தமிழகம் முழுவதும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நடைபெற வேண்டிய கூட்டங்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, தி.மு.க சார்பில் தமிழகம் முழுக்க மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 26ம் தேதியான நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டத்தையும் அ.தி.மு.க அரசு ரத்து செய்துள்ளது.
குடியரசுதினத்தன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை அ.தி.மு.க அரசு மீண்டும் ஒருமுறை நெரிப்பதா என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி- பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கிராம சபைக் கூட்டங்கள் என்றால் கசக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கிராம சபைக் கூட்டங்களைப் பார்த்து - அதற்கு கூடும் மக்களைப் பார்த்து முதலமைச்சரும், அமைச்சர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. கிராம ராஜ்யத்தின் உயிர்நாடியாகத் திகழும் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்குக் கூட வக்கற்ற அ.தி.மு.க அரசு - தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாபக்கேடு!
உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கே உச்சநீதிமன்றம் வரை போராட்டம் நடத்த விட்டு பிறகு வேறுவழியின்றி கிராமப்புற ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தியது இந்த அரசு.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஊராட்சி மன்றங்களில் பெரும்பான்மையாக பொறுப்பிற்கு வந்து விட்டதால் அ.தி.மு.க அஞ்சி நடுங்குகிறது. அ.தி.மு.க அரசின் கொள்ளைகள்-பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் துவங்கி, குடிநீர் இணைப்புகள் கொடுப்பது வரை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்த்தியுள்ள ஊழல் லீலைகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தெரிந்து விட்டதே என முதலமைச்சர் பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் ரொம்பவுமே பதற்றப்படுகிறார்கள்.
தனது உறவினர்கள் பெயரில் கம்பெனி வைத்து- பினாமி கம்பெனிகள் மூலம் உள்ளாட்சித்துறையில் பில் போட்டு - டெண்டர் விட்டு சுரண்டிய அமைச்சரோ, தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் கையில் ஊழல் ஆதாரங்கள் சிக்கி விட்டதே என்று கலங்கி நிற்கின்றனர். அதனால் மக்களுக்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கும் - கிராம வளர்ச்சி குறித்து விவாதிக்கும் மிக முக்கியமான ஜனநாயக மன்றமாம் கிராம சபைக் கூட்டங்களை நடத்த விடாமல் தொடர்ந்து தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தடை வருகின்ற மே மாதம் வரைதான்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் தமிழகமெங்கும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடக்கத்தான் போகிறது. அதில் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய விவாதமும் – அ.தி.மு.க ஆட்சியின் உள்ளாட்சித்துறை ஊழல்களும் - முதலமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும் கூட்டு வைத்து அடித்த கொள்ளைகளும் மக்கள் மன்றத்திற்கு வரத்தான் போகிறது. “சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடும்” என்ற முதலமைச்சர் பழனிசாமியின் கனவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் கனவும் நிச்சயம் மக்கள் சக்தியால் கலைக்கப்பட தான் போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.