நீட் தேர்வில் ஏற்கவே ஏராளமான முறைக்கேடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போதுடெல்லி, உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் புதிய மோசடிகள் நடைபெறுவது அம்பலமாகி இந்த விவகாரத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை குறி வைத்து இந்த புதிய மோசடிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நீட் தேர்வு எழுதிய டெல்லியைச் சேர்ந்த மாணவனை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏதேனும் ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவ சேர்க்கைக்கான இடம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.
மேலும் இதற்கு முன்பணமாக ஏழரை லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு பணம் செலுத்தினால் மூன்றாம் கட்ட கலந்தாய்வின் போது இடம் கிடைபோது உறுதி என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த மாணவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் குமார் கௌரவ் என்கிற பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரது மனைவி பல் மருத்துவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் டெல்லி, நொய்டா, லக்னோ போன்ற இடங்களில் அலுவலகம் அமைத்து இவர்கள் மாணவர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது. 30 முதல் 40 லட்சம் ரூபாய் வழங்கினால் மருத்துவ இடம் பெற்று தருவதாக கூறி பலரிடம் வசூல் நடத்தியுள்ளனர். இதுவரை 12க்கு மேற்பட்ட மாணவர்களிடம் பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் தற்போது மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.