திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (15-9-2020) நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக முப்பெரும் விழாவில் - விருதுகள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு :
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவுக்கு தலைமை தாங்கியுள்ள கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களே !
வாழ்த்துரை வழங்கியுள்ள பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களே! முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களே! துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர்களே!
வரவேற்புரை ஆற்றிய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு அவர்களே! கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே!
மாவட்டச் செயலாளர்களே! கழக முன்னணியினரே! தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! முப்பெரும் விழா விருதுகளைப் பெற்றுள்ள பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
கடந்த 9-ம் தேதியன்று இதே அரங்கத்தில் இந்தியாவே பாராட்டக்கூடிய அளவுக்கு மாபெரும் பொதுக்குழுவை நாம் நடத்திக் காட்டினோம். கொரோனா காலம் என்பதால் 3,500 பொதுக்குழு உறுப்பினர்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்கு இயலாத சூழல் இருந்தது. ஒரு இடத்தில் கூட வேண்டியவர்களை 75 இடங்களில் கூட வைத்து அதனைக் காணொலிக் காட்சிகள் மூலமாக நடத்தினோம். அந்த காணொலி காட்சியை தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பினோம். உலக அளவில் அதிகம் பேர் பங்கேற்ற காணொலிக் கூட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய பொதுக்குழு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது என்ற பெருமையை நாம் அடைந்தோம்.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி தனது தேசிய மாநாட்டை காணொலிக் காட்சி மூலமாக நடத்தி உள்ளது. அதில் 3 ஆயிரத்து 979 பேர் பங்கேற்றார்கள். நாம் நடத்திய பொதுக்குழுவில் 3 ஆயிரத்து 774 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் நடத்தியது மாநாடு; நாம் நடத்தியது பொதுக்குழு! நாமும் மாநாடு நடத்தி இருந்தால் இலட்சக்கணக்கானவர்களை பங்கேற்க வைத்திருக்க முடியும். அந்த வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு.
வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர்கள் நம்முடைய கழகத்தினர். ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதினார். அதுபோல கழகத் தலைமை கட்டளையிட்டால் மலையையும் பெயர்த்து எடுக்கும் வல்லமை கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு உண்டு என்பதை கடந்த 9-ம் தேதி நடந்த பொதுக்குழுவின் மூலமாக இந்த நாட்டுக்குக் காட்டினோம்.
இதன் தொடச்சியாக இன்று முப்பெரும் விழாவைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். முன்பெல்லாம் முப்பெரும் விழா என்றால் இந்த கலைஞர் அரங்கம் தாண்டி, அறிவாலய வளாகம் முழுவதும் நிரம்பி வழியும். அதனால் தான் பல்வேறு நகரங்களில் மாபெரும் மைதானங்களில் முப்பெரும் விழாவினை நடத்த தலைவர் கலைஞர் அவர்கள் உத்தரவிட்டார்கள். முப்பெரும் விழாக்களை அறிவிக்கப்படாத தி.மு.க. மாநாடுகளாக நடத்துவது தான் வழக்கம். ஆனால் அப்படி நடத்த முடியாத சூழலில் - சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னணியினரை மட்டும் அரங்கத்துக்கு வரவழைக்கும் சூழல் ஏற்பட்டது.
‘முரசொலி'யில் கடிதங்கள் தீட்டி, அனைவரையும் வாருங்கள், வாருங்கள் என்று அழைக்க முடியாத நிலைமைக்காக கழகத்தொண்டர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கவலையைப் போக்குவதற்காகத் தான் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
"பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் - ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்" - என்று கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரால் ஏற்றிவைக்கப்பட்ட இனமானச் சுடரொளி நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
கன்னித்தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல; கடல்கடந்து வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை தீபமாக எழுபதாண்டுகள் ஒளிவீசிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் செப்டம்பர் 17.
ஆகிய மூன்றும் இணைந்து செப்டம்பர் 15-ம் நாளில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இந்த செப்டம்பர் 15 என்பது பேரறிஞர் அண்ணா பிறந்த தினம் மட்டுமல்ல- என்றென்றும் நம் கொள்கைக் கோட்டையாக இருக்கக்கூடிய இந்த அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாளும் இந்த செப்டம்பர் 15 தான்.
இன்னொரு நெகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் தயாளு அம்மையார் அவர்களுக்கும் திருமணம் நடந்த மகத்தான நாளும் இந்த செப்டம்பர் 15 தான்.
இத்தகைய எல்லாப் பெருமைகளும் கொண்ட நாளில் நாம் இங்கே கூடியிருக்கிறோம். இன்றைய தினம் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் பெரியார் விருதையும், முனைவர் அ.இராமசாமி அவர்கள் அண்ணா விருதையும், உபயதுல்லா அவர்கள் கலைஞர் விருதையும், தமிழரசி அவர்கள் பாவேந்தர் விருதையும், இராஜகோபால் அவர்கள் பேராசிரியர் விருதையும் பெற்றுள்ளார்கள்.
விருது பெற்ற அனைவரையும் பொதுச்செயலாளர், பொருளாளர் பாராட்டி அமர்ந்திருந்தாலும், என்னுடைய சார்பிலும் தலைமைக் கழகத்தின் சார்பிலும் தலைவர் என்ற முறையிலும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன். 1985-ம் ஆண்டு இத்தகைய விருதுகளை வழங்கும் முறையை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தொடக்கி வைத்தார்கள்.
இந்திய அரசின் உயரிய விருதுகளைப் போல தலைமைக் கழகத்தின் உயரிய விருதுகளாக இவை கடந்த 35 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பெரியார் - அண்ணா - கலைஞர் - பாவேந்தர் - பேராசிரியர் ஆகியோர் சாதாரண மனிதர்களா? பெரிய மனிதர்களிலும் பெரிய மனிதர்கள்! அந்த விருதைப் பெறுவதன் மூலமாக இம்மேடையில் விருது பெற்ற ஐவரும் மேலும் பெருமை அடைகிறீர்கள்!
பெரியார் விருது பெற்ற மா.மீனாட்சிசுந்தரம் அவர்களின் வாழ்க்கை குறிப்பு இங்கே படித்துக் காட்டப்பட்டுள்ளது. 17 வயதில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காக பணியாற்றியவர். இளமையிலேயே தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை வீரராக வலம் வந்தவர் நம்முடைய மா.மீ. அவர்கள். தனக்கு மட்டுமில்லாமல், தன் குடும்பத்தினர் அனைவருக்கும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் காட்டியவர். வேதாரண்யம் பகுதியில் அதிகளவில் சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வைத்த பெருமை நம்முடைய மா.மீனாட்சி சுந்தரத்திற்கு உண்டு. அவர் இன்றைக்கு வரவில்லை. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய அருமை மகன், இன்றைக்கு வேதாரண்யம் பகுதியில் பேரூர்க் கழக செயலாளராக இருக்கக்கூடியவர் அந்த விருதை பெற்றிருக்கிறார்.
நம்முடைய பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள் அண்ணா விருதைப் பெற்றுள்ளார்கள். பேராசிரியர் ராமசாமி என்று சொல்வதை விட போராட்டக்காரர் ராமசாமி என்றுதான் அவரை சொல்ல வேண்டும். காரணம் ஒரு போராட்டத்தை விடமாட்டார். அவருடைய வாழ்க்கை குறிப்பை கேட்டிருப்பீர்கள்.
1965-ம் ஆண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தை உலுக்கிய போது, அப்போது மதுரைக் கல்லூரியில் மாணவர் தலைவராக, முன்னின்று போராட்டத்தை நடத்தியவர். 1965-ம் ஆண்டு அவர் தொடங்கிய போராட்டம் இன்று வரை முடியவில்லை! இன்னும் போராட்டக் களத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 5 நாட்களுக்கு முன்னர் கூட நம்முடைய ராமசாமி அவர்கள் முன்னாள் துணை வேந்தர்கள் சார்பில் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பினார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடும் அளவுக்கு இன்று வரை போராளியாகத் திகழ்ந்து வருகிறார் ராமசாமி.
