இன்று (19.11.2020), மறைந்த, கழகத்தின் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் டி.சத்தியேந்திரனின் திருவுருவப் படத்தை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு காணொலி மூலமாக அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“கழகப் பணியாற்றிய தம்பி டி. சத்தியேந்திரனின் படத்தை கனத்த இதயத்துடன் திறந்து வைக்கிறேன். நம்மையெல்லாம் விட்டு இளம் வயதிலேயே பிரிந்து சென்றுவிட்டார் தம்பி டி. சத்தியேந்திரன். நம் இயக்கத்தின் காளையர்களில் ஒருவரை இழந்திருக்கிறோம் - அதை நினைத்துப் பார்க்கவே என் மனம் மறுக்கிறது. அவரது மறைவின் சோகம் நீங்குவதற்குள்- இன்றைக்கு அவரது படத்தைத் திறந்து வைக்க வேண்டிய சூழல்.
இந்தப் படத் திறப்பு நிகழ்ச்சி - தம்பி சத்தியேந்திரன் இந்தக் கழகத்திற்கு ஆற்றிய சேவைகளை நினைவுப்படுத்துகிறது. கழகம் நடத்திய போராட்டங்களில் அவர் முதல் ஆளாக நின்று களமாடியதை நினைவுபடுத்துகிறது. இதே நவம்பர் மாதத்தில்தான் அவர் பிறந்தார். அவர் பிறந்த மாதத்திலேயே – இந்த படத்திறப்பு நிகழ்ச்சியும் நடப்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
பள்ளிப் பருவத்திலேயே திராவிடப் பேரியக்கத்தின் மீது பற்றாளராக விளங்கியவர் அவர். மயிலாடுதுறை நகராட்சி தியாகி ஜி.நாராயணசாமி மேல் நிலைப்பள்ளியில் படித்த போதே மாணவர் தேர்தலில் போட்டியிட்டு- வெற்றி பெற்று தலைவரானவர். படிப்படியாகக் கல்வியறிவையும்- கழகத்தின்பால் பற்றையும் வளர்த்துக் கொண்ட அவர், 1996ல் மயிலாடுதுறை நகர தி.மு.க. துணைச் செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர். நகர்மன்ற உறுப்பினராக மட்டும் 15 ஆண்டுகள் செயல்பட்டு - இப்பகுதி மக்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். கழகப் பணியானாலும் - மக்கள் பணியானாலும் முதல் வரிசையில் நின்ற - முன்னணி இளைஞர் சத்தியேந்திரன்.
2006 முதல் 2011-வரை நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்து பல்வேறு நலத் திட்டப் பணிகளைச் செய்திருக்கிறார். 2014 முதல் - மறையும் வரை - தி.மு.க.வின் நாகை வடக்கு மாவட்டத் துணைச் செயலாளராகப் பணியாற்றினார். ஆகவே கழகத்தில் இருந்த பந்தயக் குதிரைகளில் ஒன்றைப் பறிகொடுத்திருக்கிறேன். நான் மட்டுமல்ல - நாகை மாவட்ட தி.மு.க. மட்டுமல்ல - ஒட்டுமொத்தத் திராவிட முன்னேற்றக் கழகமே பறிகொடுத்துள்ளது.
பழகுவதற்கு இனிமையானவர். பகைவர்களே இல்லாதவர் என்று கூறலாம். தன்னால் இயன்ற பணிகளை மட்டுமின்றி- தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து செயலாற்றி- மயிலாடுதுறை மக்களின் பேராதரவைப் பெற்றவர். அப்படிப்பட்ட செயல்வீரரின் படத்தைத் திறந்து வைத்துத்தான் உங்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது. அரசு டெண்டர்களை அமைச்சர்கள் “பினாமி” பெயரில் எடுக்கிறார்கள். இல்லையென்றால் அண்ணன், தம்பி, உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே தனது சம்பந்திக்கு, தனது துறையின் கான்டிராக்டுகளைக் கொடுக்கிறார். கேட்டால்; அமைச்சரின் அண்ணன் டெண்டர் எடுக்கக் கூடாதா? முதலமைச்சரின் சம்பந்தி டெண்டர் எடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.
இன்னும் ஒரே ஒரு கேள்வியைத்தான் முதலமைச்சர் பழனிசாமி பத்திரிகையாளர்களைப் பார்த்தோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகிய என்னைப் பார்த்தோ கேட்கவில்லை. அது என்ன கேள்வி தெரியுமா? ஊழல் செய்தால் என்ன தப்பு? அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தால் என்ன தப்பு? இதை மட்டும்தான் இன்னும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை.
