தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பை தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கே.சண்முகத்துக்கு, நேற்று பணி ஓய்வு பெற்ற மோகன் பியாரேவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என ஆளுநர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, குட்கா வழக்கு விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சசிதரன் உத்தரவிட்டிருந்தார்.
அதனையடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். அவருக்கு பிறகு மோகன் பியாரே அந்த துறையில் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், “தலைமைச் செயலாளர் வசம் கூடுதலாக லஞ்ச ஒழிப்புத் துறையும், நிர்வாக சீர்திருத்தமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த நியமனம் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்ட அவர், ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.