இந்தியா

"தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்" : டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்" :  டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று புதுதில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.

பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

டெல்லி ஊடகவியலாளர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திப்பதற்காக நேற்று டெல்லிக்கு வந்தேன். இன்றைக்கு காலையில் பிரதமர் அவர்களை சந்தித்தேன். இந்த சந்திப்பு, இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமர் அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பு பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமர் அவர்களுடைய கையில்தான் இருக்கிறது.

ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று மூன்று முக்கியமான கோரிக்கைகளை நான் அவரிடத்தில் வலியுறுத்தி இருக்கிறேன். தலைப்புச் செய்திகளாக நான் சொன்னாலும், அதனுடைய சாரம்சம் முழுமையாக, தெளிவாக எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் எழுதி அவரிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். தலைப்புச் செய்திகளாக நானும் உங்களிடத்தில் சொல்ல விரும்புவது,

முதலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்டப் பணிகளையும் செயல்படுத்தவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.

இந்த இரண்டாவது கட்டப் பணிகள் காலதாமதமின்றி மேற்கொள்வதற்காக, 2019-ஆம் ஆண்டு, மாநில அரசின் நிதியிலிருந்தும், கடன் பெற்று பணிகளை துவக்கி, பின்பு ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டு, 2020-ஆம் ஆண்டில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டது.

ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள், இதற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-2022-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தார்கள். இதை தொடர்ந்து, ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம், இதற்கான ஒப்புதலை, 2021-ஆம் ஆண்டே வழங்கியது. இந்தப் பணிகளுக்கு, இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தாலும், இதுவரைக்கும் ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால், இதற்கான ஒன்றிய அரசின் நிதி, தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன்.

"தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்" :  டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

இரண்டாவதாக, ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதியையும், தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு நிதியையும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ், இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு வழங்க வேண்டியது 2,152 கோடி ரூபாய். இந்தத் தொகையில், முதல் தவணை இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை.

இந்தத் திட்டத்தின்கீழ் கையெழுத்திடப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை, ஏற்கனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்திருக்கிறது. செயல்படுத்திக் கொண்டும் வருகிறது.

காலை உணவு திட்டம் போல, மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாத பல முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால், தேசியக் கல்விக் குழுவின் ஒரு விதிமுறையான மும்மொழிக் கொள்கையை பின்பற்ற தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் மீதும், மொழித் திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதற்கான ஷரத்து இல்லை. எனவே, இந்த ஒப்பந்தம் திருத்தப்படவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் சொல்லிக் கொண்டு வருகிறோம்.

இந்தச் சூழ்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத காரணம் காட்டி, ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம். உடனடியாக இந்தத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறோம்.

மூன்றாவதாக, தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம். Detail-ஆக சொல்லியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், மீன் பிடிக்கப் போகும் நம்முடைய மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து துன்புறுத்துகிறார்கள். இதுபற்றி பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நான் பலமுறை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும், இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் மிக அதிக அளவு எண்ணிக்கையில், இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கிறது.

191 மீன்பிடிப் படகுகளும், 145 மீனவர்களும் தற்போது இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக நம்முடைய ஒன்றிய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி, இந்த மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகளையும் மீன்பிடிக் கருவிகளையும் உடனடியாக விடுவித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெற இருக்கும், இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டுக்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

இலங்கையில், புதிய அரசு அமைந்திருக்கிறது. புதிய அதிபரிடம் இந்தக் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசு வைக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.

இந்த மூன்று முக்கிய கோரிக்கைகளையும் கவனமாக கேட்டுக்கொண்ட மாண்புமிகு பிரதமர் அவர்கள், இதுபற்றி விரைவாக கலந்தாலோசித்து முடிவுகளை தெரிவிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க தேவையான இந்த முக்கிய கோரிக்கைகளை பிரதமர் அவர்கள் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டிற்கு ஏராளமான கோரிக்கைகள் இருக்கிறது. அதையெல்லாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்; தொடர்ந்து வலியுறுத்தப் போகிறோம். இந்த மூன்று கோரிக்கைகளை மையப்படுத்தித்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- உங்கள் அமெரிக்க பயணத்திற்கு டெல்லி தமிழ் பத்திரிகையாளர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கட்டப்பட்டு வரும் புதிய தமிழ்நாடு இல்லத்தில் கலைஞர் நினைவாக எங்களுக்கு ஒரு புதிய அறை ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

"தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்" :  டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

முதலமைச்சர் பதில் : நன்றி, உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

கேள்வி : கடந்தமுறை பிரதமர் அவர்களை சந்தித்த போது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது, இந்த முறை சந்தித்த போது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது? கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாரா?

முதலமைச்சர் பதில் : அவர் பிரதமராக சந்தித்தார். நான் முதல்வராக சந்தித்தேன், அவ்வளவுதான். அனைத்து கோரிக்கைகளையும் பொறுமையாக கேட்டறிந்தார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 15 நிமிடம் தான் நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியிருக்கிறோம். இதிலிருந்து சந்திப்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறியலாம்.

கேள்வி : தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்த..

முதலமைச்சர் பதில் : அது தொடர்பாக பிரதமர் அவர்களிடம் விளக்கமாக கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். துறையினுடைய அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களிடத்திலும் பேசியிருக்கிறோம்.

கேள்வி: புதிய கல்வி கொள்கை பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களா. கையெழுத்து போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா. பிரதமர் அதற்கு என்ன பதில் சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சர் பதில் : பிரதமர் அவர்கள் கலந்துப் பேசி சொல்வதாக கூறியுள்ளார்.

கேள்வி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

முதலமைச்சர் பதில்: நான் தான் நேற்றே சொல்லியிருக்கின்றேனே. துணிச்சலோடு இருந்திருக்கிறார். அவரின் துணிவை நாங்கள் பாராட்டுகிறோம். நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டத்தில் நீதிமன்றத்தில் போராடி அவர் விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கின்றது. அவருக்கும் இருக்கிறது.

கேள்வி : பிரதமருடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அப்படி இருக்கிறதா?

முதலமைச்சர் பதில் : நாங்கள் எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், அதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி – திருமதி சோனியா காந்தி அவர்களை சந்தித்தது தொடர்பாக...

முதலமைச்சர் பதில் : மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.

கேள்வி : காவிரி விவகாரம் குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்களே.

முதலமைச்சர் பதில் : ஏற்கனவே, அது நீதிமன்றத்தில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories