"வெங்காயம் பதுக்கப்பட்டதால் அதன் விலை கிடுகிடு உயர்வு; அ.தி.மு.க. அரசு ஆதரித்த பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும். இதற்குப் பிறகாவது வேளாண் சட்டத்தை அ.தி.முக. அரசு அனுமதிக்கக் கூடாது; வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதாரண சமையலுக்கும் பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளாம் வெங்காயத்தைப் பதுக்கியதால் இன்றைக்கு அதன் விலை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு, கிடுகிடுவென உயர்ந்து - தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகளின் வேதனைக் கண்ணீர். மறுபுறம், வெங்காயத்தின் தாங்க முடியாத விலை உயர்வால் தாய்மார்கள் பெருக்கிடும் கண்ணீர். இத்தகைய கண்ணீரில் களிநடம் போடுகிறது எடப்பாடி அ.தி.மு.க. அரசு.
அ.தி.மு.க. அரசு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்போம் என்றாலும், அனைவருக்கும் வெங்காயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!
இப்போதே வெங்காயம் கிலோ 130 ரூபாய் வரை விற்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க. அரசு ஆதரித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் எவ்வளவு வேண்டுமானாலும் தேக்கி வைக்கலாம்; இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் விலை ஏறலாம்.
இந்த அனுபவத்திற்குப் பிறகாவது மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்றும்; வெங்காயத்தை முழுவீச்சில் அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு உரிய போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வெங்காயத்தின் மூலமாக மற்றொரு ஊழலுக்கு வழி கண்டுவிடக் கூடாது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.