2006 முதல் 2011-ம் ஆண்டு வரை, கழக ஆட்சியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். சென்னையில் திராவிடர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய ‘Struggle for Freedom of Languages in India’ என்ற நூலை முத்தமிழறிஞர் கலைஞர்தான் வெளியிட்டார்கள். அந்த வெளியிட்டு விழாவில் பேசும்போது குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். தந்தை பெரியாரின் போராட்டத்தை பற்றி குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அதை குறிப்பிட்டு தலைவர் கலைஞர் சொல்கிறார். "பெரியார் ராமசாமி தொடங்கிய போராட்டத்தை பேராசிரியர் ராமசாமி எழுதி முடித்து இருக்கிறார்" என்று பாராட்டி பேசி உள்ளார்.
1965-ல் மொழிப்போராட்டத்தை அண்ணாவின் தலைமையை ஏற்று நடத்தி வலம் வந்த நம்முடைய ராமசாமிக்கு அண்ணா பெயரால் விருது தரப்படுகிறது.
நம்முடைய பெருமதிப்பிற்குரிய எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்கள் கலைஞர் அவர்கள் பெயரால் அமைந்த விருதைப் பெற்றுள்ளார்கள். பள்ளிப் பருவத்திலேயே பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் அளவுகடந்த பற்றும், பாசமும் கொண்டு, கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டு தன்னுடைய பணியை தொடங்கியவர். கல்லக்குடி போராட்டத்தின்போது தஞ்சையில் இருந்து தலைவர் கலைஞர் புறப்படும்போது வழியனுப்பு விழாவில் கலந்து கொண்டு வழியனுப்பியவர்களில் ஒருவர்.
1962-ம் ஆண்டில் தஞ்சையில் தலைவர் கலைஞர் அவர்கள் போட்டியிட்ட நேரத்தில் அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். 1969-ம் ஆண்டில் அண்ணா அவர்களின் மறைவின்போது, தானாகவே நினைவு மலர் ஒன்றை வெளியிட்டு, தஞ்சை நகரம் முழுவதும் வினியோகித்திருக்கிறார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2006 முதல் 2011 வரை கலைஞர் அவர்களது அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்து எல்லோரின் மனதையும் கவர்ந்தவர்.
1992-ம் ஆண்டில் கட்சிக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது, அண்ணன் கோ.சி.மணி தலைமையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு நடைபெறுகிறது. அந்தப் பொதுக்குழு சிறப்பாக நடைபெற பக்கபலமாக இருந்தவர்தான் நம்முடைய உபயதுல்லா அவர்கள். தலைவர் கலைஞருக்கு தஞ்சையில் எத்தனையோ தளகர்த்தர்கள் உண்டு. அவற்றில் மிகவும் அமைதியாக தளகர்த்தர் என்று சொன்னால் அது நம்முடைய உபயதுல்லா அவர்களாகத்தான் இருப்பார்கள்.
"தமிழை வளர்த்தல் ஒன்று; சாதியை ஒழித்தல் மற்றொன்று" - என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அவரது பெயராலான விருதை அ.தமிழரசி பெற்றிருக்கிறார். இவருக்கு பிறந்த வீடும் புகுந்த வீடுமே தி.மு.க.,தான். தந்தை கழகத் தொழிற்சங்க பிரதிநிதி, கணவர் இளைஞரணி உறுப்பினர்.
1999-ல் கிளை கழக பிரதிநிதியாக தன்னுடைய கழகப் பணியினை தொடங்கி, 2001-ல் வழக்கு ஒன்றில் தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கைக்குழந்தையோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர். 2006-ம் ஆண்டில் சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கலைஞரின் ஆதி திராவிட நலத்துறையின் அமைச்சராக பணியாற்றியபோதுதான் இருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று சொன்னால் அது அவர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தபோதுதான். சட்டத்தை தலைவர் கலைஞர்அவர்கள் நிறைவேற்றி தந்தார். அவருக்கு பாவேந்தர் விருது இன்று தரப்பட்டுள்ளது.
