நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இந்த இரண்டு அணு உலைகளில் 1,000 மெகாவாட், 600 மெகாவாட் என மொத்தம் 1,600 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள உலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகளில் வடகொரியாவைச் சேர்ந்த 'லாசரசு' எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு ‘டி ட்ராக்’ (D-TRACK) என்ற வைரஸ் மூலம் அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. இதை கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது.
பின்னர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வைரஸ் தாக்குதல் நடைபெற்றது உண்மை என இந்திய அணு மின்சாரக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தச்செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளுக்குள் சைபர் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கூடங்குளம் அணுமின் கழக தகவல்கள் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. சைபர் தாக்குதல் குறித்து விரிவான விசாரணையை மத்திய அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.