ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தங்களின் தீரமிக்க போராட்டங்களை நடத்தினர். இவர்களின் வலுவான போராட்டத்தால் திக்குமுக்காடிய மோடி அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது.
இதையடுத்து குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பரிசீலனை செய்வதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால் இதுவரை மோடி அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த பிப்.13 ஆம் தேதி பேரணியாக சென்றனர். அவர்களை ஷம்பு எல்லையில் பா.ஜ.கவின் போலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு பின்னர் விவசாயிகள் ஷம்பு எல்லையிலேயே தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறாரகள். இவர்களது போராட்டம் 200வது நாளை கடந்துள்ளது. இந்நிலையில் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய,”200 நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவளிக்காமல் எங்களை போன்ற விளையாட்டு வீரர்கள் போட்டியிட முடியாது. இந்திய அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். அரசாங்கம் தன் தவறை கடந்த முறையே ஒப்புக் கொண்டது. எனவே குறைந்தபட்ச ஆதார விலை போன்ற வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.