"வாய்யா மீசை" என்று தலைவர் கலைஞரால் அன்போடு அழைக்கப்பட்ட சுப.ராஜகோபால் அவர்களுக்கு பேராசிரியர் பெயரால் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 1957-ல் தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது சைக்கிளில் சென்று பிரச்சாரம் நடத்தியவர் நம்முடைய சுப. ராஜகோபால் அவர்கள்.
1959-ம் ஆண்டு பிரதமர் நேரு அவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டார். 1962-ம் ஆண்டு விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்படுகிறார் ! 1964 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். 1976ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைதாகி ஓராண்டு சிறையில் வாடியவர். 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எதற்கும் கலங்காமல் கழகம் காத்த ஒருவர்தான் நமது சுப.ராஜகோபால் அவர்கள். தலைவர் கலைஞர் மீது பெரும்பற்று கொண்டவர். பேராசிரியர் மீது ஒரு வகையான பற்றுக் கொண்டவர் என்று சொல்லலாம். ஒவ்வொருவரும் தங்களது உழைப்பால், தகுதியால், திறமையால், தியாகத்தால் இந்த விருதை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்த விருதை பெற்றிருக்கும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகளை, பாராட்டுகளை நான் உரித்தாக்க விரும்புகிறேன்.
இதுபோன்ற விழாக்கள் ஏதோ, கூடிக் கலையும் விழாக்கள் அல்ல; நாம் யார், நமது கொள்கை என்ன, எத்தகைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை இந்த நாட்டுக்கு உணர்த்தும் விழாக்கள்தான் இந்த விழாக்கள். இந்த விழாக்களின் மூலமாக தொண்டர்கள், நிர்வாகிகள் என நாம் அனைவரும் உற்சாகம் அடைகிறோம். இன்னும் வெளிப்படையாக சொன்னால் நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ளும் விழாதான் இந்த முப்பெரும் விழா.
கடந்த 9-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் பேசும்போது, நான் குறிப்பிட்டு சொன்னேன். இன்னும் ஏழே மாதத்தில் நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். இது நான் அல்ல, நீங்கள் அல்ல, நாட்டில் இருக்கும் மக்களே தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை நான் பொதுக்குழுவில் சொன்னேன்.
உடனே ஊடகங்கள் பெரிய அளவில் விவாதங்கள் நடத்தின. இதை பெரிது பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். விமர்சனம் செய்தார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. விவாதம் நடத்துவதற்கு எதுவும் இல்லை; மக்கள் மனதில் இருப்பதைத் தான் நான் சொன்னேன். கொரோனா வந்த பின் ஆட்சி என்று ஒன்று இங்கு இருக்கிறதா? கொரோனாவை விட கோமா நிலையில் இன்றிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி இருந்துகொண்டிருக்கிறது. கொரோனா பற்றி சட்டமன்றத்தில் நான்தான் பேசினேன். நம்முடைய பொதுச்செயலாளர், துணைத்தலைவர் தெளிவாக பேசினார். கேலி செய்தார்கள். கிண்டல் செய்தார்கள், கொச்சைப்படுத்தி பேசினார்கள். என்ன ஆனது. எங்களுக்கு மாஸ்க் கொடுங்கள் என்று அண்ணன் துரைமுருகன் கேட்டார்கள். அதற்கு அவர்கள் உங்கெளுக்கெல்லாம் வயதாகிவிட்டது அதனால் பயப்படுகிறீர்கள். பயப்படாதீர்கள் ஒரு உயிர் கூட சாக விடமாட்டோம் அம்மா ஆட்சியில் என்றார்கள். ஆனால் இன்றைக்கு 8 ஆயிரம் பேர் இறந்து போய்விட்டார்கள்.
