வெனிசுலா தலைநகர் கரகாசில் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பாசிசத்திற்கு எதிரான உலக நாடாளுமன்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசனுக்கு வெனிசுலா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், வெனிசுலா நாட்டில் நடக்கவுள்ள பாசிசத்துக்கு எதிரான மாநாட்டில் கலந்து கொள்ள மார்க்சிஸ்ட் எம்.பி. சிவதாசனுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் அனுமதிக்கு பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த போதிலும், மாநாட்டில் கலந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தபோதிலும் பாசிசத்திற்கு எதிரான வெனிசுலா மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுத்தது அதிர்ச்சியளிப்பதாகவும், இது அப்பட்டமான உரிமைகள் மீதான தாக்குதல் என்று சிவதாசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.