மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதனால் ஆதாரை அனைத்துக்கும் கட்டாயமாக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்க, அரசின் நலத்திட்டச் சலுகைகள் பெற ஆதார் அட்டையில் முகவரி முக்கியமானதாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பள்ளி கல்லூரிகளில் சேர்க்கைக்கும் பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரிக் கணக்கு இப்படிப் பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆதார் அட்டையை வயது, பிறந்த தேதிக்கான அத்தாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சுற்றறிக்கை எண் 8 - ஆதார் ஒரு நபரின் அடையாளத்துகான ஆதாரம் மட்டுமே, வயதுக்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் டெல்லி, மும்பை, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்கள் ஆதார் அட்டையை வயதுக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள நிலையில், அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மேலும் ஆதாருக்கு பதில், கல்வி சான்றிதழை பிறப்பு தேதியை ஆதாரமாக எடுத்துக் கொண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.