என்ன கொடுமை இது. ஒரு உயிர்கூட போகாது என்று சொன்னது முதலமைச்சர். இன்று சட்டமன்றத்தில் கேட்டால் அது அரசின் கொள்கை என்று மாற்றிப் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் ஆகியோர் 3 நாளில் கொரோனா சரியாகிவிடும் என்றார்கள். 10 நாளில் முடிந்துவிடும், கடைசியாக கடவுள் பார்த்துக்கொள்வார் என்று சொல்கிறார்கள். இன்று 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்.
இதுதான் கொரோனாவை ஒழிக்கும் லட்சணமா, தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுதான் பரவாமல் தடுக்கும் அழகா? இது என்னுடைய புள்ளிவிவரம் இல்லை; அரசு தந்திருக்கும் புள்ளிவிவரம் . அதுவும் உண்மையா கிடையாது. இதிலும் பொய்க் கணக்கு. கொள்ளையடிப்பதிலும், கொரோனா கணக்கு காண்பிப்பதிலும் பொய்க் கணக்கு. இந்தக் கோட்டையில் அமர்ந்திருக்கும் கொடியவர்களை - கொரோனாவை விட கொடிய ஊழல்களை செய்பவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டுமா வேண்டாமா? இதுதான் மக்களின் கேள்வி.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்டார்கள்.
அரியலூர் அனிதாவில் தொடங்கி, பெருவலூர் பிரதீபா, கூனிமேடு மோனிஷா, திருப்பூர் ரீதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிஸ்ரீதுர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் இவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? தற்கொலை என்று கூட சொல்லமாட்டேன். கொலை நடந்துள்ளது. இவர்களை மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
13 பேர் கொலைக்கு யார் காரணம் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு முழுக் காரணம். இன்று மாலை பத்திரிகையில் தலைப்பு செய்தி என்ன தெரியுமா? 13 மாணவர்கள் தற்கொலைக்கு தி.மு.க.,தான் காரணம் என்று போட்டுள்ளார்கள். அது சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது. இப்போது நான் சொல்கிறேன். கொலைக்கு காரணம் இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான். இதை பத்திரிகைகள் நாளை வெளியிடுவார்களா? பொய் சொன்னாலும், பொருத்தமாகச் சொல்ல வேண்டும். ‘பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா’ என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் அவர்கள் பேசினால் பதிவாகிறது. நாங்கள் குறுக்கிட்டு பேசினால், பதிவாகாது. சபைக் குறிப்பில் இருந்து எடுத்து விடுவார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சட்டமன்றத்தில் தி.மு.க.,தான் நீட் பிரச்சனையை கொண்டு வருகிறது. தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க.,தான் கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்று முதன் முதலில் தி.மு.கதான் குரல் எழுப்பி அதற்கு பிறகு ஏற்றுக்கொண்டு, ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி 2 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பினோம்.
இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. வேலை வெட்டி இல்லாதது போல சேலம் டூ சென்னை, சென்னை டூ சேலம், இப்படி சுற்றிக்கொண்டிருந்தவர் இந்த கொரோனா காலத்தில் ஊர் ஊராக சுற்றத் தொடங்கிவிட்டார். நீங்கள் என்ன சுற்றிக் கொண்டு வந்தாலும் உங்களுடைய பாச்சா பலிக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.
சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுண்டா? இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிச்சல், தெளிவு உங்களிருக்கிறதா? மாநிலத்துக்கு வந்து சேர வேண்டிய நிதியை கூட பெறமுடியாத ஒரு போக்கத்த பசங்களாக இந்த ஆட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள். குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்ததா உங்களுக்கு? முத்தலாக் சட்டத்தை எதிர்த்தீர்களா? மத்திய அரசுக்கு அடிபணிந்து கூனிக் குறுகி இன்றைக்கு ஒரு அடிமை ஆட்சியை தலையாட்டி பொம்மையாக நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்களே தவிர இந்த அடிமை ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். அதைத்தான் இந்த முப்பெரும் விழாவில் நாமும் சபதம் எடுப்போம் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.”
இவ்வாறு கழகத் தலைவர் உரையாற்றினார்.