நாடு முழுவதும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை அண்மைக்காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிகளவில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பருவமழைக் காரணமாக வெங்காயப் பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால், வெங்காயத்தின் விலை ஆகாயத்தில் பறக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாயைத் தாண்டியும், சாம்பார் வெங்காயம் 150 ரூபாயை தாண்டியும் விற்கப்படுகிறது.
இதேபோல், கோவையில் பெரிய வெங்காயம் ரூ.90க்கும், சின்ன வெங்காயம் ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால் வெங்காயத்தின் விலை கேட்டதும் அதனை வாங்காமல் பொதுமக்கள் திரும்பிச் செல்கின்றனர். இதனால் வியாபாரிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில், வெங்காய விலை அதிகரித்தது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து, அதன் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.கழகத்தின் உறுப்பினர்கள் இது தொடர்பாக மத்திய அரசிடமும் வலியுறுத்துவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.