும் பழனிசாமி, இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்பதற்கு ஆதாரமே இந்தப் பெட்டிதான். பழனிசாமி உதவாக்கரை, என்பதை உணர்த்தும் பெட்டி தான் இந்தப் பெட்டி தான். இந்தப் பெட்டி திறக்கப்படும் போது, அ.தி.மு.க ஆட்சி என்பது இதில் வைத்து மூடப்படும் என்பதை மறந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஆட்சி முடிய இன்னும் மூன்றே மாதம் தான் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அத்தோடு பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னால் வானத்தை தொடும் அளவுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார் பழனிசாமி.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கப் போகிறாராம். கடந்த நான்கு ஆண்டுகளில் என்ன செய்து கிழித்தார்? அடுத்த நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை தரப்போகிறாராம். கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார்? ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானத்தை கீறி வைகுண்டம் காட்டுவேன்' என்றாராம். அப்படி இருக்கிறது பழனிசாமி அவர்களின் பேச்சு.
2030-ஆம் ஆண்டு தமிழக உற்பத்தித் துறை பங்குகளை 30 சதவிகிதம் ஆக்குவோம் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. மிஸ்டர் பழனிசாமி அவர்களே! 2021 ஆம் ஆண்டு என்ன நிலைமை? அதைச் சொல்லுங்கள்! 2006 -2011 தி.மு.க ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி என்பது 19.64 சதவீதம். இன்று எடப்பாடி ஆட்சியில் பாதியாக குறைந்துவிட்டது. 9.10 சதவீதம் தான். கழக ஆட்சியில் 2009 - 2010 ஆகிய ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி என்பது 28.66 சதவீதமாக இருந்தது. அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இப்போது இல்லை.
கழக ஆட்சியில் உபரி நிதி இருந்தது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் பற்றாக்குறை தான் இருக்கிறது. பழனிசாயின் ஒரே சாதனை என்ன என்றால், தமிழகத்தின் கடனை அதிகப்படுத்தி சாதனை செய்துள்ளார். 2011-ஆம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் தொகையை 5 லட்சம் கோடியாக மாற்றிவிட்டார். குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். 2016-ஆம் ஆண்டு 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி, 2017-ஆம் ஆண்டு 3 லட்சத்து 14 ஆயிரம் கோடி, 2018-ஆம் ஆண்டு 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி, 2019-ஆம் ஆண்டு 3 லட்சத்து 97 ஆயிரம் கோடி, 2020-ஆம் ஆண்டு 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி என்று கடன் தொகை அதிகமாகி வந்துள்ளது. அதாவது கடன் வாங்கி கஜனாவாவுக்கு கொண்டு வருவது. வந்த பணத்தை தனது சம்பந்திக்கு பழனிசாமி டெண்டர் கொடுப்பது. வேலுமணி தனது பினாமிகளுக்கு டெண்டர் கொடுப்பது என்று இறங்கி உள்ளார்கள். கடன் வாங்கிய பணத்தை வைத்து ஏதாவது புதிய தொழில் தொடங்கி வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார்களா என்றால் இல்லை!
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக்கும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கான இடத்துக்கும் உத்தரவாதம் தராத ஆட்சியாக பழனிசாமி ஆட்சி இருகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2017-ஆம் ஆண்டுமுதல் ரயில்வே, அஞ்சல்துறை, என்.எல்.சி, பாரத மிகு மின் நிலையம், வருமானவரித் துறை, உளவுத் துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருவதையே புள்ளிவிவரங்கள் சொல்கிறது. தெற்கு ரயில்வேயின் அடிப்படை தொழில்களுக்கான வேலை வாய்ப்பில் கூட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
நெய்வேலி நிறுவனத்தை உருவாக்க நிலம் கொடுத்தவர்கள் அதனைச் சுற்றி உள்ள கிராமத்து மக்கள். ஆனால் அவர்களுக்கு வேலைகள் கிடைப்பது இல்லை. வடமாநிலத்தவர்கள் அதிகமாக வேலையில் சேர்க்கப்படுகிறார்கள். சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் சமீபத்தில் 42 பேரை தேர்வு செய்தனர். அவர்களில், ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை! இதுதான் தமிழ்நாடு. பேரில் தான் தமிழ்நாடு என்று இருக்கிறதே தவிர, தமிழர்களுக்கு வேலை மறுக்கும் நாடாக இருக்கிறது.
தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். புதிய வேலை வாய்ப்புகளை மாநில அரசும் உருவாக்கவில்லை. மத்திய அரசுப் பணிகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவில்லை. இது தான் பழனிசாமியின் அரசாங்கம். தி.மு.க அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். ஏற்கனவே இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து அதை மினி கிளினிக்குகளாக மாற்றி வரும் பழனிசாமி, நாளைய தினம் ஒரு திட்டத்தை தொடங்கி வைக்கப் போகிறார். அதுவும் கழகம் தொடங்கிய திட்டம் தான். அதை மீண்டும் தொடங்கி தனது திட்டம் போல காட்ட நினைக்கிறார். இதைப் போல வெட்கம் கெட்ட செயல் வேற எதுவும் இருக்க முடியாது.
காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகளை இணைக்கப் போவதாகவும் அதற்கு பழனிசாமி அடிக்கல் நாட்டப் போவதாகவும் அ.தி.மு.க அரசு விளம்பரம் செய்கிறது.
ஏற்கனவே தி.மு.க அரசால், முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 25.6.2008 ஆம் நாள் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தை பழனிசாமி இப்போது புதிய திட்டம் போல பச்சை பெயிண்ட் அடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
29.5.2007 ஆம் நாள் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பேசும்போது, ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்துக்குள் உள்ள நதிகளை இணைக்கும் போது அதற்கான நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனை அந்தக் கூட்டம் ஏற்றுக் கொண்டு, அப்படி திட்டங்கள் தீட்டப்பட்டால் மத்திய அரசு நிதி வழங்கும் என்று தீர்மானம் போடப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார்கள். 22.2.2008 ஆம் நாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் அவர்கள் பதில் அனுப்பினார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்று அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள். 20.3.2008 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள்,
''வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவிரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்" - என்று அறிவித்தார்.
முதல் கட்டமாக 165 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். திட்டப் பணிகளை திருச்சியில் வைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் கலைஞர். அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சி ஒவ்வொரு முறையும் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் என்று சொல்லுமே தவிர பத்தாண்டு காலமாக எதுவும் செய்யவில்லை. கடந்த பட்ஜெட்டில் 700 கோடி ரூபாயை ஒதுக்கினார்களே! என்ன செய்தார்கள்? எதுவும் இல்லை!
3620 ஏக்கர் நிலத்தை கைகப்படுத்தப் போவதாகச் சொன்னார்களே! செய்தார்களா? இல்லை! இந்தச் சூழ்நிலையில் இப்போது மறுபடியும் காவிரி என்றும் குண்டாறு என்றும் பழனிசாமி பேசுகிறார். ஏற்கனவே முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்ட திட்டத்தை பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு, ஆட்சி முடிய இரண்டு மாதம் இருக்கும் நிலையில் 7000 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்குவது யாரை ஏமாற்றுவதற்கு? என்பதுதான் என்னுடைய கேள்வி.
ஏழை எளிய மக்கள், குறிப்பாக பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடனை ரத்து செய்வோம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். 5 பவுன் வரை வைத்து வாங்கிய கடன்கள் ரத்து என்று சொல்லி இருந்தேன்.
இதே போல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வாங்கிய கடனையும் கழக அரசு அமைந்ததும் தள்ளுபடி செய்யும் என்று இன்று காலையில் பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தேன். அதையே இப்போதும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை செயல்பட விடவில்லை. அவர்களுக்கு தேவையான கடனுதவி வழங்கவில்லை. அப்படி வழங்கினாலும் அது அவர்களது தொழில்வளர்ச்சிக்கு உதவி செய்வதாக இல்லை. இந்த நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவின் நோக்கத்தையே சிதைத்துவிட்டார்கள்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் அவர்களுக்கு தரப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும். மகளிர் நலன்கள் கழக ஆட்சியில் பாதுகாக்கப்படும். சுயமாய் மகளிர் வாழ்வதற்கான உத்தரவாதத்தை கழக அரசு வழங்கும். பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் மகளிர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து அவர்களுக்கான நீதி உடனடியாக வழங்கப்படும்.
கடந்த ஜனவரி 25 ஆம் தேதி காலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் முன்னால் நான் ஒரு சபதம் எடுத்தேன். “மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”. இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதிமொழி! அந்த உறுதிமொழியின் படி உங்கள் பிரச்னைகளை 100 நாளில் தீர்ப்பேன்.
இது பேரறிஞர் அண்ணா மீதும், கலைஞர் மீதும், தமிழக மக்களாகிய உங்கள் மீதும் ஆணை என்று அன்றே சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். அது உறுதி, உறுதி, உறுதி என்று கூறி விடைபெறுகிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.