சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “மக்களாட்சியில் பெரும்பான்மை பலம் என்பது மிகப்பெரிய விஷயம். அந்தப் பெரும்பான்மையைக் கொண்டு ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்யவேண்டும். மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்கவேண்டும்.
2015-2016-ம் ஆண்டில் தமிழக வீட்டு வசதித் துறை சார்பில் ரூபாய் 11,118 கோடி செலவில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்தின் நிலை என்ன? இதேபோல, 2016-2017ம் ஆண்டு 23,417 வீடுகள் ரூபாய் 689 கோடி செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2017-2018ம் ஆண்டில் ரூபாய் 911.81 கோடி செலவில் 9,888 வீடுகள் கட்டப்பட்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
23,417 வீடுகளுக்கு 689 கோடி ரூபாய் தான் செலவு மதிப்பீடு. ஆனால், 9,888 வீடுகளுக்கு ரூபாய் 911 கோடி செலவு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பவேண்டும். 60 கோடி ரூபாய் செலவாகும் என்ற காரணத்தைக் கூறி நேரடி ஒளிபரப்பு கோரிக்கையை தமிழக அரசு தட்டிக்கழிக்கக் கூடாது” என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “மேகதாது அணை கட்டக்கூடாது எனவும் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக்கூடாது எனவும் ஏகமனதாக பலமுறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழக சட்டமன்றத்தின் நடவடிக்கைகளையும், தீர்மானங்களையும் மத்திய அரசு துளியும் மதிப்பதில்லை.” எனக் குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், காவிரி பிரச்னை தொடர்பாக 17 ஆண்டுகளாக தி.மு.க என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 17 ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க-வின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
“தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சேலம் உருக்காலையைக் கொண்டு வந்தது, மாநில முதல்வர்கள் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவதற்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தச் செய்தது, சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டுவந்தது, பொடா சட்டத்தை ரத்து செய்தது எல்லாம் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தான்” என தி.மு.க-வின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மு.க.ஸ்டாலினின் பதிலடியை தி.மு.க உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர்.