தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரையில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் 144 தடை உத்தரவை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதேவேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நிதியளிக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, தி.மு.க. சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியளித்துள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் கழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தத்தம் ஒருமாத ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வழங்கும் படி அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்கியதோடு, கொரோனா சிகிச்சைக்காகவும், தடுப்பு நடவடிக்கைக்காகவும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் ஒதுக்கி வருகின்றனர். மேலும், மக்களுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினிகளையும் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து வழங்கி களத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சொந்தமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா நோயால் பாதிக்கப்படுவோருக்கான தனிமை முகாமாக பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளார் சேகர்பாபுவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் நேரில் அளித்தனர்.