"அம்மையார் ஜெயலலிதா இறந்து 50 மாதங்கள் - ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தி 48 மாதங்கள் - விசாரணை கமிஷன் அமைத்து 42 மாதங்கள் - ஓ.பி.எஸ். ஆஜராக விசாரணை கமிஷன் அழைப்பு அனுப்பி 25 மாதங்கள் ஆகிவிட்டது. நான்காண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் இன்னமும் ஓ.பி.எஸ். எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை!" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்
இன்று (27-01-2021), சென்னை - கிண்டியில் நடைபெற்ற, தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் சுப. சிவப்பிரகாசம் அவர்களது பெயரனும், கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளருமான செல்வன். சி.இலக்குவன் - செல்வி. சௌமியா மேகா இணையரின் திருமண விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களை வாழ்த்தி தி.மு.கழகத் தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“நம்முடைய மதிப்பிற்குரிய சிவப்பிரகாசம் அவர்களை நன்றியுரை ஆற்ற வேண்டும் என்று பணித்த நேரத்தில், நன்றியுரையை நான் தான் ஆற்றப்போகிறேன் என்று சொல்லிவிட்டு அவர் அமர்ந்து விட்டார். நன்றி உரை மட்டுமல்ல, நியாயமாக நான் தான் வரவேற்புரையும் ஆற்றியிருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொருவருக்கும் பணி கொடுக்க வேண்டும் என்பதற்காக வரவேற்புரை, தலைமை உரை, நன்றி உரை என்று பிரித்துக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுத்தவரையில், சர்வாதிகாரம் இல்லாமல் அனைத்தையும் பிரித்து பணியாற்றுபவர்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
நம்முடைய மதிப்பிற்குரிய சிவப்பிரகாசம் அவர்களின் அருமைப் பெயரனும், சிவசுப்பிரமணியம் – காளீஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனுமான இலக்குவன் அவர்களுக்கும், இராமகிருஷ்ணவர்மா மேகா – உமாதேவி தம்பதியினரின் அன்பு மகன் சௌமியா மேகா அவர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகளோடு இந்த மணவிழா நடைபெற்றிருக்கிறது.
இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று இந்த மண விழாவை நடத்தி வைத்த அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திருமணம் மிகவும் இனிமையாக, எளிமையாக, நாமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில், ஒரு சீர்திருத்தத் திருமணமாக நடந்திருக்கிறது.
இது போன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதற்காகத் தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், பல்வேறு இன்னல்களை, துன்பங்களை, தோல்விகளை எல்லாம் தாங்கிக்கொண்டு நடத்தி வைத்திருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆனால், இதுபோன்ற திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறுமானால் அந்தத் திருமணங்கள் சட்ட முறைப்படி செல்லாது என்ற நிலையில் தான் அந்த சீர்திருத்தத் திருமணங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.
ஆனால் 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்திற்குள் முதலமைச்சராக நுழைந்து சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்று ஒருமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றித் தந்தார்கள். எனவேதான் இன்று நடைபெற்ற திருமணம் சட்ட முறைப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த திருமணத்தில் நாம் கலந்து கொண்டு இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய மதிப்பிற்குரிய சிவப்பிரகாசம் அவர்களைப் பற்றி இங்கு உரையாற்றிய அனைவரும் நீண்டநேரம் எடுத்துச்சொல்ல வாய்ப்பில்லை என்கின்ற காரணத்தால் சுருக்கமாக அவரைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய சிவப்பிரகாசம் அவர்கள் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பல்வேறு உள்நாட்டு - வெளிநாட்டு நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகளையும், மாநில அரசின் குறைதீர்க்கும் ஆணைய உறுப்பினராகவும் அவர் கடமையை ஆற்றியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அவர் நம்முடைய தேர்தல் பணிக் குழுவின் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்று மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதாவது தகவல் வேண்டும் என்றால் உடனடியாக நமது நினைவிற்கு வருவது சிவப்பிரகாசம் அவர்கள் தான். அவரை நான் முதன்முதலில் முரசொலி அலுவலகத்தில், மறைந்த நம்முடைய மதிப்பிற்குரிய முரசொலி மாறன் அவர்கள் தான் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அந்த காலத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரவில்லை. அந்த நேரத்தில் நம்முடைய முரசொலி மாறன் அவர்கள் கட்சிக்குப் பயன்படும் பல தகவல்களைத் தயாரிப்பதற்கு நம்முடைய சிவப்பிரகாசம் அவர்களைத் தேர்ந்தெடுத்து தலைவரிடத்தில் பரிந்துரை செய்து, அந்தப் பணிகளை ஒப்படைத்து இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கட்சிப் பிரச்சினை - நாட்டுப் பிரச்சினை – மக்களின் மனநிலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் சிவப்பிரகாசம் அவர்களைத் தான் கேட்பார்கள். எதையும் வெளிப்படையாக எடுத்துச் சொல்லும் திறமையைப் பெற்றவர், நம்முடைய சிவப்பிரகாசம் அவர்கள். அவற்றை அருகிலிருந்து பார்த்தவன் நான். அதனால் தான் இன்றைக்கும் அவரிடத்தில் பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொண்டு என்னுடைய பணியை நான் ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
