தண்ணீர் பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற சொற்களே சமீப காலங்களில் தமிழகத்தில் எங்கு காணினும் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் நீர் நிலைகள் வறண்டு போனது. இதனால் மக்களின் நீராதாரமும் இல்லாமல் போனதால் தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
மழை நீர் சேகரிப்பு இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பணிபுரியும் இடங்களிலும் இதே நிலையை சந்தித்து வருகின்றனர்.
அதாவது, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனிகளிலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், பள்ளிகளிலும் குழந்தைகளை வீட்டிலிருந்தே குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தண்ணீர் இல்லாத அவல நிலை சென்னைக்கு வந்தது ஏன் என கேட்டும், ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இதற்கெல்லாம் சரியான பதில் அளிப்பதை தவிர்த்து வருகிறார் எனவும் சாடியுள்ளார்.
மேலும், தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தை இயன்றவரை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனவும் கழக நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.