பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான மாட்டு பொங்கல் அன்று டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுவதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வருமாறு உத்தரவிட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “பொங்கல் விடுமுறையை ரத்து செய்து, தமிழர்களின் மனதில் நீங்காத கோபத்திற்குள்ளான பா.ஜ.க. அரசு, இப்போது பொங்கல் திருநாள் நேரத்தில் இப்படியொரு உரையாற்றும் நிகழ்ச்சியை பிரதமர் மூலம் ஏற்பாடு செய்து, அதைத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று “எடுபிடி”அரசு மூலம் கெடுபிடி செய்து ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குரியது.” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ”மாட்டு பொங்கல் அன்று மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்டாயம் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என குறிப்பிடவில்லை எனக் கூறி தமிழக அரசு பின்வாங்கியது. அதன் பிறகு, அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிடுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஜனவரி 16ம் தேதி மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுவதாக இருந்த நிகழ்ச்சி ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் பேசப்போகிறார் என்று தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் நாளன்று பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து, மத்திய பா.ஜ.க அரசிடம் தொடர்ந்து குளிர்காய நினைத்த, அதிகார அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்தேன். உடனடியாகப் பூசிமெழுகும் காரணம் சொன்னது எடப்பாடி அரசு. இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர்!
அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு விழாவை, உங்கள் பதவி ஆசையைத் தீர்க்கும் பாதம் தாங்கும் விழாவாக மாற்றிவிட வேண்டாம்!” என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.