மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை அ.தி.மு.க. அரசு இதுவரை மத்திய அரசுக்கு வழங்காமல் தாமதம் செய்து கொண்டிருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில், மதுரை மண்டலத்தில் வாழும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2015-ல் அறிவிக்கப்பட்டு - நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரம் அவசரமாக, 2019 ஜனவரி மாதத்தில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற இந்த விழா நடைபெற்று இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை இன்னமும் ஒப்படைக்கவில்லை.
ஜிக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதுவும் கையெழுத்து ஆகவில்லை. ஜூன் 2019-ஆம் ஆண்டே பி.எம்.எஸ்.எஸ்.ஒய். திட்டத்தின் இயக்குநர், "மாநில அரசிடம் நிலம் பெறுவது ஒரு பிரச்சினையே அல்ல; மாநில அரசிடம் நிலம் இருக்கிறது. நான் அங்குச் சென்று கையெழுத்திட வேண்டும். அவ்வளவுதான்" என்று பேட்டியளித்து பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இந்தக் கையெழுத்துப் போடுவதற்கு 18 மாதங்களா? இதிலும் யாரிடமாவது பேரம் பேசலாம் என்ற எண்ணமா?
மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் அலட்சியத்தால் ஐந்து ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் ஆழ்ந்த உறக்கம் கொண்டிருக்கிறது. அறிவிப்பிற்கும் - செயல்பாட்டிற்கும் இடையில் 5 ஆண்டுகள் இடைவெளி என்பது, முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கான இலக்கணமா?
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு கபட நாடகம் போட எத்தனிக்காமல் - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.