இந்தியாவில் பல குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு சென்று, கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு பெரும் முதலாளிகள் எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர்.
அதுபோல, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு பிணை வழங்கப்படாமல், ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் உரிமைக் குரல் எழுப்புபவர்களும் எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளனர்.
அவ்வாறு, பிணை கிடைக்காமல் உரிமைக்காக போராடி சிறையில் அவதிப்பட்டு கொண்டு இருப்பவர்களாக உமர் காலித் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலரகள் பலர் உள்ளனர். அதில் அண்மையில் விடுதலையாகி உயிரிழந்த மனித உரிமை ஆர்வலர், பேராசிரியர் சாய்பாபாவும் ஒருவர்.
இவ்வாறான சூழலில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விசுவநாதன் அமர்வு, தனி உரிமையின் தேவையை உணர்த்தியுள்ளது.
அமர்வில் நீதிபதிகள் குறிப்பிட்டதாவது, “இந்தியாவில் பிணை கோரி தொடரப்படும் வழக்குகளை, ஆண்டுகளாகியும் நிலுவையில் போடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. அது தனிமனித உரிமைகளுக்கும் எதிரானது.
பிணை வழங்காமல் ஒரு நாள் தாதிப்பது கூட, தவறு தான். இது போன்ற நடவடிக்கைகளை நாம் என்றும் பழக்கமாக்கி விடக்கூடாது” என தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டிப்பு, பிணை கிடைக்காமல் தனி உரிமை மறுக்கப்பட்டு சிறையில் வாடும் உரிமைப்போராளிகளுக்கான குரலாய் அமைந்திருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.