இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, மூச்சு சிக்கல்களால் துன்புறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், சுமார் 40% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதனால், டெல்லி அரசாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தாலும் பல்வேறு மாசுத்தடுப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த அக்டோபர் 24ஆம் நாள், “டெல்லி காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக, ஜனவரி 1 வரை, டெல்லியின் எந்த பகுதியிலும் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை ஏற்று, பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்ததோடு மட்டுமல்லாமல், நீர் பாய்ச்சல் மூலம் காற்றின் திடத்தை குறைப்பது போன்ற, பல்வேறு மாசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது டெல்லி அரசு.
எனினும், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள காற்று தரத்தின் பட்டியலில், டெல்லிக்கு ‘மிகவும் கவலைக்கிடமான’ நிலை தான் நீடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், டெல்லி மக்கள் என்ன செய்வதென்று அறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லி தலைநகரில் காற்று மாசு உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.