2021 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது கார்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநருக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளன. இந்த மனுவை தொடர்ந்து, சித்தராமையாவுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.பின்னர் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, இது பா.ஜ.கவின் சதி என துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பேட்டி கொடுத்துள்ள டி.கே.சிவக்குமார், ”முதலமைச்சர் எந்த தவறும் செய்யவில்லை. இது பா.ஜ.கவின் சதி. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் நல்ல பணிகளை பா.ஜ.கவால் ஜீரணிக்க முடியாமல். அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார்.