ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் சமூகநீதியைத் தவிர்த்து, முதலாளித்துவத்திற்கு முக்கியத்துவம் தரும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்பதை மீண்டும் உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறது உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) 2024.
ஐரோப்பிய அரசு சார்பற்ற அமைப்புகளால் ஆண்டுதோறும், உலக அளவில் பசிப்போக்கும் நாடுகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதன் வழி, எந்தெந்த நாடுகள் உண்மையாகவே, மக்களின் பசியைப் போக்குகின்றன, எந்தெந்த நாடுகள் பசியைப் போக்குவதாக வெறும் காட்சிப்படுத்துவதை மட்டுமே செய்து வருகின்றன என்ற கண்ணோட்டம் வெளிப்பட்டு வருகிறது.
அவ்வாறு வெளிப்படும் கண்ணோட்டத்தில், இந்தியாவின் நிலை கடும் விமர்சிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது. உலக அளவில் 2ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா, உலகின் 2ஆவது மிகப்பெரிய இராணுவம் கொண்ட நாடு இந்தியா, உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடக்கிற நாடு இந்தியா என பல்வேறு சிறப்புகளை மட்டுமே வெளிப்படுத்தும் இந்திய அரசு, முதலாளித்துவத்தால் மக்கள் சந்திக்கும் சிக்கல்களை வெளிப்படுத்த தவறி வருகிறது.
குறிப்பாக, இந்தியாவில் இல்லாத கனிம வளங்கள் இல்லை என்ற போதிலும், இந்தியாவின் முக்கிய மற்றும் முதன்மை தொழிலாக உழவுத்தொழில் இருக்கின்ற நிலையிலும், பசி மட்டும் தீர்ந்த பாடில்லை என்பதே, ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய பட்டினி குறியீடு விளக்குவதாய் அமைந்துள்ளது.
காரணம், இந்திய மக்களுக்கு உணவளிக்கும் முதன்மை தொழிலான உழவுத்தொழில் செய்யும் உழவர்களுக்கு, அரங்கேறும் கொடுமைகளே.
140 கோடி மக்களுக்கு உணவாதாரத்தை வழங்கிடும், உழவர்களுக்கு குறைந்த ஆதரவு விலை பெறுவதே, அவர்களின் வாழ்வின் மிகப்பெரிய போராட்டமாய் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோடி கடன், முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு, உழவர்களின் வாழ்வியலுக்கான கடனை தள்ளுபடி செய்ய தயக்கம் காட்டி வருகிறது.
இதனால், கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் சுமார் 1.12 லட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை சிடாடிசுடா (Statista) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உழவர்கள் தற்கொலை செய்யப்படுவதால், உழவர்களின் குடும்பமும் வறுமையில் வாடுகிறது. அதே வேளையில் கொள்முதல் குறைக்கப்பட்டு, விலைவாசியும் அதிகரிக்கிறது. விலைவாசி அதிகரிக்கும் வேளையில், தங்களுக்கான உணவை பணம் கொடுத்து வாங்கும் நிலையை, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் தவரவிடுகின்றனர்.
இதனால், வறுமையோடு, பசியும் அதிகரிக்கிறது. இதற்கிடையே அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்படுகிற அதிகப்படியான வரி வேறு. மக்களுக்கான சுமைகளை ஒழிக்க உருவாக்கப்படும் மக்களாட்சி அரசு, மக்களுக்கான சுமைகளை கூட்டும் அரசாகவே செயல்பட்டு வருகிறது.
இன்றளவும், இந்தியாவில் வாழும் 50 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள், தங்களது பசியைத் தீர்க்க, மற்றவர்களை நாடும் நிலை நீடித்து தான் வருகிறது. இது போன்ற சூழலை முற்றிலுமாக புறந்தள்ளி, ஆயிரக்கணக்கான கோடிகளில் பிரம்மாண்ட திருமணங்களை முன்னெடுக்கவும், பெரும் நிறுவனங்களுக்கு வரிகளை குறைக்கவுமே ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.
இவை ஒருபுறம் இருக்க, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (NRC) என்கிற பெயரில் பல லட்சம் மக்களின் குடியுரிமையை பறித்து, இருக்கின்ற சலுகைகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயலையுமே முன்னெடுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இதைக் கடந்து, மதப்பிரிவினை, கலவரம், இடஒதுக்கீடு ஒழிப்பு என பா.ஜ.க முன்னெடுக்கும் கீழ்த்தர அரசியல் ஏராளம். இதுவே, மக்கள் பசியில் துவண்டு கிடக்க முக்கிய காரணங்களாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் கருத்தியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என பலவகையான சிக்கல்களை சந்தித்து வரும் நிலையிலும், இந்தியாவை ஒப்பிடுகையில், அதிகப்படியான மக்களுக்கு உணவை உறுதிசெய்து வருவது குறிப்படத்தக்கது.