இப்போது போகிற போக்கைப் பார்த்தால் - பழனிசாமி பதவி போய் விடுமே என்று எரி்சசல்படுவதைப் பார்த்தால் - அதைக் கூடக் கேட்டாலும் கேட்பார். அந்த அளவுக்கு அரசுப் பணத்தைக் கொள்ளையடிப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக அ.தி.மு.க. அமைச்சர்களும், முதலமைச்சரும் இருக்கிறாரர்கள். அரசியலில் நேர்மை - எடப்பாடி பழனிசாமி அகராதியில் இல்லை. பொது வாழ்வில் தூய்மை- அ.தி.மு.க. அமைச்சர்களிடம் அறவே இல்லை.
பேரறிஞர் அண்ணா ஆட்சி செய்தார். தலைவர் கலைஞர் ஆட்சி செய்தார். அவர்களின் சாதனைகள்; தமிழகத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் இன்றைக்கு ஒளி வீசுகிறது. தி.மு.க. ஆட்சியால் பயன் அடையாத ஒரு கிராமத்தைத் தமிழகத்தில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மக்களின் நண்பனாக - தமிழக மக்களைத் தாங்கிப் பிடிக்கும் இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது. இப்போது இருந்து வருகிறது.
ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி இருக்கிறது? எங்கள் ஆட்சி இது என்று சொல்லிக் கொள்ள அ.தி.மு.க. தொண்டர்களே வெட்கப்படுகிறார்கள். அப்படியொரு ஆட்சியை - ஊழல் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால்தான் மக்களுக்கு விரோதமான, ஜனநாயகத்திற்கு விரோதமான, பொதுவாழ்வின் இலக்கணத்தைப் பாழ்படுத்திய இந்த அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என இன்றைக்கு மக்கள் முடிவு எடுத்து – தயாராக இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் கூட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. நீங்கள் எல்லாம் அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் - தில்லு முல்லுகள் இருக்கிறதா என்பதைக் கவனமாகப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏன் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்துங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால்- அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட இதுதான் நம் கையில் கிடைத்துள்ள ஆயுதம்.
ஆகவே ஜனநாயகம் தந்துள்ள அந்த ஆயுதத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் எல்லாம் இன்னும் ஆறு மாதத்திற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த உழைப்பு நமக்காக அல்ல - நம் குடும்பத்திற்காக அல்ல; இந்த நாட்டிற்காக - தமிழ்நாட்டிற்காக!
தமிழ்நாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக – தமிழகத்தை மீட்பதற்காக என்று நீங்கள் எல்லாம் நினைவில் கொண்டு செயலாற்றிட வேண்டும். ஏன் என்றால்- நேற்றைய தினம் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தின் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரிப் படுகையில் மட்டும் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதுவும் முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலப்பரப்பில் – விளை நிலங்களைப் பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அளிக்கப்பட்டு விட்டதால்- இப்போது ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் புகுத்துகிறார்கள். ஒரு கிலோ மீட்டர் அல்லது இரு கிலோ மீட்டர் அல்ல- மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டரில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படுகிறது .
மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. ஏன் முதலமைச்சரோ- தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை. இப்படித்தான் அ.தி.மு.க. அரசும்- அதன் அமைச்சர்கள், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரும் தமிழக உரிமைகளைத் தாரை வார்க்கிறார்கள்.
தமிழகத்திற்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து நிற்கிறார்கள். ஆகவே, ஊழல் அ.தி.மு.க. ஆட்சியை- ஊழல் முதலமைச்சர் பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பிட- ஏன் தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் பின்னுக்குத் தள்ளிய இவர்களை அரசியலை விட்டே துறவறம் போக வைக்க கழகத் தோழர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாகக் கழகப் பணியாற்றிட வேண்டும்.
ஒவ்வொரு தொண்டரும் ஒரு வீட்டிற்குப் பிரச்சாரம் என்று வைத்தால் கூட- ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி விடலாம். ஆகவே, அந்தப் பணியில் நீங்கள் எல்லாம் துடிப்புடன்- துணிச்சலுடன்- இன்றைக்குப் படத்தைத் திறந்து வைத்திருக்கிறோமே- தம்பி டி. சத்தியேந்திரன்- அவரின் பாய்ச்சலுடன் பிரச்சாரத்தில் இறங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.”
இவ்வாறு தி.மு.கழகத் தலைவர் உரையாற்றினார்.