நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு சற்று முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தியாவின் ஜிடிபி 5% ஆகக் குறைந்து பொருளாதார நிபுணர்களையும், பொதுமக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலை, ஜி.டி.பி வீழ்ச்சியடைந்ததன் மூலம் தெளிவாகியுள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''இந்திய பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலை, ஜி.டி.பி விகிதம் வீழ்ச்சியடைந்ததன் மூலம் தெளிவாகியுள்ளது. பா.ஜ.க அரசு இப்போதாவது விழித்துக்கொண்டு, வாய் மட்டும் பேசுவதை விடுத்து, வேலையிழப்பு, தொழில் துறை வீழ்ச்சி போன்ற உண்மையான பிரச்னைகளைப் பேசத் துவங்குமா'' எனத் தெரிவித்துள்ளார்.