இந்திய அளவில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிற நீட் தேர்வு, நெட் தேர்வு, மத்தியப் பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வு என அனைத்து தேர்வுகளில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
இதனால், நேர்மையாக தேர்வெழுதி தேர்ச்சி பெறும் தேர்வர்களும், முறைகேடுகளில் ஈடுபடுபவர்களால், பணி நியமனம் அல்லது கல்லூரி சேர்க்கையில் வாய்ப்பிழக்க நேரிடுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், புதிய முயற்சியாக இணைய முடக்கத்தை அறிவித்துள்ளது ஜார்க்கண்ட் அரசு.
ஜார்க்கண்ட் மாநில அரசின் சார்பில் நடத்தப்பட இருக்கும் அரசுப் பணியாளர்கள் தகுதித் தேர்வில், முறைகேடுகள் அரங்கேறாத வகையில், தேர்வு மையங்கள் அமைந்துள்ள 24 மாவட்டங்களில் செப்டம்பர் 21, 22 நாட்களில் இணையம் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில், சுமார் 6.40 இலட்சம் தேர்வர்கள் பங்குபெற இருக்கும் நிலையில், 823 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, சமூக ஊடகங்கள் வழி எவ்வித வினாத்தாளும், அல்லது இதர முக்கிய கேள்விகளோ வெளியாகாத வகையில், இணையத்தை முடக்க முடிவெடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
இம்முடக்கம், மேற்குறிப்பிட்ட இரு நாட்களின் காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தான் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.