அவருடைய பெயரன் இந்த நேரத்தில் மணமகனாக வீற்றிருக்கிறார். அவர் இலயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நான் அறிவாலயத்தில் இருக்கின்றபோது, வாரத்திற்கு 100 முதல் 200 பேர் வரை, அவர்கள் கல்லூரி மாணவர்களைக் கட்சியில் இணைப்பதற்காக அழைத்து வருவார். அவ்வாறு தி.மு.க. உறுப்பினராக முதன் முதலில் தனது பணியைத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, மாணவர் அணியில் பொறுப்பேற்று, அதற்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பில், இன்றைக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு துணையாகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு அவர் இல்லறம் கண்டிருக்கிறார். இந்தக் காரணத்தினால் அவருடைய பணியில் நிச்சயம் தொய்வு ஏற்படாது; வேகம் தான் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நம்முடைய பணிகளில் எந்தவித தொய்வும் வந்துவிடக் கூடாது என்பதனை ஒரு அறிவுரையாக - வேண்டுகோளாக நான் இந்த நேரத்தில் எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் இன்றைக்கு ஒரு முக்கியமான நாள். திருமணம் நடந்திருப்பது என்பது இவர்களுக்கு ஒரு முக்கியமான நாள். அதேநேரத்தில் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்றைக்கு நடக்கிறது. அதை நான் வேண்டாமென்று மறுக்கவில்லை. ஆனால் நடத்தக் கூடியவர்கள் யார்? அந்த நினைவிடத்திற்கு உரியவர் யார்? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
குற்றம் புரிந்து, ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடக்கின்றது. அதனைத் திறந்து வைப்பவர் உயர் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சொல்லி, அவருடைய ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கின்ற காரணத்தினால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இது தான் இன்றைய நிலை. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்து 50 மாதங்கள் ஆகிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் எப்படி மறைந்தார்? என்பது தொடர்பாக ஒரு தர்மயுத்தம் நடந்தது. விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தத் தர்மயுத்தம் நடைபெற்றது. அது நடைபெற்று 48 மாதங்கள் ஆகியது. அதன்பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு 42 மாதங்கள் ஆகியது.
விசாரணை வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் கேட்டார்கள். அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அழைப்பு விடுத்து என்று 25 மாதங்கள் ஆகிறது. பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவர் செல்லவில்லை. இந்த லட்சணத்தில் நேற்று ஆறுமுகசாமி கமிஷனுக்கு பத்தாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் இறந்து 4 ஆண்டு ஆகிறது. இதுவரையில் உண்மை வெளிவரவில்லை.
ஆனால் அவர்கள் பாக்கெட்டில் அம்மையாரின் புகைப்படம் இருக்கிறது. விழாக்களில் அம்மாவின் படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் எவ்வாறு மறைந்தார் என்பது இதுவரையில் மர்மமாக உள்ளது. இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா? என்பது தான் என்னுடைய கேள்வி. இதனைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு மணக்கோலம் பூண்டு இருக்கும் மணமக்கள், இல்லற வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும்.
நம்முடைய இலக்குவன் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். நம்முடைய சிவப்பிரகாசம் அவர்களைப் பற்றி அறிந்தவர்கள் - புரிந்தவர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறீர்கள். எனவே அவரைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அறிவாலயத்தில் இன்றைக்கு எங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக சிவப்பிரகாசம் அவர்கள் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர் இல்லத்தில் நடக்கும் இந்த விழாவில் நாங்கள், எங்கள் குடும்பத்தில் நடைபெறும் விழாவாகத் தான் இங்கே வந்திருக்கிறோம். நான் என்னுடைய துணைவியாருடன் வந்திருக்கிறேன். தலைவர் கலைஞருடைய உதவியாளர்கள் வந்திருக்கிறார்கள். தலைவர் இடத்தில் எந்த அளவிற்கு நெருக்கத்தைச் சிவப்பிரகாசம் அவர்கள் பெற்றிருந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச்சொன்ன, “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக “மணமக்கள் வாழ்க… வாழ்க… வாழ்க… என வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி… வணக்கம்…
இவ்வாறு உரையாற்றினார்.