சத்தீஸ்கர் மாநிலத்திற்குட்பட்டது சோப்ரா கிராமம். இந்த கிராமத்தில் புதிதாக SBI வங்கி கிளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரபலமான வங்கி என்பதால் கிராம மக்கள் வங்கி கணக்கை தொடங்கி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் புதிதாக தொடக்கப்பட்ட வங்கி குறித்து, மற்றொரு கிராமத்தில் செயல்பட்டு வந்த SBI வங்கி கிளை மேலாளர் உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போதுதான் அந்த கிராமத்தில் SBI வங்கி தொடங்கப்பட வில்லை என்றும் SBI பெயரில் போலி வங்கி செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு சென்று விசாரணை செய்தபோதுதான், 10 நாட்களாக போலியாக வங்கி செயல்பட்டுவந்தது தெரியவந்தது. மேலும் ரூ. 2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு வங்கியில் 4 பேருக்கு வேலை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மோசடி குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த போலி வங்கிக்கு பின்னால் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.